சூரியன், சந்திரனுடன் சேர்ந்து புதன் உண்டாக்கும் பலன்கள்!
சூரியன் மற்றும் சந்திரனுடன் சேர்ந்து புதன் உண்டாக்கும் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள இடைவெளியானது எப்பவுமே 28 பாகைகளுக்குமேல் போகாது. ஆகவே, இருவரின் சேர்க்கையைத் தவிர மற்ற பார்வைகள் ஏற்பட வழியில்லை.
சூரியன் - புதன் சேர்க்கை
ஒரு குறிக்கோள் உள்ளவர்; நகைச்சுவையுடன் பேசக்கூடியவர், எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். புதன் புத்திகாரகன் அல்லவா? அவர் சூரியனுடன் சேரும்போது மிகவும் வலுப் பெறுகிறார். ஆகவே, புதனின் குணாதிசயங்கள் பரிமளிக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.
இந்த ஜாதகத்தில், சூரியனும் புதனும் சேர்ந்து இருப்பதைப் பாருங்கள். அதுவும், வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டில். இவர் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றதும் அல்லாமல், நன்கு வேடிக்கையாகப் பேசக்கூடியவர். திறமைமிக்கவர். இங்கு ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். சூரியனுடன் மற்ற கிரகங்கள் சேரும்போது, அவை அஸ்தங்கமாகிவிடுகின்றன என்று நமது பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. ஆனால், உண்மையில் அப்படி இல்லை. மற்ற கிரகங்கள் வலுப் பெறுகின்றன; பரிமளிக்கின்றன என்பதே உண்மை.
இங்கு, நடந்த ஓர் உண்மையைக் கூறுகின்றேன். ஒரு நண்பர் தன் பெண்ணுக்கு ஜாதகம் தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு ஒரு பையனின் ஜாதகம் கிடைத்தது. அந்தப் பையன் தனுர் லக்கின ஜாதகம். ஜாதகத்தில் 7-ம் இடமான மிதுனத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தார்கள். இருவருக்கும் உள்ள இடைவெளி ஒரு பாகைதான். இதை “RAPT CONJUNCTION” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதைப் பார்த்துவிட்டு ஒரு ஜோதிடர், “பையனுக்கு 7-ம் வீட்டுக்காரனான புதன் 7-ம் வீட்டிலேயே அஸ்தங்கம் ஆகிவிட்டார். அதாவது, சூரியனால் எரிக்கப்பட்டுவிட்டார். இது ஒரு களத்திர தோஷம். இந்தப் பையனின் மனைவியும் எரிக்கப்படுவார். ஆகவே, இந்த ஜாதகத்தைச் சேர்க்க வேண்டாம்” என்று கூறிவிட்டார். இதைக் கேட்டுவிட்டு, அந்த நண்பரும் அந்த ஜாதகத்தை நிராகரித்துவிட்டார்.
சில நாள்கள் கழித்து அந்த நண்பர் இந்த ஜாதகத்தைப் பற்றி என்னிடம்
பேசிக்கொண்டு இருந்தார். நான் அந்த நண்பரிடம் புதன் தன் சொந்த வீட்டில் இருப்பதோடு, சூரியனுடன் சேர்ந்தே இருக்கிறார். ஆகவே, இந்தப் பையன் மிக கெட்டிக்காரனாக இருப்பதுடன் மிகவும் திறமைசாலியாக இருப்பானே என்று கூறினேன். உடனே அவர், ”அந்தப் பையன் ஒரு CHARTERED ACCOUNTANT; அதுவும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பையன்” என்று கூறினார். எப்படியோ, ஜாதகம் கை நழுவிப் போய்விட்டது. தவறான முடிவால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது.
அடுத்து, சந்திரனுடன் புதன் உண்டாக்கும் பார்வைகளையும், பலன்களையும் பற்றி பார்ப்போம்.
புதன் - சந்திரன் சேர்க்கை: 120 பாகை, 60 பாகைப் பார்வை
இது ஒரு சுபப் பார்வை. புதன் புத்திகாரகனல்லவா! சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர். இந்த நற்பார்வையானது ஒருவரின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. விகடமாகப் பேசுவதில் வல்லவர்கள். பேச்சுச் சாதுர்யம் மிக்கவர்கள். மற்றவர் மனதைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள்; புதன் ஓர் நிலையில்லாக் கிரகம் அல்லவா! ஆகவே, இவர்கள் ஒரு நிலையில்லா எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமயங்களில், குழப்பவாதிகள் என்றுகூடக் கூறலாம். சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் அதிகரிக்கும். கற்பனை வளம் கொண்டவர்கள்; பொதுவாக சாமர்த்தியசாலிகள்.
