ஆண் வாரிசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு எது?

தர்ம கர்மாதிபதி யோகம், இந்த யோகமும் ராஜ யோகம் போல் அதி முக்கியமான யோகம் தான்..
ஆண் வாரிசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு எது?

(ஜோதிடப் பார்வையில்)

தர்ம கர்மாதிபதி யோகம், இந்த யோகமும் ராஜ யோகம் போல் அதி முக்கியமான யோகம் தான் என்ற போதும், அநேகர் இதை பற்றி கண்டுகொள்வதே இல்லை என்பது நடைமுறை உண்மை. இந்த யோகத்தின் உண்மை தாத்பரியத்தை அறிந்தவர்கள் மிகக் குறைவே. இந்த யோகம், செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, கெளரவம், சுகமான வாழ்க்கை அமைப்பு, தெய்வகாரியங்கள், ஆலய சேவை, திருப்பணிகள் செய்தல், அதிக கௌரவ பதவிகள் அடைதல் என்ற உயர்வான நிலைகளை அளிக்கும் என்றாலும், அதை விடவும் அதிமுக்கியமான ஒரு விசேஷ பலனையும் இந்த யோகம் செய்யும். அதுதான் கர்ம புத்திர வாய்ப்பு எனும் சந்ததி வளர்ச்சிக்கான புத்திர பாக்கியம், குறிப்பாக ஆண் வாரிசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு எது வகிக்கிறது என்பதனை அநேகர் அறியாத ஒன்றே, என அறுதியிட்டு கூறலாம். ஒன்பதாம் பாவம் தர்ம ஸ்தானம் எனவும், பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

இந்த இரு வீடுகளின் அதிபதிகளாக வரும் கிரகங்களே தர்ம, கர்மாதிபதிகள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு வீட்டு அதிபதி கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவருடன் மற்றவர் இணைந்தோ, ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்ந்தோ, வேறு எந்த வகையிலேனும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது அல்லது இருவரும் பலம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும் மிகச் சிறந்த யோகமாகும்.

தர்ம, கர்மாதிபதி யோகம் உள்ள ஜாதகம், சிறந்த ஜாதகமாக ஜோதிட சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. அந்த ஜாதகர் இப் பிறப்பில் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுகிறார். எனவே, தர்மம், கர்மம் ஆகிய இரண்டும் இணைந்தால், கடுமையான புத்திர தோஷம் இருந்தாலும் அது நீங்கி புத்திர பாக்கியம் ஏற்படுவதுடன் கர்மம் செய்வது எனும் தர்ப்பணம் செய்யும் ஆண்வாரிசு ஏற்படவும் செய்யும். தர்ம கர்மாதிபதி யோகம் ஒரு சில லக்கினங்களுக்கு எவ்வாறு பலன் தரும் அல்லது தராது என்பதனை காண்போம். ஒரு சில உதாரண ஜாதகங்களையும் இங்கு காணலாம். 

மேஷம்:- 

மேஷ லக்னத்துக்கு தர்ம, கர்மாதிபதிகள், குருவும் சனியும் ஆவார்கள். இந்த லக்னத்துக்கு சனியும், குருவும் ஒன்பது பத்தாமிடங்களில் பரிவர்த்தனை அடைவது நல்லதல்ல. இந்த அமைப்பில் ஒன்பதாம் அதிபதி குரு 10-ல் மகரத்தில் நீசம் பெறுவார் என்பதால் யோகம் கிடைக்காது. மேலும் மேஷத்துக்கு சனி பாதகாதிபதியும் ஆவார். அதைவிட இருவரும் தனித்தனியே ஒன்பது, பத்தாமிடங்களில் முறையே குரு தனுசிலும், சனி மகரத்திலும் ஆட்சி பெற்று அமர்வது நல்ல யோகத்தைத் தரும்.

ரிஷபம்:- 

பன்னிரண்டு லக்னங்களில் ரிஷபத்துக்கு மட்டும் தர்ம கர்மாதிபதி யோக அமைப்பு கிடையாது. யோகம் என்பதற்கு இணைவு அல்லது சேர்க்கை என்று அர்த்தம். இரண்டு கிரகங்கள் இணைவதே யோகம். ஆனால் ரிஷபத்துக்கு ஒன்பது, பத்தாமிடங்களுக்கு சனி ஒருவரே அதிபதியாக வருவதால் இந்த யோகம் கிடையாது. ஆயினும் ரிஷபத்துக்கு சனி, புதனுடன் மட்டும் கூடி (சுக்கிரனுடன் சேராமல்) நல்ல இடங்களில் சூட்சும வலுப் பெற்று, பலவீனம் அடையாமல், மகரம் தவிர்த்து மிதுனம், கன்னி, கும்பம், ஆகிய இடங்களில் பகைவர் பார்வை பெறாமல் அமர்வாரேயானால், சனி தசை 19 வருடமும், அதனையடுத்து வரும் புதன்தசை 17 வருடமுமாக மொத்தம் 36 வருடங்கள் தர்மகர்மாதிபதி யோகத்துக்கு இணையான யோகம் கிடைக்கும்.

