

தேவர்களின் இரவு பொழுதான தக்ஷிணாயனம் முடிந்து உத்திராயணம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடைபெறவில்லை என்பதே ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்து இருப்பவர்கள் பலர். இந்த தை மாததிலாவது ஒரு சுபநிகழ்ச்சி நடக்காதா எனத் தவிக்கும் பெற்றோர்களின் கண்ணீரை துடைக்கவே இந்த கட்டுரையாகும்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அதற்கு கணவன் - மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
திருமண தடை ஏற்படுத்தும் தோஷங்கள்
செவ்வாய் தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு - கேது தோஷம்
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும்.
உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
மாங்கல்ய தோஷம்
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதார யோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.
களத்திர தோஷம்
திருமணம் தாமதம் ஆவதற்கு காரணமான களத்திரதோஷம் தரக்கூடிய சில கிரகஅமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும்.
இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது, கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தால் கட்டாயம் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.
புணர்ப்பு தோஷம்
ஓருவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனும் கர்மகாரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்னை ஏற்படுத்தும் தோஷமாகும். இன்றைய சூழ்நிலையில் பெண்களை விட ஆண்களே திருமண தடையால் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலை நிலவுகிறது. முக்கியமாக திருமணத்திற்கு பெண்கள் குறைந்து வருவதால் ஆண்களின் நிலை பரிதாபமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பல குடும்பங்களில் வம்ச விருத்தி என்பதே இல்லாத நிலை ஏற்படும்.
இது போன்ற திருமண தோஷங்களுக்கு பல பரிகாரங்கள் செய்தும் நன்மை ஏற்படவில்லையே ஏன் என்று ஏங்குபவர்களுக்காகவே தனது அபய ஹஸ்தத்தை காட்டி அருள் புரிகிறாள் ஸ்ரீ கல்யாண காமாட்சி.
கல்யாண வரம் தரும் கல்யாண காமாட்சி
கடையேழு வள்ளல்களில் அதியமான் ஆட்சிபுரிந்த `தகடூர்' தான் இன்றைய தருமபுரி. அன்னை, கல்யாண காமாட்சியாக எழுந்தருளியுள்ள தலம் `கோட்டை காமாட்சியம்மன் கோயில்' என்றுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள். தர்மபுரியில் சனத்குமார நதிக்கரையில் நும்பள பல்லவ மன்னர்களால் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மல்லிகார்ஜூனசுவாமி, கல்யாண காமாட்சியம்மன் கோயில். அரிதிலும் அரிதான குடவேல மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில் இது. கன்னிராசியில் அஸ்த நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய தலமும் இதுவே. ஐராவதம், ராமர் துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.
தாமரை மலரைப் போல 48 இதழ்கள், மூலைகள், 44 தளங்கள், 43 கோணங்கள் கொண்ட அந்தக் கருவறையைத் தாங்கி நிற்பவை பதினெட்டு யானைகள். 18 யானைகளின் மத்தகங்கள் மீது நிற்பது அன்னையின் கருவறை. பல்லவர் கால கோயில் என்பதால் சிற்பக்கலைக்கும் இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது. கோயிலை சுற்றிலும் ராமாயணம் முதல் உத்திரராமாயணம் வரை பூமிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் நுண்ணிய சிற்பவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்த வகைச் சிற்பங்களை இந்த கோயிலில் மட்டுமே காணமுடியும் என்பது தனிச்சிறப்பு. கோயில் மகாமண்டபத்தின் மேற்கூரை விதானத்தில் வட்டவடிவமான அமைப்பில் இடம் பெற்றுள்ள அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சியில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு செய்வது போல், இங்குள்ள எமதர்மராஜனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. முன்பொரு காலத்தில் பிருங்கி மகரிஷி, சனத்குமார நதிக்கரையில் அமர்ந்து அன்னையை நோக்கி தவமிருந்தார். அவரது வேண்டுகோளின் படி சிவசக்தி ஐக்கியமாக இறைவனும், இறைவியும் காட்சியளித்தனர். பிருங்கி முனிவருக்கு அன்னை திருவருள் புரிந்ததை ஒட்டியே உலகம் முழுவதும் கௌரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், கௌரி நோன்புக்கு வித்திட்ட கோயில் என்ற பெருமையும் கல்யாண காமாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. இந்த கோயிலில் சூலினி ராஜதுர்க்காம்பிகை எருமைத் தலையும், மனித உடலும் கொண்டு காட்சியளிக்கிறார்.
