இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்!

கோயில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண்கோடி வேண்டும். பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் நடைபெறும்.
இந்த சிவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் நடக்குமாம்!

கோயில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண்கோடி வேண்டும். பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று தான் அன்னாபிஷேகம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சிவாலயத்தில் மட்டும் தினசரி பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுமாம். அப்படிப்பட்ட அதிசய கோயில் எங்குள்ளது என்று தெரியுமா? 

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என்ற பெயரிலும், தாயார் பார்வதி தேவியாகவும் இங்கு அனைவருக்கும் அருள்பாலிக்கின்றனர். 

விஷத்தன்மையுடைய கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இங்குள்ள இறைவனுக்கு சுக்கு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த "சுகண்டித சர்க்கரை" என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள். சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு 'ராஜ வைத்தியர்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்பாள் பார்வதி இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். 

இங்குள்ள சிவன் ஈசானிய (வடகிழக்கு) திசையைப் பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காகச் சற்றே விலகியிருக்கிறது. மேலும், இந்தக் கோயிலில் உள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். இங்குத் தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள் வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கின்றனர். திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு. 

வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிருதம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். வெற்றிலை மற்றும் வில்வயிலையை மாலையாக சாத்துகிறார்கள், முக்கியமாக விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள இறைவனை வேண்டிக்கொள்ள அவர்கள் விரைவில் குணமடைவதாக கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com