கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 6

மகாராஷ்டிர தேசத்தில் எச்சதேவன் என்னும் பிராமணன் அரிய தவங்களும் வேள்விகளும் செய்து....
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 6

மகாராஷ்டிர தேசத்தில் எச்சதேவன் என்னும் பிராமணன் அரிய தவங்களும் வேள்விகளும் செய்து சிவபெருமான் திருவருளினால் ஒரு மைந்தனைப் பெற்றான். அவனுக்குச் சுமதி என்று பெயர் வைத்தனர். 

அப்புதல்வன் அப்பெயருக்கேற்ப வேதம் முதலிய கலைகளை ஓதியுணர்ந்து, அதன் பயனாகிய ஒழுக்கத்தோடு வளர்ந்து, பதினாறு வயதை அடைந்தான். அவன் சிவதாமா என்னும் மறையவன் மகளை மணந்து வாழுந்து வரும்போது, யாத்திரைச் செய்ய எண்ணம் கொண்டு திருப்பருபதத்தை அடைந்து, அங்கே சிவபெருமான் கொண்டருளும் மகோற்சவத்தைத் தரிசித்து வசிக்கும் நாளொருநாளில்.....

திருவீதியின் வளத்தை நோக்கும்படி புறப்பட்டுச் சென்றான். தீவினைப் பயனால் பொதுமாதர் வீதி வளத்தைக் கண்டு செல்லும்போது, சூரியனது கதிர் வெப்பத்தினால் அயர்வுற்று, ஆகாயத்தை அளாவிய பந்தர் (பந்தல்) பொருந்திய மூன்றிலையுடைய இந்திரலோகம் போன்ற சுந்தரமுள்ள ஒரு மாளிகையைக் காணப்பெற்றான். அப்பந்தரிடையே தங்கிச் செந்தமிழ்ப் பொதியச் சந்தனம் முதலிய நறுமணத்தையும் குளிர்ச்சியையும் கொண்டு, அவ்விடத்தில் அமர்ந்தான். அந்தத் தருனத்தில் சிரம பரிகாரமாகி அம்மாளிகையில் உள் செல்வோரையும் வெளியில் வருவோரையும் கண்டு, அவர்கள் செயல்களை விசாரிக்கத் தொடங்கினான்.

இதற்கு அங்கே அருகே நின்ற ஒருவன் "இத்திருப்பருப்பதத்திலே, வேதியர் வீதியின் மத்தியிலுள்ள ஒரு பிராமணன் பத்தினியாகிய ஏமாங்கி என்பவள் காமத்தினாற் கற்புநிலை குலைந்து, கணவனையும் கொன்று, பெரும் பொருளையும் கைக்கொண்டு, பரத்தையர் வாழும் இவ்வீதியில் வந்து, இவ்வீட்டியினை கட்டுவித்து வசித்து இங்கு தங்கியிருக்கிறாள். 

இளமையானவளாயிருந்து பொதுமகளிர் தொழில் பழகிய அவள், முதுமை பெற்றவளாய், இளையிளமையானவர்கள் தன் வரவை நாடி இங்குற்றிருக்கிறாள் என்றான். உடனே சுமதியானவன், அம்மனையின் அகத்திருந்த ஏமாங்கி புறத்தே போனான். சுமதி நல்வரவை வினவினான். அவளும் கையைப்பற்றித் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டுபோய் இன்பத்தை நுகர்வித்துக் கொடுத்தாள்.

நுகர்ந்த சுகம் கொண்ட சுமதி, தொடர்ந்து சில தினத்திலே பல பொருள்களையும் அவளிடம் இழந்து, பின்பு ஏமாங்கியினால் இகழப்பட்டும், அதன்பின்பும் அவளின் மீது பெரும் மோகம் கொண்டு பொருள் கொண்டு வர விரைந்தோடினான். சுமதியின் தந்தை புரோகிதமாகவிருந்த காஷ்மீர கண்டத்து அரசனையடுத்து, இரத்தின ஆபரணங்களும், பெரும் பொருளும் பெற்று, மீண்டும் ஏமாங்கியிடம் வந்து இணைந்தான். இன்பச் சுழற்சியில் மூழ்கிச் சில நாளில் மறுபடியும் அனைத்து பொருளையும் இழந்தான்.

