எனக்கு எந்த வகையில் எப்போது மரணம் ஏற்படும்?

ஒருவரின் பிறப்பையும் இறப்பையும் இறைவன் தான் தீர்மானிக்கிறான் என்பதில் ஒரு துளி சந்தேகமும் யாருக்கும் இல்லை
எனக்கு எந்த வகையில் எப்போது மரணம் ஏற்படும்?
Updated on
3 min read


( ஜோதிடப் பார்வையில் )

ஒருவரின் பிறப்பையும் இறப்பையும் இறைவன் தான் தீர்மானிக்கிறான் என்பதில் ஒரு துளி சந்தேகமும் யாருக்கும் இல்லை. ஆனால், ஜோதிட ரீதியாக, சில கிரக அமைப்புகளின் படி இதனை ஓரளவு கணிக்க முடிகிறது. சில சமயம் துல்லியமாக அமைவதும் உண்டு. அவ்வாறு கணித்து சொல்பவரின் வாழ்க்கை சீரழிந்து போன உண்மை கதைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே ஜோதிடர்கள் சில குறிப்புகளால் மட்டுமே இதனை விளக்கி சொல்வர். இன்றைய கால கட்டத்தில் அதிகப்படையான மருத்துவ வசதிகளையும், ஆய்வுகளையும் கண்டு துவக்க நிலையிலேயே நோயின் வீரியத்தை குறைத்து கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை என்றே கூறலாம். இருப்பினும் சில பெரிய மருத்துவர்கள் கூட அவரின் செயல்பாடுகள் ஒரு நிலைக்கு மேல் செல்ல முடியாதபோது இறைவன் கையில் இருக்கிறது என சொல்லி தப்பித்துக்கொள்வதாக இல்லை, அதுவே உண்மை என்பதை இங்கு காண முடிகிறது. 

சரி அப்படியெனில், ஜோதிடம் கூறும் , முன் எச்சரிக்கை குறிப்புகள் எது என்பதனை இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது, ஒருவரின் ஜாதகத்தில் மாரகாதிபதி யார் என்று மற்றும் பாதகாதிபதி யார் என்று.. சிலரின் ஜாதகத்தில் மாரகாதிபதி இருவராகவும் அதாவது இரண்டு கிரகங்களாகவும் அதுவே ஒரு சிலரின் ஜாதகத்தில் ஒரே ஒரு கிரகம் மட்டுமே மாரகராக இருப்பர். 

அதனை இந்த கட்டுரையில் காண்போம். இதனை மிக எளிமையாக விவரிக்க உள்ளேன். இப்படி ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் உள்ள மாரகரும், பாதகாதிபதியும்  சேரும் காலத்தில் அந்த ஜாதகருக்கு மாரகம் எனும் மரணம் சம்பவிக்க நேரும். இதனுடன் பொதுவாக மாரகத்துக்கான காரக கிரகம் ஆன சனியின் இணைவும் இருக்கவே செய்யும். 

லக்கினங்கள் மொத்தம் மூன்று வகைப்படும். அவை சரம் , ஸ்திரம், உபயம்  என்பவைகளாகும். சர லக்கினமான மேஷம், கடகம், துலாம், மகரம் என இந்த நான்கு லக்கினங்களுக்கும் 11ஆம் அதிபதி யாரோ அவரே பாதகாதிபதி என்றும், 2, 7 க்குரிய அதிபதிகள் மாரகர்கள் என்றும் கூறுவர். இந்த பாதகாதிபதியும், மாரகாதிபதியும் சேரும் காலத்தில், உடன் சனியின் தொடர்பும் இருக்கும் போது இந்த சர லக்கினகாரர்களுக்கு மரணம் நேர வாய்ப்பாகிறது. 

ஸ்திர லக்கினகாரர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் 9ஆம் அதிபதி யாரோ அவரே பாதகாதிபதி ஆவார். அதே சமயம் 3 மற்றும் 8 ஆம் அதிபதிகள் மாரகாதிபதிகள் ஆவர். ஆனால் உபய லக்கினகாரர்களுக்கு 7 ஆம் அதிபதி பாதகாதிபதியாகவும், அவரே மாரகாதிபதி யாகவும் மற்றும் 11 ஆம் அதிபதியும் மாரகாதிபதியாக வருவர். முன்பே கூறியது போலவே எவர் ஒருவரின் தசா காலம் அல்லது கோச்சார அமைப்பில் இந்த பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி தொடர்பு  ஏற்படுகிறதோ, அப்போது மரணத்திற்கு நிகரான கண்டம் ஏற்படும் அல்லது மரணம் ஏற்படும். இவைகளை முன் எச்சரிக்கையாகக் கொண்டு நாம் நம்மை , நம் உடலை, நமது செய்கைகளை சரியாக பார்த்துக்கொள்ளல் அவசியமாகிறது. 

