செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேரும்போது உண்டாகும் பலன்கள்!

செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேரும்போது எந்தவிதமான பலன்கள் ஜாதகருக்கு ஏற்படுகின்றது என்பதைப் பற்றி பார்ப்போம். 
செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேரும்போது உண்டாகும் பலன்கள்!
Updated on
3 min read

செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேரும்போது எந்தவிதமான பலன்கள் ஜாதகருக்கு ஏற்படுகின்றது என்பதைப் பற்றி பார்ப்போம். 

செவ்வாய் – புதன் சேர்க்கை

புதன் புத்திகாரகனல்லவா? செவ்வாயுடன் சேரும்போது புத்திக்கூர்மை அதிகமாகிறது. சாதுரியமாகப் பேசக்கூடியவர். அதே சமயத்தில் துடுக்காக மற்றவர்களைப் பேசி அவர்களைக் காயப்படுத்தாது இருக்க வேண்டும்.

செவ்வாய் - புதன் 120 பாகை, 60 பாகை, 30 பாகைப் பார்வை

மனத்தளவில் உற்சாகமும் தன் நம்பிக்கையும் கொண்டவர். வாக்குச் சாதுரியம் கொண்டவர்; மிகவும் கெட்டிக்காரர். கணிதத்தில் வல்லமை படைத்தவர்; பேச்சாற்றல் படைத்தவர்.

180 பாகைப் பார்வை, 90 பாகைப் பார்வை, 45 பாகைப் பார்வை

இது ஒரு கெட்ட பார்வையாதலால், பலன்களும் கெடுதலாகவே இருக்கின்றன. பிறறைக் காயப்படுத்தும் அளவுக்குப் பேச்சு இருக்கும்; வேகமாகப் பேசக்கூடியவர்; எழுத்தாலும் பிறர் மனம் புண்படக்கூடியவராக இருப்பர்; பிறரின் வீண் பழிச்சொல்லுக்கு சில சமயம் ஆளாவர்; தம்மைக் காட்டிலும் தரத்தில் தாழ்ந்தோருடன் சண்டையிடும் குணம் உள்ளவர். பிறரைப் பழிவாங்கும் எண்ணமும் கொண்டவராக இருப்பர்; சகோதரரை சிலர் இழப்பர். ஆராய்ச்சியில் ஈடுபடும் அளவுக்குக் கெட்டிக்காரத்தனம் உள்ளவர்.

அடுத்ததாக, சூரியனுடன் செவ்வாய் உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பார்ப்போம்.

செவ்வாய் - சூரியன் சேர்க்கை

மிகுந்த திட உள்ளம் கொண்டவர்; சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்; பிறறை அடக்கியாளும் குணம் கொண்டவர்; தகப்பனாரிடம் இருந்து விலகி இருக்கும்படியான நிலை இருக்கும்; தான் என்னும் எண்ணம் கொண்டவர்; சளி சம்பந்தமான தொந்தரவுகளால் பாதிக்குப்படுபவர். இந்தப் பார்வையால் நல்லதும் கெடுதலும் இருக்கின்றன.

120 பாகைப் பார்வை, 60 பாகைப் பார்வை, 30 பாகைப் பார்வை

நல்ல ஆரோக்கியமான உடல் கொண்டவர்; மிக்க தைரியம் கொண்டவரும்கூட; மற்றவர்களை தனக்குக் கீழ் இருக்கச் செய்வர்; அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களோ அல்லது ராணுவத்தில் இருப்பவர்களோ அதில் மிகுந்த முன்னேற்றம் காண்பர்; பெண்களுக்கு உயர்ந்த இடத்தில் திருமணம் நடக்கும்; பெற்றோரிடமிருந்து சொத்துகள் கிடைக்கும். உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம். இது ஒரு பெண்ணின் ஜாதகம்.

இதில் செவ்வாயும் சூரியனும் 60 பாகைப் பார்வையில் இருக்கின்றனர். இவர் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம். பட்டதாரியான இவர் பணிபுரிவது ராணுவத்தில். மிக்க தைரியசாலி. ராணுவத்தில் உயர்ந்த பதவி வகிப்பவர். இவருக்குக் கீழ் பலர் பணிபுரிகின்றனர். இவர் தன் பெற்றோர்களுக்கு ஒரே பெண். அவர்களின் சொத்துக்கு ஒரே அதிபதி. நாம் மேலே கூறிய பலன்கள் எல்லாம் அப்படியே இவருக்குப் பொருந்துகின்றன.

