குறைவிலா செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளியில் இதை மட்டும் பண்ணுங்க!

தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து,
லட்சுமி குபேர பூஜை
லட்சுமி குபேர பூஜை
Published on
Updated on
2 min read

தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான குபேரனையும் வைத்து பூஜித்தால் குறைவிலா செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்தவகையில், லக்ஷமி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். 

லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். 

லட்சுமி குபேர பூஜை வழிபடும் முறை!

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள்,

குபேராய நமஹ… தனபதியே நமஹ..

என்று மனதில் துதித்துகொண்டே இருக்கலாம். 

பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.

நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108  ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும்.  தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com