மீண்டும், கொடைக்குணமுடையாரை அடைந்து அங்கிருந்து பொருள் பெற்றும், உற்கலதேயத்திற் பர்க்கதேவன் என்னும் பார்ப்பானனைக் கொன்று அவனிடமிருந்த பொருளை கவர்ந்து துராசாரனென்னும் பெயர் பெற்றும் திரும்ப, ஏமாங்கியிடத்தே வந்தான். அவன் பெருங் கொடுஞ் செய்கைகளைக் கேள்வியுற்ற ஏமாங்கி, "வருணமும் ஒழுக்கமும் கற்பும் கழுவிக் கொழுநனையுங் கொன்று பழிபூண்டு அளவில்லாத் தீமைகளைச் செய்திருக்கின்றோம்.

இன்னமும் எம்மிடத்துள்ளாராலும் பழிபாவங்கள் உளவாதல் முறையோ" என்று வருந்தி, அச்சுமதியை விலக்கி வைத்தாள் ஏமாங்கி. அவனோ அவளை விட்டு விலகாது மாளவதேசத்தை எய்தி, அங்கும் ஒரு பிராமணனை வதைத்துப் பொருள் பறித்து திரும்பி வந்து மறுபடியும் ஏமாங்கியை அடைந்தான். 

உடனே ஏமாங்கி, "இப்பாவியைப் பார்ப்பதும் பாவம் பெரும்பாவம்" என்று அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்றாள். சுமதியானவன் அவளைத் தேடி சென்றான். தேடியலைந்தவன் "தென்கைலாயமாகிய கோவை திருப்பேரூர்" எல்லையில் உள்ள காட்டில் வீழ்ந்து மாண்டு போனான். திருப் பருப்பதமாகிய மல்லிகார்சுனத்தை வழிபட்டு திருப்பேரூர் வெள்ளியங்கிரியின் அருகே இறந்த சுமதியின் உடம்பை  நாய் நரிகள் திண்றன. அவனுடலை திண்ணுவதற்கு நாய் நரிகள், அவைகளுள் சண்டையிட்டு உனக்கு எனக்கு என் அவ்வுடலை இழுத்துப் போய் காஞ்சிமா நதியில் இட்டுவிட்டன. ஆதிபுரியிலே உடல் வந்து வீழ்தலினாலும், அவ்வுடலில் காஞ்சி தீர்த்தத்தில் நனைந்ததினாலும் அவ்வுடல் புண்ணியங்கள் பெறப்பட்டு சுமதி சிவலோகத்தை சேர்ந்தான்.

முசுகுந்தன் முகம்பெறு படலம்
கலிங்க தேசத்திலே சிவபூஜை செய்யும் மெய்யன்பினையுடைய ஓர் அந்தணரொருவர் அருந்தவஞ் செய்ய, அவன் மனைவியிடத்தே ஒரு புத்திரி அவதரித்துச் சுகுமாரி என்னும் பெயர் பெற்று விளங்கினாள். அவள் பிதாவை வணங்கிச் சிவார்ச்சனை புரியும் விருப்பம் இருப்பதாக விண்ணப்பம் செய்தாள். அதற்கு பிதா மகிழ்ச்சியுற்று சமயதீக்கை செய்து மந்திராதிகாரம் கொடுத்து, அது மனதிற்கு மகிழ்வாக இருக்க பின் விசேஷ தீக்கையும் செய்து அர்ச்சனாதிகாரம் கொடுத்தனர்.

இவ்விதமாகியிரும் வேளையில் சுகுமாரி அச்சிவபூசையில் நேசமுண்டாகிச் சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை நீங்கிச் சதா சிவமூர்த்தியைத் தியானித்து "சௌசம்", "தந்தசுத்தி", "நீராடல்", "அநுட்டானங்கள்" முடித்துத் தோழியரோடு திருநந்தவனம் சென்று, திருப்பள்ளித்தாமம் கொய்து, சிவபூஜை செய்து தொடர்ந்தாள். 

ஒரு நாள் மலர் கொய்வதற்கு நந்தவனத்திற்குப் போனாள். அப்போது அவளை விதூமனென்னும் காந்தருவன் கண்டுவிட்டவன், அவள்மேல் மையலுற்றுத் "தையலே," நீ எனக்கு மனைவியாவை எனில், "உனக்கு வேண்டும் பொருள் கொணர்ந்து பணியும் புரிவேன்" என்றான்.

அதற்குச் சுகுமாரியோ "போகத்திற் சிறிதும் கருத்தின்றிச் சிவார்ச்சனையில் பெரிதும் கருத்துடையேன் நான். ஆதலால், நீ உன் எண்ணத்தை மாற்றிக் கொள்வாயாக"  என சொல்லி விட்டாள். அவனோ.... அவ்வென்னத்தை மாற்றிவிட முடியாது வருந்தி மறுபடியும் அவளைத் துரத்த, சுகுமாரி இரவிந்த விதூமனை நோக்கி "நீ முசுவாகக் கடவாய்" என சபித்து விட்டாள்.