சூலினி தரிசனம் துக்கங்கள் போக்கும்
இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’ எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள். சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருளுகிறாள் சூலினி.
இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள். சூலினி ராஜ துர்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட மகிஷன் கத்தி, கேடயங்களுடன் கீழே விழுந்திருப்பது போலவும், மகிஷனின் கொம்பை ஒரு கரத்தில் பற்றியும், இடது காலால் மகிஷனின் கழுத்தை மிதித்தபடியும் சம்ஹாரத் தோற்றத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவரையில் கிழக்கு நோக்கி இருப்பது இந்தக் கோயிலின் சிறப்பாகும்.
ஜோதிட ரீதியாக ராகுக் கிரகத்தின் மேலாண்மைத் தெய்வம். நாட்டிலமைந்த ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி வடிவங்களிலேயே பழமையாக இங்கு மஹிஷாசூரன் எருமை தலையும் மனித உடலும் கொண்டு வீழ்ந்திருக்க சூலினி தெய்வம் மூவிலை சூலத்தால் மஹிஷனை வதம் புரியும் காட்சி அபூர்வமானது. வளர்பிறை அஷ்டமித் திருநாள் மட்டும் அபிஷேக் தரிசனத்தில் வதம் புரியும் நிலையை பக்தர்கள் இத்தல மஹிமையாக காணலாம். பல்லாயிரம் ஏனைய ஸ்ரீதுர்க்கா வடிவங்கள் மஹிஷ வதத்திற்கு பின் தலை மீது நின்று திருவருள் புரியும் அருட்கோலமே. சந்தனக்காப்பில் வருடத்தில் இந்நாளில் மட்டுமே நாம் அம்பிகையை தரிசிக்கலாம்.
சனிதோஷம் போக்கி சந்தோஷம் தரும் ஸ்ரீ சக்ர கால பைரவர்
இங்குள்ள பைரவர் சந்நிதி விசேஷமானது. வாகனத்துடன், சூரிய சந்திரர் இருபுறமும் விளங்க, கோயிலின் குபேர பாகத்தில் எழுந்தருளியுள்ளார். 09-01-2018 செவ்வாய்கிழமை மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பல நூற்றாண்டுகளை கடந்த தமிழக சைவ சமயத்தைச் சார்ந்த திருக்கோயில்களில் புடைப்புச் சிற்பமாக இன்றும் பல்லாயிரம் பக்தர்களால் வழிபாட்டில் வணங்கப்படும் மிக பழமையான மூர்த்தி. நக்ஷத்திர வரிசையில் "சித்திரை" நக்ஷத்திரத்திற்கு உரியவராவார். தொன்மை காலங்களாக ஜோதிட சாஸ்திரப்படி சனிக்கிரக குருவாக 3×3 காலச் சக்ர வடிவ யந்திரத்தில் சூர்ய, சந்திரர்களுடன் திருவருள் புரிபவர்.
சித்தஸ்வாதீனம் போக்கும் சித்தேஸ்வரர்
மூன்று கோயில்களில், வடபுறம் அமைந்துள்ள சன்னதியே `சித்தேசுவரர்' என இன்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதி. சந்திரனுக்கு அருள் செய்தவர். மனக்குழப்பம் நீங்க, உள்ளத் தெளிவு பெற, சோமேசுவரரை வழிபடுதல் பயன்தரும். ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது.
இத்தனை அற்புதமான தலத்தை பற்றி திரு செல்வ முத்துக்குமார ஸ்வாமி சிவாச்சாரியார் அவர்கள் கூறுகையில் மனம் பூரிப்பதோடு மட்டுமல்லாமல் நாமும் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுகிறது.
என்ன நேயர்களே! நாமும் இந்த கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெறுவதோடு தோஷங்கள் நீங்கி சந்தோஷத்தை மட்டும் தக்க வைத்துக்கொள்ள சென்றுதான் பார்ப்போமே!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.