மிதுனம்:-

மிதுனத்துக்கு தர்மகர்மாதிபதிகள் சனியும், குருவுமே ஆவார்கள். மிதுன லக்னத்துக்கு குரு பாதகாதிபதியாகவும், சனி அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால்  இந்த யோகம் சற்றுக் குறைவான பலன்களையே தரும். இந்த லக்னத்திற்கு குருவும், சனியும் ஒன்பது, பத்தாமிடங்களில் பரிவர்த்தனையாகி இருப்பது நல்லது. மிதுன லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகளான குரு, சனியின் தசைகள் 35 வருடங்களுள் ஏதாவது ஒரு தசைதான் நல்ல யோகம் செய்யும். ஒன்று யோகம் செய்தால், இன்னொன்று யோக பலன்களைத் தராது.

கும்பம்:-

கும்ப லக்னக்காரர்களுக்கு முதலிலேயே ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு யோகமுமே கும்பத்துக்கு முழுமையாக அமையாது. இது ஒரு கால புருஷத் தத்துவம். ஏனெனில் நவக்கிரகங்களில் யாருமே கும்பத்துக்கு முழுயோகராக மாட்டார்கள். கும்ப லக்னத்துக்கு தர்ம கர்மாதிபதிகள் சுக்கிரனும் செவ்வாயும் ஆவார்கள். இதில் சுக்கிரன் இந்த லக்னத்துக்கு பாதகாதிபதியாகவும், செவ்வாய் இந்த லக்னத்தின் அதிபதி சனி மற்றும் சுக்கிரனுக்கும் எதிரியாகவும் அமைவதால் இந்த யோகம் முழுமையாகப் பலன் தராது.
          
மீனம்:-

மீன லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதி யோகம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த லக்னத்தின் தர்மகர்மாதிபதிகளான செவ்வாயும், குருவும் தங்களுக்குள் நண்பர்கள் என்பதாலும், இருவரும் இந்த லக்னத்துக்கு லக்னாதிபதி மற்றும் தனாதிபதியும் ஆவார்கள் என்பதாலும் இந்த யோகம் வலுப்பெற்று ஜாதகருக்கு  நன்மைகளைச் செய்யும். லக்னத்தில் குரு ஆட்சி பெற்று, ஒன்பதாமிட செவ்வாயைப் பார்ப்பது மற்றும் இரண்டு, பத்தாமிடங்களில் இருவரும் பரிவத்தனை பெற்று, குரு தனுசில் இருக்கும் செவ்வாயைப் பார்ப்பது ஆகியவையும் தர்ம கர்மாதிபதியோகத்தைத் தரும் சிறப்பான அமைப்புகள்தான். இந்த லக்னத்தின் இன்னொரு யோகாதிபதியான சந்திரன், வளர்பிறை நிலையில் பலமான இடங்களில் அமர்ந்து குருவையும், செவ்வாயையும் பார்ப்பது அல்லது இவர்களுடன் இணைவது யோகத்தை மேலும் வலுப்படுத்தும்.

உதாரண ஜாதகம்

இந்த உதாரண ஜாதகத்தை கவனியுங்கள், 5 ஆம் இடத்தில் , ராகு நின்று புத்திர தோஷம் கொடுத்துள்ள ஜாதகம். சட்டென்று இதனை பார்த்ததுமே புத்திர தோஷம் உள்ள ஜாதகம், புத்திர பாக்கியமே ஏற்படாது என்று சொல்லி விடுவார்கள். ஆனால், இந்த ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளது. அதனால் கர்ம புத்திர வாய்ப்பான ஆண் வாரிசுகள் ஏற்பட்டுள்ளது.9 க்கு உடைய தர்மாதிபதியான புதனும், 10க்கு உடைய கர்மாதிபதியான சந்திரனும் 2 ஆம் இடத்தில் இணைந்துள்ளதால், 5ல் நின்று ராகு அளித்த புத்திர தோஷத்தை நீக்கி அடிபட செய்து புத்திர பாக்கியத்தை, அதுவும் ஆண் புத்திரம் உள்பட அளித்துள்ளது. எனவே, 5 ல் ராகு உள்ளதால் புத்திர தோஷம் உடைய ஜாதகம் என அவசர முடிவு எடுத்துவிட முடியாது. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com