

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், பெங்களூருவில் உள்ள பிரபலமான அனுமன் கோயில்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
பிரசன்ன வீர ஆஞ்சனேயர் கோயில்
பெங்களூரு, மகாலட்சுமிபுரம், 4வது முக்கியத் தெருவில் அமைந்துள்ளது பிரசன்ன வீர ஆஞ்சனேயர் திருக்கோயில். இக்கோயிலில் 22 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைய ஆஞ்சனேயர் கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சனேயருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் 500 கிலோ வெண்ணெய் சாற்றுவது மிகச் சிறப்பான வழிபாடாக இருக்கிறது.
களி ஆஞ்சனேய ஸ்வாமி கோயில்
மைசூரு சாலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது களி ஆஞ்சனேயர் திருக்கோயில். 600 வருடப் பழமையான இத்தலம் வியாச ராஜாவால் நிறுவப்பட்டது. இத்தலம் உயரமான கோபுரத்தையும், விசாலமான கருவறையையும் கொண்டுள்ளது.
ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சனேய ஸ்வாமி கோயில்
பெங்களூரு, பனசங்கரி பகுதியில் 3வது பிரதான சாலையில் உள்ளது இக்கோயில். அற்புதமான கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் நடைபெறும் சடங்குகளும், ஆராதனைகளும் மிகச் சிறப்பு வாய்ந்தவை.
ராகிகுட்தா ஆஞ்சனேயர் கோயில்
பெங்களூரு, ஜெய சாலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ராகிகுட்தா ஆஞ்சனேயர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள ஆஞ்சனேயர் தினை(ராகி) குவியலிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. எனவே இவருக்கு ராகிகுட்தா என்று பெயர் வந்தது. இந்த கோயிலில் ராமர், சீதை, லட்சுமணருடன், சிவலிங்கமும் உள்ளது.
100 வருடப் பழமையான ஆஞ்சனேயர் கோயில்
நூறு வருடப் பழமையான இத்திருக்கோயில் பனஸ்வாடி அருகே உள்ளது. இக்கோயிலுக்குள் நுழையும் போதே நேர்மறை ஆற்றல் நம்முள் செயல்படுவது போன்ற உணர்வு தோன்றும். அனைவரும் நிச்சயம் காணவேண்டிய அனுமன் கோயில் இதுவாகும்.
102 அடி உயர அனுமன் கோயில்
பெங்களூரு, அகாரா என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மிக உயரமான பிரம்மாண்ட அனுமன் கோயில். இக்கோயில் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரம் பக்தர்களுக்கு அமைதியான சூழலைத் தருவதாக அமைந்துள்ளது.
ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் கோயில்
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் அமைந்துள்ளது சுந்தர ஆஞ்சனேயர் கோயில். இக்கோயிலில் 12 அடி உயர அனுமன் சிலை உள்ளது. இஸ்கான் புரோகிதர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஞ்சனேயருக்கு நடைபெறும் அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
யெலஹங்கா காடே ஆஞ்சனேயர் திருக்கோயில்
இது ஒரு பழமையான கோயிலாகும். இதன் வரலாறு கெம்பேகௌடாவின் காலத்திற்கு முந்தையது. இங்குள்ள அனுமன் கோயில் மக்களைக் கவரும் வகையில் அழகாக வடிவமைத்துள்ளது.
ஸ்ரீ கரஞ்சி ஆஞ்சநேய சுவாமி கோயில்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூருவின் பிரபலமான அனுமன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள அனுமன் சிலை சுமார் 16 அடி உயரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. நகரத்தின் மிக உயரமான அனுமன் சிலையாக இது கருதப்படுகிறது. கரஞ்சி ஏரிக்கரையில் இந்த கோயில் அமைந்துள்ளதால் கரஞ்சி ஆஞ்சனேய சுவாமி கோயில் என்று பெயர் பெற்றது.
ஹரகே அனுமன் கோயில்
பனசங்கரி அருகே அமைந்துள்ளது ஹரகே அனுமன் கோயில். இக்கோயில் பலரைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனுமன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீ பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில்
பெங்களூரு, சாம்ராஜ்பேட் அருகில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சனேயர் 19 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார். வராகன், கருடன், நரசிம்மர் மற்றும் ஹயக்கிரிவர் என ஐந்து தலைகளுடன் கம்பீரமாகப் பஞ்சமுக ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதுவே, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற அனுமன் திருத்தலங்களாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.