காதல் என்பது ஒரு புனிதம் அதைப்பற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

பின்வரும் பாடல் பூக்காரி எனும் 1972 ல் வெளிவந்த திரைப்படப் பாடலை முணுமுணுக்காதோர்..
காதல் என்பது ஒரு புனிதம் அதைப்பற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

பின்வரும் பாடல் பூக்காரி எனும் 1972 ல் வெளிவந்த திரைப்படப் பாடலை முணுமுணுக்காதோர் அப்போது இல்லை என்றே சொல்லலாம். ஆம் காதல் அவ்வளவு வலிமையான ஒரு தெய்வீகமான ஒரு வார்த்தை தான் அன்றும் இன்றும் என்றுமே..

உலகம் தோன்றியது முதல்  இந்த காதல் இருந்து கொண்டு தான் வருகிறது. அது இன்னும் நாளடைவில் வளர்ந்துகொண்டே தான் வருகிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. எனது அனுமானப்படி இது வளர்வதால் காதல் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதும் அனைத்து சமுதாயத்தினரும் அதனை ஏற்றுக்கொள்ளும் செயலைக் காணும் போது இந்த உலகமே அன்பைப் பரிமாறுவதால் மனித சமுதாயம் , அதன் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வது யாராலும் தடுக்க முடியாது. ஆனால் சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தும் போது உண்மையில் அவர்கள் மீது வெறுப்பு தோணவே செய்கிறது.  

சரி, பாடல் வரிகளைக் காண்போம்.

காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ...

உலகம் தோன்றியது முதல் காதல் இருந்து வருகிறது. இதனை ஜோதிட ரீதியாக ஆய்வுசெய்ய முடியுமா என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். ஒரு ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வரும்போதே பார்க்கின்ற ஜாதகத்தில் காதல் அமைப்பு இருந்தால், அதனைக் கொண்டுவந்தவரிடம் எச்சரிக்கை செய்யவேண்டியது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை ஆகும். அதை விடுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா இல்லையா என மட்டும் காண்பது தவறான செயலாகும். அந்த அமைப்பில் ஒருவருக்கு மட்டும் காதல் இருப்பதையோ அல்லது அந்த காதல் திருமணம் வரை அழைத்துச் செல்லுமா அல்லது திருமணம் தடை ஏற்படுமா அல்லது திருமணத்திற்குப் பின் திருமண முறிவில் முடிவடையுமா என்பதனை ஆராய்ந்து கூறுவதே ஒரு ஜோதிடரின் கடமை என்றால் அது மிகை ஆகாது. இதனால் அவர்கள் இரு வீட்டாரின் குடும்ப அவமானத்தைத் தவிர்க்கலாம். பல விதிகள் இருந்தாலும் அதனை சரியான முறையில் ஆராய்ந்து கூறுவது ஒரு ஜோதிடரின் கடமை ஆகிறது. 

காதல் பலவகை :-

காதல் பலவகை உள்ளது. ஒரே இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். கலப்பு இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். ஆணுக்கு வயது குறைந்தும் பெண்ணிற்கு வயது அதிகமாக உள்ள நிலையில் ஏற்படும் காதல். பெண்ணிற்கு வயது மிகக் குறைந்தும் ஆணிற்கு வயது அதிகமாகவும் உள்ள நிலையில் ஏற்படும் காதல். இருவருக்கும் அதிகமான வயதில் ஏற்படும் காதல். திருமணத்திற்கு பிறகும் ஏற்படும் காதல். கணவனை இழந்த பின் தனது குழந்தையைக்காக்கக் காரணமான ஒரு ஆணின் மேல் ஏற்படும் ஒரு கைம்பெண்ணின் காதல், அதே போல் மனைவியை இழந்ததினால் தமது குழந்தையைக் காக்கும் பொருட்டு ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதல், இப்படி பல வகையான காதல் உள்ளது. இனிவரும் காலங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பதென்பதே ஒரு கடினமான வேலையாகவும் ஏன் ஒரு சவாலாகவும் ஒரு ஜோதிடருக்கு இருக்கும் என்றால் அது மிகை இல்லை. 

காதலே வேலையாக இருப்பவர் யார் யார்?

காதலுக்கான பாவகம் 5ஆம் பாவகம் ஆகும். இந்த பாவகம் வலுப்பெறும் போது காதலிக்கின்றனர். இந்த பாவத்துடன் தொடர்பு கொண்ட தசா புத்தியாக வரும் காலங்களில் காதலே வேலையாக சிலர் இருப்பர். இந்த பாவகத்தில் நிற்கும் தீய கிரகங்கள் கூட காதலை ஏற்படுத்தும். ஒரே ஒரு வித்தியாசம் சுபக் கிரகங்கள் நல்லவிதமான காதலைத் தெரிவிக்கும்.

