ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு எப்போது நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதனை பார்ப்பது எப்படி?

ஒருவரின் நல்லது கெட்டது என்பது ஒரு தனி நபராக இருப்பதை விட திருமணமான..
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு எப்போது நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதனை பார்ப்பது எப்படி?

ஒருவரின் நல்லது கெட்டது என்பது ஒரு தனி நபராக இருப்பதை விட திருமணமான ஒரு தம்பதியினரின் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமையே பெருமளவு பாதிப்பு இருக்கும்  எனும் கருத்தில், யாருக்கும் சந்தேகம் இருக்காது எனக் கருதுகிறேன். எனவே, ஒருவரின் திருமண சம்பிரதாயத்திற்கு முன் பார்க்கும் திருமணப் பொருத்தம் என்பது இருவரின்  எதிர்கால நன்மையை மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்பத்தினரின் சந்தோஷத்தையும் சார்ந்தது என்பது உண்மையானது தானே. 

ஒரு நபரின் ஜாதகத்தை வைத்து, அவருக்கு எப்பொழுது நல்ல காலம் என்பதை மிக சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். அதற்கு அவரின் ஜாதகத்தில் நடப்பு கிரகத்தின் திசை,  நடப்பு கிரகத்தின் புத்தி ஆகியவற்றை முதலில் குறித்துக்கொள்ள வேண்டும். அந்த திசை, புத்தி இருவரும் ஒருவருக்கொருவர் 6-8 நிலைகளில் அதாவது ஷஷ்டாஷ்டகமாக  இருக்கக்கூடாது. அதேபோல், 1-12 (லக்கினத்திற்கும், விரைய ஸ்தானத்திற்கும்) தொடர்பு நிலையிலும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி  நன்மையை செய்யாது. இதுதான் மிக சுலபமாக நல்ல காலம் பார்க்கும் சூத்திரம் (Formulae). இந்த சூத்திரத்தை வைத்து, அடுத்தடுத்து வரும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது உங்களுக்கு நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும்.

தசா புத்தி பலன்கள்:-

1ம் வீடு (லக்கினம்), 5ம் வீடு (பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் திரிகோணம்), 9ஆம் வீடு (பாக்கிய ஸ்தானம் மற்றும் ஒரு திரிகோணம்), 4ஆம் வீடு (சுக ஸ்தானம் மற்றும்  கேந்திரம்), 7ஆம் வீடு (கேந்திரம்), 10ஆம் வீடு (கேந்திரம்) ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல  பலன்கள் கிடைக்கும்.

இவைகள் அனைத்தையும் விட, 11ஆம் வீட்டு (லாப ஸ்தானத்தின்) அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்  கிடைக்கும். ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி  நடைபெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது.

கோச்சாரப் பலன்கள்:-

கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது. குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய  இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார். 1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய  இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்யமாட்டார். மூன்றாம் இட சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான் நல்குவார்.

குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்

"கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்

கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்

ஆளப்பா அகத்திலே களவுபோகும்

அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான்

கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட

குற்றமிலாகாந்தாரி மகனும் தானும்

வீளப்பா வீமன் கை கதையினாலே

விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!"

- புலிப்பாணி பாடல்...

தசா புத்திதான் மிக முக்கியம். அதற்கு அடுத்துதான் கோசாரப் பலன்கள். ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட யாவையும் ஒரு ஜாதகரின் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்திட  உதவும் வழிமுறைகளாகும். கோள்சாரம் ஒருவரின் குண மாற்றத்திற்கும், தற்காலிக சம்பவத்திற்கும் முக்கிய காரணம் ஆகும். தசா புத்தி, ஒருவரின் நிரந்தர  சம்பவத்திற்கும், நிரந்தரமானவற்றிற்கும், நீண்டகால செயல்களையும் குறிப்பதாகும். இவற்றை உதாரணத்துடன் சொல்வதானால், கோள்சாரம் என்பது கோபம், ஆசை,  வெறுப்பு, திருமணம் வரை செல்லாத காதல் போன்றவை ஆகும். திருமணம் செய்துகொள்ளக் காரணமான காதல் செய்ய தசா புத்தி குறிக்கும். திருமணம் செய்யாமல்  காதல் மட்டும் செய்வதை கோச்சாரம் குறிக்கும். நல்ல நிலையில் கோள்சாரம் இருந்து தசா புத்தியும் நன்கு அமைந்தால் காதல் திருமணம் வரை அழைத்துச் செல்லும்.

நமது கர்ம வினை தான் நம்முடன் நிழலாகத் தொடர்கிறது. அதனை ஒருவரின் பிறந்த கால / ஜனன கால ஜாதகத்தில் காண முடியும். யானை வரும் பின்னே மணி ஓசை  வரும் முன்னே என்பதற்கிணங்க செயல்பாடுகள் இருக்கும். உதாரணமாக ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் புதன் பாதகாதிபதியாக வருகிறார் என்றால், அல்லது  நீச்சமடைந்துள்ளார் என்றால், அல்லது கேட்டை போன்ற தனது நட்சத்திர காலில் நிற்கும்போது அவரின் ஆட்டம், இனிமே தான் பார்க்கப் போறீங்கன்னு சொல்றாமாதிரி  தெரியும்.

அதாவது, திருமண விஷயத்தில் புதன் ஒரு நேர்மையற்ற கிரகம் என்றால் அது சரியாகவே இருக்கும். எப்படி என்றால், திருமணம் ஆகிவிட்டது என்பதனை உணரவிடாத கிரகம் ஆகும். தொடர்ந்து காதல் புரிய வைக்கும் கிரகம். ஒன்றுக்கு மேற்பட்ட துணை / இணையைத் தேட முக்கிய பங்கு வகிப்பது புதனே ஆவார். கல்வி  கற்பவர்களுக்கு புதனின் புத்திக்கூர்மையை அளிப்பவராக மட்டும் இருந்து, திருமணம் ஆகாதவரை மற்றும் திருமணம் ஆனவரை ஆட்டி படைப்பவர் புதனே ஆவார்.

அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒருவரின் ஜாதகத்தில் அவரவர் கர்மாவின் படி இருக்கவேண்டிய இடத்திலிருந்து நல்லது கெட்டதை ஒரு சிறு மாற்றமும் இல்லாமல்  நடப்பதென்பது உண்மையிலும் உண்மை. சரி அப்படியானால் இதற்கெல்லாம் வடிகாலே / விடிவுகாலமே இல்லையா என்பது காதில் விழுகிறது. ஆம், நாம் நமது  வாழ்க்கையில் நேர்மையை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடித்தால் நிச்சயம் மலை போல வரும் துன்பம் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. இறை பக்தியும்  நேர்மையும் எந்தவித தீமையும் அளிக்காது.

சாயியைப்  பணிவோம் எல்லா நன்மையையும் அடைவோம்...

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே .லோகநாதன்

தொடர்புக்கு :- 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com