யாரால் ஒரு ஜாதகருக்கு என்னென்ன லாபம் கிட்டும்?

ஒருவரின் ஜாதகத்தில், 11 க்கு உடையவர், லக்கினத்தில் இருந்தால், அரசிடம் இருந்து லாபத்தை..
யாரால் ஒரு ஜாதகருக்கு என்னென்ன லாபம் கிட்டும்?
Updated on
3 min read

(ஜோதிடப் பார்வையில் - 11 ஆம் பாவம்)

ஒருவரின் ஜாதகத்தில், 11க்கு உடையவர், லக்கினத்தில் இருந்தால், அரசிடம் இருந்து லாபத்தை அடையக்கூடியவராக இருப்பார். அதே சமயம், 11ஆம் இடம் அல்லது 9 ஆம் இடம் சுபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு அவரின் தகப்பனைக்காட்டிலும் அதிகமாக தன லாபம் உண்டாகும். 11ஆம் வீட்டுக்கு உரியவர், உச்சம், ஆட்சி அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும் 11ஆம் வீட்டில் 5க்கு உடையவர் இருந்தாலும், அப்படிப்பட்ட ஜாதகர்-மனைவி, மக்களால் மனநிறைவு உள்ளவராக இருப்பார்.

11க்கு உடையவர் 2லும், 2-க்கு உடையவர் 11ல் இருந்தாலும், அல்லது அவ்விருவரும், கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது 11க்கு உரியவர் இருக்கும் வீட்டுக்கு உடையவர் சுபரால் பார்க்கப்பட்டாலும், மிகுந்த தன லாபம் உண்டாகும். ஒருவருக்கு தன லாபம் உண்டாகும் திசை யாதெனில், 11ஆம் வீட்டிற்கு எந்த தசை சொந்தமோ, அந்த திசையிலிருந்து தன லாபம் உண்டாகலாம். அதி முக்கியமானது என்னவென்றால், 11க்கு உடையவர் பாவர் ஆகி, அல்லது பாவர் சம்பந்தம் பெற்று, 11ஆம் இடத்திலும் பாவர் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு, தன நாசத்தை ஏற்படுத்தியே தீரும் என்பதனை சொல்லலாம்.

ஒரு சில லக்கின பலன்களைப் பார்க்கலாம்:-

1. மிதுன லக்கினம் :-

இந்த லக்கினத்திற்கு, 11ஆம் இடமான மேஷத்தில், 7 மற்றும் 10ஆம் அதிபதியான குரு 11ல் நிற்பதால், நல்ல மனைவியை அடைவார். மனைவியால் இவருக்கு செல்வம், புகழும் உண்டாகும். அநேக வேலைக்காரர்களை பெற்றிருப்பார். நல்ல குழந்தைகள் இருப்பர். பிறரை ஜெயிப்பதால், தான லாபத்தை அடைவார். ஆனால், அஸ்வினி 2, 3 மற்றும் பரணி-3ல் பகை நவாம்சம் பெறுவது நல்லதல்ல எனலாம். ராகு, லாபஸ்தானத்தில் நிற்பதால், எல்லோரிடமும் செல்வாக்கு பெற்று உயர்ந்த நிலைக்கு வருவார்.எதிர்பாராத அளவு செல்வம் சேரும். ராகுவின் தசையில் அரசாங்க செல்வாக்கு, பூமி லாபம் அடையப்பெறுவார்.

கேது, லாபஸ்தானத்தில் நிற்பவர்களுக்கு, பலவழிகளிலும் தனம் சேரும். சகல காரியங்களிலும் சித்தி உண்டாகும். அள்ளிக்கொடுக்கும் வள்ளல் ஆவார்.  அடியவரை ஆதரிப்பார். புகழ் உடையவர்.

2. சிம்ம லக்கினம்: -

இந்த லக்கினத்திற்கு, 11 ஆம் இடமான மிதுனத்தில், சூரியன் நிற்பவர்களுக்கு, அரசிடமிருந்து தனம் மற்றும் சுகத்தை அடைவார்கள். அதே சமயம், சூரியன் மிருகசீரிடம் -3ல் நீச்ச நவாம்சம் அடைவதாலும், திருவாதிரை 2 , 3; புனர்பூசம் 2 ல் பகை நவாம்சம் பெறுவதாலும் இவ்வித அமைப்பையுடைய ஜாதகர்களுக்கு சற்றே கெடுதல் அமைப்பாகும் எனலாம்.

செவ்வாய் நிற்பவர்களுக்கு, பலவிதங்களிலும் லாபம் அடைபவராகவும், பல பேரை வைத்து வேலை வாங்குபவராகவும், அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவராகவும் இருக்க வாய்ப்பை அளிப்பது சுகஸ்தானமெனும் 4 கும் மற்றும் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் இடத்துக்கும் உரியவர் ஆவதாலேயே இது சாத்தியமாகும். புனர்பூசம் 3 ல் பகை நவாம்சம் பெறுவதால் அது கெடுதலாகும். சனி, 6, 7 க்கு உடையவர் என்பதால் அவர் லாபத்தில் இருக்கும் போது பதிவிரதையான மனைவியை அடைவார். ஆனால், புனர்பூசம் 1 ல் நீச்ச நவாம்சமும் , மிருகசீரிடம் 4ல் பகை நவாம்சமும் பெறுவது நல்லதல்ல. அரசாங்கத்தாலும், திருடர்களால் பொருள் இழக்க நேரிடலாம். 