தீய கிரகங்கள் தகுதிக்கு குறைவான / ஜாதகரின் பெயரை, குடும்பத்திற்க்கான நல்மதிப்பை கெடுப்பதாக இருக்கும். ஒரு ஜாதகர் காதல் கொண்டுள்ளாரா இல்லையா என்பதனை ஒருவர் பிறந்த ஜாதகப்படி 2-5-7-11ஆம் அதிபதிகள் எந்தவகையிலாவது தொடர்பு கொண்டு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் காதல் வயப்பட்டுள்ளார் என உறுதியாக கூறிவிடலாம். அப்படிப்பட்ட தொடர்பில் 8ஆம் பாவம் தொடர்பு பெற்றிருந்தால் அந்த காதல் கொண்ட ஆண் - பெண் இருவீட்டாரும் சண்டையிட்டு பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கலாம். 12ஆம் பாவம் (விரைய பாவம் ) தொடர்பு பெற்றிருந்தால், நிச்சயம் காதல் திருமணம் தடைப்படும் அல்லது காதல் கொண்ட இருவரும் பண விரையம், உறவுகளை விட்டு (விரையம் ) வெகு தொலைவில் சென்று வாழும் நிலை ஏற்பட வாய்ப்பாகும். 

மேலே கூறிய பாவக தொடர்பு பற்றிச் சிறிது அறிந்துகொள்ளலாம். இரண்டாம் பாவம் குடும்பம் அமைப்பதை / அமைதலை அறிவிக்கும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் வருகையைத் தெரிவிக்கும். ஐந்தாம் பாவம் ஒருவரின் மேல் ஏற்படும் காதலை தெரிவிக்கும். ஏழாம் பாவம் திருமணம் அமைதலைத் தெரியப்படுத்தும். 11ஆம் பாவம் ஜாதகரின் ஆசை நிறைவேறுதலைக் குறிக்கும். 

காதலில் யார் முதலில் தேடிச் செல்வார், தம் காதலை முதலில் தெரிவிப்பார்:-

1. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் (சுக்கிரன் வீட்டில்) இருந்தால் ஜாதகர்  தமது காதலியை / மனைவியை நாடிச் செல்வார். தமது காதலை அவரிடம் முதலில் கூறுவார். 

2. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன், லக்கினத்தில் இருந்தால் இவரின் துணை இவரைத் தேடி வருவார். இவர் தேடிப் போகவேண்டியதில்லை. 

இனக்கவற்சியால் காதல் ஏற்படும்  நபர்கள் யார் யார்?

கால புருஷ தத்துவத்தின் படி அஷ்டமாதிபதி செவ்வாய் ஒருவரின் லக்கினத்திற்கு 8 , 12ல் இருக்கக்கூடாது. அதேபோல் கால புருஷ தத்துவத்தின் படி அயன, சயன, போகத்துக்கான அதிபதியாகிய குருவும் 8, 12ல் இருக்கக்கூடாது. அப்படி அமர்ந்தால், இனக்கவர்சியால் காதல் ஏற்படும். இப்படியான அமைப்பு உள்ளவர்களுக்கு இல்லற சுகம் சரியாக கிடைப்பதில்லை. அல்லது சரியான கால கட்டத்தில் கிடைப்பதில்லை. 
சரியான காலத்தில் கிடைத்தாலும் தம்பதிகளைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. எனவே இவர்கள் காதல் என்ற பெயரில் பல துணைகளைத் தேடிக்கொள்கின்றனர். 

காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள்:-

இப்படி காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள் எது என்றால், பிறந்த கால சந்திரனை / பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு, தொடக்கூடிய காலங்களில் தான் இந்த உணர்வு மேலோங்கிக் காணப்படும். 

காதலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :-

அப்படிப்பட்ட காலங்களில் தமது மனதை அடக்குவதற்காக யோகா, தியானம் போன்றவைகளை துணைகொண்டால் தவறான பாதைகளுக்குச் செல்லாமல் அதிலிருந்து தப்பிக்கலாம். காதல் என்ற பெயரில் விபரீத விளையாட்டுகளில் செல்வோர் அடையப்போவது துயரமே. இதனை மறவாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். காதல் ஒரு புனிதமான ஒன்று. அதனைக் களங்கப்படுத்தாமல் இருப்பது தான் ஒரு மானிட இனத்தின் பெரிய சவால் மற்றும் சாதனை ஆகும்.

சாயியைப் பணிவோம், அனைத்து நன்மைகளை அடைவோம்.

- ஜோதிட ரத்னா. தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு :  98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com