இந்த மரண நிகழ்வுக்கு ஒரு ஜாதகரின் தசையும் ஒரு காரணி ஆகும். உதாரணத்திற்கு நட்சத்திர வரிசையில் முதலாவதாக உள்ள ஞானகாரகர் ஆன கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆவது தசையான செவ்வாய் தசை ஜாதகருக்கு மாரக  தசையாக வரும். அதனால், இந்த ஜாதகர்கள் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் இருப்பினும் உடனடியாக மருத்துவரை அணுகிவிடுதல் மிக நல்லது. அதற்கு பிறகு இறைவன் இட்ட  வெகுமதி (போனஸ்) வாழ்வு சிலருக்கு அமையலாம்.

அடுத்து பரணி நட்சத்திர காரர்களுக்கு ஆறாவதாக வரும் குரு தசை மாரக தசையாகும். இந்த குருவானவர் பலம் பெற்று கேந்திர, திரிகோண அமைப்பில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில், சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக மாரகம் என்றால் மரணத்திற்கு ஒப்பான பிரச்னைகளை மாரக திசையிலும், பாதகாதிபதியுடன் தொடர்பு பெற்ற மாரகாதிபதியின் காலத்திலும், ஜாதகர்கள் சந்திப்பர் என்பது தான் சரியாகும்.  இது போல ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் அதன் விம்சோத்ரி வருஷத்திற்கு ஏற்பவும் தனி மனித ஜாதக அமைப்பையும் கருத்தில் கொண்டு இதனை ஆய்வு செய்து காண முடியும்.

முதலில் இதனை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதனை புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. மரணம் வரும் நாளை தெரிந்து கொண்டால் வாழும் நாள் சுகமாகாது என்பது உண்மை தான். இருப்பினும் ஜோதிடம் முழுவதுமே மானிட சமுதாயத்திற்க்கான எச்சரிக்கை மணியாக இருக்கிறது என்று சொன்னால் அது உண்மை மற்றும் மிகை படுத்துதல் ஆகாது.  ஒவ்வொரு லக்கினத்திற்கும் மரணம் சம்பவிக்கும் விதமும் , மரணம் சம்பவிக்கும் இடமும் நிச்சயம் வேறுபடும். அதனை ஆராய்ந்து தெளிதல் அவசியமாகும். பொதுவாகவே ஜோதிடம் மூலம் பல எச்சரிக்கைகளை அறிய முற்பட்டாலும் இந்த மரணத்தை பற்றி பழைய நூல்களில் கூறப்பட்டவை யாதெனில், இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது என கூ றப்பட்டுள்ளது. இது எச்சரிக்கைக்காக இருப்பதற்காகவே சில விஷயங்களை இந்த கட்டுரையில் கூறியுள்ளேன். 

ஒவ்வொரு லக்கினத்திற்கும் மற்றும் கிரக சேர்க்கை பார்வை இவற்றால் மரணம் சம்பவிக்கும் விதம் வேறுபடும். அதில் ஒரு  சிலவற்றை இங்கு காணலாம்.

1. சனி, சூரியன் கூடி அஷ்டமத்தில் இருந்தாலும் , அஷ்டமத்தைப் பார்த்தாலும், நாய்கடியால் மரணம் சம்பவிக்கும்.

2. பலவீனமான சந்திரன் ராகுவுடன் கூடி அஷ்டமத்தில் இருந்தால், பேய் பிசாசுகளைக் கண்டு பயந்து மரணம் நேரும். அதே போல் சில கிரக அமைப்புகளால் மரணம் சம்பவிக்கும் இடம் பற்றி காணலாம்.

1. அஷ்டமம் சர ராசி யாகி அஷ்டமாதிபதியும் சர ராசியில் இருந்தால், அந்நிய தேசத்தில் மரணம் சம்பவிக்கும்.

2. அஷ்டமம் உபய ராசியாகி, அஷ்டமாதிபதியும் உபய ராசியில் இருந்தால் , பிரயாணம் செய்யும் போது மரணம் ஏற்படும்.

3. அஷ்டமம் ஸ்திர ரசியாகி அஷ்டமாதிபதியும் ஸ்திர ராசியில் இருந்தால், தனது சொந்த வீட்டில் மரணம் அடைவார்.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் ஒரு சில விதி கோட்பாடுகளே. இவை நாம் சிறிதளவு தெரிந்து கொண்டால் நாம் எச்சரிக்கையாக இருக்க ஏதுவாகும் என கருதி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். பூமியில் தோன்றிய அனைத்து உயிரும் மரணம் அடையும் உயிரற்றவை அழியக்கூடியவை அல்லது மாற்றமடைபவை என்பதை நினைத்து, நாம் தவறு இழைப்பதற்கு அஞ்சுவோம்.

சாயியைப் பணிவோம் எல்லா நலனும் பெறுவோம்

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com