புதன் - சந்திரன் சேர்க்கை: 180 பாகைப் பார்வை, 90 பாகைப் பார்வை; 45 பாகைப் பார்வை
இது ஒரு கெட்ட பார்வை. பொய் அதிகம் பேசுவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றி பொல்லாங்கு கூறுபவர்களாக இருப்பார்கள். இதைத் தவிர, செவ்வாயோ அல்லது சனியோ தன் கெட்ட பார்வையால் புதனைப் பார்த்தால், இவர்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கமாட்டார்கள். இவர்களை நம்பி எதுவும் செய்யமுடியாது. இவர்கள் தங்கள் திறமைகளை நற்காரியங்களுக்குப் பயன்படுத்தமாட்டார்கள். ஒரு உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.
இவர், மிதுன லக்கின ஜாதகர். லக்கினத்துக்கு 5-ல் புதன் 17 பாகையில் இருக்கிறார். புதனை சந்திரன் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கெட்ட பார்வையால் பார்க்கின்றனர். இவர் தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்து பேசிக்கொண்டு இருப்பார். பேச்சில் பொய் அதிகம் இருக்கும். இவர் ACCOUNTS சம்மந்தமான தொழிலில் இருந்தார். அதில் தவறு செய்துவிட்டு, தன் வேலையை இழந்தார். ஒரு ஸ்திர மனது கொண்டவரல்ல; புதன் 5-ம் இடமான திரிகோண ஸ்தானத்தில் இருப்பதால் நன்மை எதுவும் செய்யவில்லை. யுரேனஸ் மற்றும் சந்திரனின் கெட்ட பார்வையால் நற்பலன்கள் எதுவும் கிட்டாமல், அதன் தீய பலன்களை அனுபவித்தார். அவர் ஜாதகம் இதுதான்.
இனி அடுத்ததாக சூரியன் - சந்திரன் பார்வையின் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் - சந்திரன் சேர்க்கை: 120 பாகைப் பார்வை, 60 பாகைப் பார்வை
சூரியனும் சந்திரனும் சேருவது அமாவாசை அன்றுதான். நமது பாரம்பரிய ஜோதிடத்தில், இது ஒரு அவயோகமாகவே கருதப்படுகிறது. பிறர் சொத்துக்களைக் கவர்வதில் நாட்டம் இருக்கும். இது ஒரு திருட்டு யோகமென்றே கருதப்படுகிறது. ஆனால், மேலை நாட்டினர் கருத்து அவ்வாறு அல்ல; சந்திரன் - சூரியன் சேர்க்கை மிக உயர்வாகக் கருதப்படுகிறது.
மிக உயர்வான குணங்களை உடையவர்களாக இருப்பார்கள்; மற்றவருக்கு உதவக்கூடிய குணம் இருக்கும். குழந்தைகள் மூலம் அனுகூலம் பெறுபவர்களாக இருப்பார்கள்; குடும்பத்தில் அமைதி நிலவும்; வரக்கூடிய கணவன் அல்லது மனைவி உயர்ந்த குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்; உத்தியோகத்தில் உயர்வு; மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாத குணம் போன்ற நற்குணங்களை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், ‘தான்’ என்ற எண்ணமும் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும்.
உதாரணத்துக்கு, மேலே முதலாவதாகக் கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள். அதில், சூரியன் 15 பாகையிலும், சந்திரன் 21 பாகையிலும் மகரத்தில் இருக்கின்றனர். இந்தச் சேர்க்கையால், இவர் மேலே கூறியுள்ள பல நற்குணங்களை வாய்க்கப்பெற்றவராக இருந்தார். சூரியன் - சந்திரன் சேர்க்கைக்கு இந்த ஜாதகம் ஒரு நல்ல உதாரணம். இதே பலன்கள்தான், சந்திரன் – சூரியன் நற்பார்வைகளான 120 பாகை 60 பாகைப் பார்வைகளுக்கு.
சூரியன் – சந்திரன் 180 பாகை, 90 பாகைப் பார்வை
இது ஒரு கெட்ட பார்வை; வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பல தடைகள், உடல் உபாதைகள்; மேலதிகாரிகளுடன் பிரச்னைகள், பணப் பிரச்னைகள், முதலீடுகளில் நஷ்டம், பெண்களால் தொந்தரவு மற்றும் ‘தான்’ என்னும் எண்ணம், தற்பெருமை கொண்டவர் ஆகிய குணங்களை உடையவராக இருப்பார்கள். உங்களுக்குக் கிடைக்கும் ஜாதகங்களில் இத்தகைய பார்வை உள்ளவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்.
(சந்திப்போம்)
– ஜோதிடர் சோ.சந்திரசேகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.