எண்ணிலடங்கா பலன்களைத் தரும் சோமவார சங்காபிஷேகம்!

இன்று கார்த்திகை சோம வாரம்! கார்த்திகை மாதத்தில் வரும் நான்கு திங்கள் கிழமைகளுமே..
எண்ணிலடங்கா பலன்களைத் தரும்  சோமவார சங்காபிஷேகம்!
Updated on
1 min read

இன்று கார்த்திகை சோம வாரம்! கார்த்திகை மாதத்தில் வரும் நான்கு திங்கள் கிழமைகளுமே சிவாலயங்களில் விசேஷம் தான்! அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். 

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள். 
சென்னை திருமயிலை கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காரணீஸ்வரர், விருபாக்‌ஷிஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஸப்த சிவஸ்தலங்களில் மட்டுமல்லாது அனைத்து சிவாலயங்களிலும் இன்று சங்காபிஷேகம் நடைபெறுகிறது. 

ஜோதிடத்தில் கடல் சார்ந்த பொருட்களுக்கு காரகர் சந்திர பகவான். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். சந்திர சகோதரியான மகாலக்ஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரி சங்கு மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. 

தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லட்சுமி கடாட்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும். 

எனவே, சங்கின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொண்டு, சோமவார திங்கட்கிழமையான இன்று விரதமிருந்து சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு எண்ணிலடங்கா பலன்களைப் பெறுவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com