3. விருச்சிக லக்கினம்: -

இந்த லக்கினத்திற்கு, 11ஆம் இடமான கன்னியில், 10ஆம் அதிபரான சூரியன் நிற்பவர்களுக்கு,பிறரை ஜெயிப்பதால் லாபம் அடையக்கூடியவர்கள். அநேக வேலைக்காரர்கள், அழகான மகன், மகள் உடையவர்கள். ஜனங்களின் தலைவர் ஆவார். ஆனால் பல எதிரிகள் ஏற்படுவார்கள். ஆனால், உத்திரம் 2, 3 மற்றும் அஸ்தம் -2ல் பகை நவாம்சம் பெறுவதால், கெடுதிகள் ஏராளம் ஏற்படும். லக்கின அதிபரான மற்றும் 6ஆம் அதிபரான செவ்வாய், இங்கு நிற்பவர்களுக்கு, கோடீஸ்வரர்கள் மூலம் சுகத்தை அடைபவராக இருப்பார்.

சிலர் துஷ்டர்களுடன் சேர்ந்தவர்களாகவும், கள்வர்களாலும் லாபம் அடைவர். அஸ்தம் 4 ல் நீச்ச நவாம்சம் , அஸ்தம் 3, சித்திரை 2 ல் பகை நவாம்சம் பெறுவதால், மிக கெடுபலன்கள் நேரும். அட்டமாதிபரும், லாபாதிபருமான புதன், இங்கு நிற்பவர்களுக்கு, ஜோதிடம், கணித சாஸ்திரத்தில் வல்லவராக இருப்பார். ஆனால், ஒழுக்கம் இல்லாதவர்.  உத்திரம் 4 ல் நீச்ச நவாம்சம் பெறுவது ஜாதகருக்கு மிக கெடுதலாகும்.

4. மீன லக்கினம்: -

இந்த லக்கினத்திற்கு, 11ஆம் இடமான மகரத்தில், 6 ஆம் அதிபரான சூரியன் இங்கு நிற்பவர்களுக்கு அனாமத்தாக பல லாபங்கள் வந்து சேரும். உத்திராடம் 2, 3 திருவோணம் 2ல் பகை நவாம்சம் பெறுவது கெடுதலாகும். 2 மற்றும் பாக்யஸ்தானத்துக்கு  அதிபரான செவ்வாய் இங்கு நிற்பவர்களுக்கு, அநேக செல்வங்களுக்கு அதிபதியாகவும், மந்திரி போல் ஆலோசனை சொல்பவராக இருப்பார். நீதிபதி போன்ற பதவியை அடைவார். அரசாங்கத்தில் உயரிய பதவிகளை அடைவார். திருவோணம் 4 ல் நீச்ச நவாம்சம் திருவோணம் 3 அவிட்டம் 2 ல் பகை நவாம்சம் பெறுவது கெடுதலாகும்.

3ஆம் அதிபரும் அட்டமாதிபருமான சுக்கிரன் இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு, பெரிய மனிதர்களின் அபிமானம் , தொழிலில் நிபுணர், நல்ல வழியில் லாபம் அடையக்கூடியவர்கள். அந்நியர் மூலம் சுகத்தை அடைபவர். 3 மனைவிகள் வரை ஏற்படலாம். அந்நியர் மனைவியிடமும் ஆசைபடுவார். ஆயுள் குறைவு. திருவோணம் 4 பகை நவாம்சம் பெறுவது மிக கெடுபலனை அளிக்கும்.

பொதுவாக, இங்கு நவாம்சம் என்பது ஒவ்வொரு கிரகங்களும் நிற்கும் நட்சத்திர பாத சாரங்களையே குறிப்பதாகும்.

மொத்தம் 12 ராசிகள், ஒவ்வொரு ராசியிலும் 9 நட்சத்திர பாதங்கள் என 108 பாத சாரங்களின் பலன்களை பற்றி கூற இயலாது என்பதால், ஒரு சில மட்டுமே பலன்களாக அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் பலன்களை அறிய அவர்களுக்கு அருகாமையில் உள்ள ஜோதிடர்களிடம் அணுகி பலனை தெரிந்து கொள்ளலாம்.

எல்லா ஜோதிடர்களும் ஒரே விதமான பலன்களை தான் கூற முடியும். இதில் கருத்து பேதம் இல்லை. இப்படி கூறிய பலன்களில் எப்போது மாற்றம் வரும் என்றால், பிறப்பு குறிப்பு தவறானபோதும், வேறு கிரகங்களின் பார்வை / சேர்க்கையால் சிறிதே மாற்றம் வரும் என்பதில் , மாற்று கருத்தே  இல்லை எனலாம். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை, எதிலும் நேர்மை, எளிமை, பரோபகாரம் செய்யும் தன்மை பெற்றவர்களுக்கு, எந்த கிரகங்களும் ஒன்றும் பாதிப்பை தராது மற்றும் தந்தாலும் அப்படிப்பட்ட ஜாதகரை ஒன்றும் செய்துவிட முடியாது.  

சாயியைப் பணிவோம் நன்மைகள் யாவும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா. தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com