உடனே அவன் முசுவாய் மலைகடோறும் உழன்று இமயமலையை எய்தி, வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவினான். வில்வ மரத்திற்கும் வில்வ மரமாகத் தாவும் போது, அவ்வில்வயிலை சருகுகள் அவ்வில்வ மூலத்திலே அமருந்திருந்த சிவலிங்கப் பெருமான் திருமேனியை மூழ்கிச் சொரிந்தன. அப்போது இடபாகத்திலிருந்த உமாதேவியார் முசுவை நோக்கி, "எம்பெருமான் திருவுரு மறையச் வில்வசருகுகளை உதிர்த்தபடி மூழ்கடிக்கப்பட்டுப் போனதலால், சுகுமாரி இட்ட சாபம் தீரும் போதும் உனக்கு முசுமுகம் மறைந்திருக்கும் என சாபம் கிடைத்தது.

இதனைத் திருச்செவி சாத்தியருளிய சிவபிரான் "அளவில்லாத தீங்கையும் நீங்கச் செய்யும் வில்வத்தை நம்மேனியில் மூழ்கித்தியது புண்ணியமே! ஆக இம்முசுவுக்கு உலக முழுவதும் ஆளும் அரசினைக் கொடுப்போம்" என கூறிய ஈசன், உமாவின் பக்கம் திரும்பி.....

"தேவி!, நீ கோபிக்காதே! எனவும் கூறிவிட்டு அம்முசுவுக்கு எதிரில் தோன்றி' பேரரசை ஈந்தும், உமாதேவியாரோடு மறைந்தருளிப் போனார். அவ்வரத்தினால்  அக்காந்தருவன் முசுமுகத்தோடு அரச குலத்திலே பிறப்பரிந்து உதித்து, "முசுகுந்தனென்னும்" பெயர் பெற்று உலகத்தை ஆண்டான். அச்சமயத்தில் அகிதவுட்டிரனென்னும் அவுணன் அமரர்களைக் கலக்கி, இந்திரனை வென்று, விண்ணாட்டைத் தன் நாடாக்கி ஆளமிடத்து, இந்திரன் இமயமலையில் மறைந்திருந்தான்.

அப்படியிருக்கும்போது பிருகு முனிவர் மகளைக் கண்டு மயங்கி, வலிந்து கைப்பற்றிய வழிய, அம்முனிவர் சாபத்தினால் அரக்கனாகி உழன்றான். இவ்வித நிகழும் போது வியாழ பகவானோடு தேவர்கள் பூமிக்கு வந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியைச் சார்ந்து நிகழ்ந்தவைகளைச் சொல்லித் தேவலோகத்தைக் காத்தருளும்படி வேண்டினர். அதனால் முசுகுந்தன் விண்ணுலகை அடுத்து, அகிதவுரட்டிரனை வென்று அவ்வுலகத்தைக் காத்தவழி அதனை ஆளும்படிக்கும் அமரர்கள் விரும்பினர்.

அவ்வாறு மூவுலகிலும் செங்கோல் செலுத்தி வந்தான். ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் போது, நாடகம் செய்த அரம்பை அவன் முசுமுகத்தை நோக்கி நகைத்தனள். அதனால் நாணமுற்று அவ்வரசாட்சியை அகற்றிய முசுகுந்தன் அருந்தவம் செய்து, சூரியன் அனுமதியினால் சிவத்தல யாத்திரை புரிந்து, நாரதமுனிவர் ஏவுதலால் திருப்பேரூரைச் சார்ந்து கலிகன்ம நாசினி யென்னுங் காஞ்சிமா நதியில் மூழ்கிச் சுவாமியை தரிசனம் செய்தான்.

அக்காஞ்சிமா நதிதீரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி, இரண்டு இரண்டுநாளாய் அந்நதியினில் படிந்து, மூன்றாம் நாள் மூழ்கியெழுந்த போது, முசுமுகம் நீங்கப் பெற்று நன்முகம் கிடைக்கப் பெற்றுத் தானங்கள் செய்து தென் கைலாய, வட கைலாயங்களை அருச்சித்து, மருதவரையில் முருகக் கடவுளைத் தரிசித்துத் தன் பதியை அடைந்து நல் அரசாட்சி செய்து நடத்தி வந்தான்.

-கோவை கு. கருப்புசாமி

படங்கள் உதவி: ச. பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com