

திருமணம் அமையும் திசை:-
திருமணம் ஆகக் காத்திருக்கும் ஒவ்வொருவரும் தமக்கு வரும் வாழ்க்கைத் துணை எப்படி இருப்பார்கள், எங்கிருந்து வருவார்கள் அவர்களின் திசை எதுவாக இருக்கும் என ஏங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுக்கென்றே இந்தக் கட்டுரை. இப்போது மகிழ்ச்சி தானே.
இந்த கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைய இளவயது ஆண் மற்றும் பெண்கள், காதலிப்பதை என்னவென்று சொல்ல. ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் அவர்களின் பெண்ணுக்குப் பொருத்தம் பார்க்கவேண்டும் என்று. சரி என்று அவர்களின் பிறப்பு குறிப்புகள் பெற்றுக்கொண்டேன். அதில் இருவரின் பிறந்த வருடம் ஒன்றாகவே இருந்தது மற்றும் வெறும் 10 நாட்கள் தான் பையனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம். சரி சிலபேரது பெண்ணுக்கு அதிகமாக ஏறக்குறைய 8-10 வயது உள்ள ஜாதகம் கூட வருகிறது.
காரணம் வெகு நாளாக திருமணம் ஆகாத வரன்கள். மேலும் நிறைய வசதி உள்ளவர்கள் அவர்கள் போலும். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்ததில் அது நிச்சயம் காதலர்கள் போல் தான் என்பது தெரியவந்தது. மேலும் இருவருக்கும் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே வேறு நபர்களிடம் பார்த்ததாகவும் அவர்களும் இதனையே கூறியதால் பெண்ணை பெற்றவர்கள் என்பதால் பயப்படுகிறோம் என்றார்கள். அதாவது இருவருக்கும் கண்ட ரஜ்ஜூ, இவர்களை சேர்த்தால், பெண்ணுக்கு மரணம் என்பது பொதுவான ஜோதிடவிதி இதில் பயந்து தான் இவர்கள் கேட்கிறார்கள்.
எனது பலவித தொடர் கேள்விகளுக்குப் பின்னால் நான் நினைத்தது சரியாகவே இருந்தது. பெண்ணின் தாய் போல் பேசியது அந்த பெண்ணே தான் என்பது . காரணம் தான் இறந்துவிடுவோம் என்பதனை கண்டு பயந்து போயுள்ளாள். காதலிக்கும் போது பார்க்காத இவர்கள் திருமணம் எனவந்தவுடன் இவைகளைக் காரணம் காட்டி விலகுவதால் பல விபரீதம் நடக்கிறது. பிறகு அவர்களுக்கு, ஒரு தாரா பலம், சந்திரபலம், நேத்திரம், ஜீவன் போன்ற ஒரு நல்ல சுப முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து ஒரு கோவிலில் திருமணம் செய்விக்கும் போது எந்த விதமான பிரச்னையும் வராது என அறிவுறுத்தப்பட்டது.
அதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்றைய இளவயது ஆண் / பெண் இருவருக்குமான செய்தி என்னவென்றால், நிச்சயம் விரும்பும் பெண்ணை / ஆணை திருமணம் செய்துகொள்வேன் என உளமார கருதினாலும் அல்லது தைரியம் இருந்தாலும் மட்டுமே காதலிக்கலாம். இல்லையேல் அந்த திசைக்குப் போகாதீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கையை உங்கள் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்.
வரப்போகும் வாழ்க்கைத் துணையின் திசையைக் காணும் முறை :-
இதனை தோராயமாகவே தான் சொல்ல முடியும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்கினத்திற்கு 7 ஆம் அதிபதி எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிக்குரிய திசையை சொல்வதானால், 70-80 சதவீதம் சரியாக வரும். பிரசன்னம் பார்க்கும் ஜோதிடராக இருப்பின் அவர் கூறும் திசையும் கிட்டத்தட்ட இதுபோலவே தான் இருக்கும்.
பிறந்த கால ஜாதகம் சுட்டிக்காட்டிய திசையையே தசா நாதனும் சுட்டிக்காட்டினால், அத் திசையே வாழ்க்கைத் துணையாக வருபவரின் திசையாக நிச்சயம் இருக்கும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 7 ஆம் இடத்தில் ஒரு கிரகம் இருப்பதாக இருந்தால், ஏழாம் அதிபதியை விட்டுவிட்டு ஏழில் இருக்கும் கிரகத்தின் திசையை எடுத்துக்கொள்ளவேண்டும். இதே, ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 7 ஆம் இடத்தில் பல கிரகங்கள் இருந்தால், அந்த கிரகங்களின் பாகை வரிசைப்படி , எந்த கிரகம் அதிக பாகை பெற்றிருக்கிறது என அறிந்து அந்த திசையை சொல்லவேண்டும்.
இப்போது, கிரஹங்களின் திசைகளை அறிவோம். சூரியன் - கிழக்கு, சந்திரன் - வடமேற்கு , செவ்வாய்- தெற்கு , புதன் - வடக்கு, குரு - வடகிழக்கு, சுக்கிரன் - தென்கிழக்கு, சனி - மேற்கு. ராகு/கேது - தென்மேற்கு அல்லது அவை நிற்கும் வீட்டின் திசையாகும்.
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு;
ரிஷபம், கன்னி, மகரம் - தெற்கு ;
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு;
கடகம், விருச்சிகம் , மீனம் - வடக்கு ஆகும்.
மேற்சொன்ன விதிகளை மிகவும் ஆராய்ந்து பின்னர் அறிவிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு இங்கு இரண்டு ஜாதகங்களைக் காண்போம் :-
உதாரணம் -1
ஒருவர், மேஷ லக்கினம் என்று கொள்வோம். இந்த ஜாதகத்தில் , ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன். ஆனால் அங்கு புதன் நிற்பதால், புதனுக்குரிய திசை வடக்கு எனக் கூறவேண்டும். அவர் நிற்கும் ராசி துலாம் என்பதால், அது மேற்கு திசையைக் குறிப்பதாகும். இப்போது நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அந்த ஜாதகருக்கு வரப்போகும் வரன் ஆனது ஒன்று வடக்கிலிருந்து வரும் அல்லது வடமேற்கிலிருந்து வரும் என அடித்துக் கூறலாம். அது சரியாகவரும்.
உதாரணம் -2
இன்னொருவர், அவரும் மேஷ லக்கினம் என்று கொள்வோம். இந்த ஜாதகத்தில், ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன். ஆனால் அங்கு பல கிரகங்கள் நிற்பதாகக் கொள்ளுவோம். இப்போது அங்கு நிற்கும் கிரஹங்களில் எது அதிக பாகை பெற்றிருக்கிறதோ அந்த திசையையே எடுத்துக்கொள்ளவேண்டும். அது சரியாகவரும். உதாரண ஜாதகத்தில் குருவின் பாகையே அதிகமாக வருவதால், வடகிழக்கு திசையில் என்று தீர்மானிக்கலாம்.
சாயியைப் பணிவோம் எல்லா நன்மையையும் அடைவோம்...
- ஜோதிட ரத்னா தையூர். சி. வே .லோகநாதன்
தொடர்புக்கு :- 98407 17857
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.