180 பாகைப் பார்வை, 90 பாகைப் பார்வை, 45 பாகைப் பார்வை

எதிலும் பதற்றப்படாமல் இருப்பது அவசியம்; உஷ்ணம் சம்பந்தமான நோய்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவரின் அவசரப்பட்ட முடிவுகளாலும், தன் மனைவி அல்லது கணவராலும் அல்லது விபத்தின் மூலமாகவோ இழப்பைச் சந்திப்பார்கள். பெண்களுக்கு மனத்துக்கு ஏற்ற கணவன் வாய்க்கமாட்டார்; திருமண வாழ்க்கை நன்றாக அமையாது; கணவருடன் அடைக்கடி சண்டையிடுவர்; நல்ல குணமுள்ள கணவன் வாய்க்கமாட்டார்.

பெண்களின் ஜாதகத்தில் சூரியனானவர் சனியாலோ அல்லது யுரேனஸாலோ கெட்டபார்வையால் பார்க்கப்பட்டால், அவரின் தகப்பனாரோ அல்லது கணவரோ அல்லது புத்திரனையோ இழக்க நேரிடும். இந்த விதி சரியாக இருக்கிறதா என்பதற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம். இது ஒரு பெண்ணின் ஜாதகம்.

இதில் சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், அவர் சனியால் பார்க்கப்படுகின்றார். சனியும் சூரியனும் 180 பாகை கெட்ட பார்வையில் வருகின்றனர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே இவர் தந்தை இறந்துவிட்டார். ஆக, சூரியனை சனியோ அல்லது யுரேனஸ் கிரகமோ கேட்ட பார்வையால் பார்த்தால் தகப்பனாரை இழப்பர் என்ற விதி உண்மையாகிவிட்டது.

யுரேனஸ் என்ற கிரகம் நமது பாரம்பரிய ஜோதிடத்தில் இடம் பெறவில்லை. மேலை நாட்டு ஜோதிடத்தில்தான் உள்ளது. சனிக்கு அடுத்தபடியாக சூரியனைச் சுற்றும் கிரகம் இது. இந்தப் பெண்ணுக்கு வாய்த்த கணவனும் நல்ல குணம் கொண்டவரல்ல; சனி, சூரியன் கெட்ட பார்வையால் உண்டாகும் பலன்களை எல்லாம் இந்த ஜாதகர் அனுபவித்துவிட்டார்.

அடுத்து செவ்வாயும், சந்திரனும் பார்க்கும் பார்வையால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம்.

செவ்வாய், சந்திரன் உண்டாக்கும் பார்வையின் பலன்கள்

செவ்வாய் - சந்திரன் சேர்க்கை

சற்று முன்கோபியாக இருப்பார். எதிலும் அவசரப்பட்டு செயல்படுபவராக இருப்பார். தன் நாவை சற்று அடக்கிக்கொள்ளுதல் இவருக்கு நல்லது. இதை நமது பாரம்பரிய ஜோதிடத்தில் சந்திர மங்கள யோகமென்று கூறுவார்கள்.

செவ்வாய், சந்திரன் 120 பாகை, 60 பாகை, 30 பாகைப் பார்வை

இது ஒரு சுபப்பார்வை. இவர்கள் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். தன் உழைப்பால் உயர்பவர்கள். மிகவும் நன்றாக, தைரியமாக பழகக்கூடியவர்கள்; தாய் மூலம் அனுகூலம் அடைபவர்கள்; திருமணத்தால் உயர்பவர்கள்; வாழ்க்கையின் பிற்பகுதி வளமை மிக்கதாக இருக்கும்.

செவ்வாய், சந்திரன் 180 பாகை, 90 பாகை, 45 பாகைப் பார்வை

இது ஒரு துரதிஷ்டமான பார்வை; மிகவும் அவசரப்பட்டு, யோசிக்காமல் முடிவு எடுப்பவர்; துர்க்குணம் பிடித்தவர்; கோபத்தை இவர் கட்டுப்படுத்துதல் அவசியம். மற்றவருக்கு அடங்கி இருப்பது இவரால் முடியாத காரியம்; தாயருக்கும் இவருக்கும் ஆகாது; ஸ்திர சொத்துகளால் பிரச்னைகள்; பெண்களாக இருந்தால் அவர்கள் மார்பகங்களில் பிரச்னை. பெண்கள் ஜாதகத்தில், சந்திரன் பெண்களின் மார்பகங்களைக் குறிப்பவர். ஆகவே, செவ்வாயின் கெட்ட பார்வை அங்கு பிரச்னைகளைக் கொடுக்கிறது; பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணைவர் அமைவர்; திருமணத்தில் ஏமாற்றம்.

நாம் உதாரணத்துக்கு சில ஜாதகங்களைப் பார்ப்போம். முதலில் சந்திரனும், செவ்வாயும் நற்பார்வை பெற்ற ஒருவரின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

இவருக்கு செவ்வாயும் சந்திரனும் 60 பாகைப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள். நாம் மேலே கூறிய பலன்கள் எல்லாம் இவருக்கு அப்படியே நடந்தது. வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதி வெகு சிறப்பாக அமைந்தது.

அடுத்த வாரத்தில் சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் உண்டாக்கும் பலன்களைப் பார்ப்போம்.

– ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com