கர்ண பூஷணம் மற்றும் காதணி முக்கியமா?

 கர்ண பூஷணம் (காது குத்தல்) என்பது ஜோதிடத்தில் மூன்றாமிடத்தில் குறிக்கும் பாவம். கர்ணம் என்பது காது ஆகும்.
கர்ண பூஷணம் மற்றும் காதணி முக்கியமா?
Updated on
2 min read


  
கர்ண பூஷணம் (காது குத்தல்) என்பது ஜோதிடத்தில் மூன்றாமிடத்தில் குறிக்கும் பாவம். கர்ணம் என்பது காது ஆகும். நம் சிறு வயதில் குலதெய்வத்திற்கு மொட்டைபோட்டு காதணி விழா சிறப்பாக செய்து வைப்பார்கள். இந்த நிகழ்ச்சி ஆண் பெண் இருபாலருக்கும் அவரவர் சாஸ்த்திர சம்பிரதாயப்படி நடைபெறும். 

இந்த சம்பிரதாயத்தை இன்றும் சிலபேருக்கு குலதெய்வ குறையாக உள்ளது. அதனால் வயது ஆனாலும் பரவாயில்லை என்று குலசாமி சந்நிதியில் மொட்டை அடித்து காது குத்துகின்றனர். கர்ண பூஷண விழா நல்ல நாட்கள் பார்த்து சுற்றம் சூழ வாழ்த்த ஒரு வயத்துக்குள் விழாவாக கொண்டாடுவார்கள். இந்த விழா அவரவர் சடங்குபடி, அதற்குரிய திதி (த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி) மற்றும் அதற்குரிய நட்சத்திரப்படி (மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி) மற்றும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னப்படி நடைபெறும். இந்த நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்து கொடுப்பார்கள் அன்று குலசாமிக்கு படையல் போட்டு சிறப்புற நடத்துவார்கள். அக்காலத்தில் ஆண்களும் காதில் கடுக்கன் கட்டாயம் அணிந்திருப்பார்கள். ஆனால் இன்று காதில் பிளாஸ்டிக் காதணியை ஒற்றை காதில் போட்டுகொண்டு இருக்கிறார்கள். இது நம் நாட்டின் கலாசாரத்திற்கு நல்லது அல்ல.
 
ஜோதிட ரீதியாக எந்த கிரகம் அமர்ந்தால் எந்தமாதிரி காதணி அணிவார்கள் அவற்றின் காதணி பலன் என்ன என்னஎன்று ஜாதக அலங்காரம் கீழ்வரும் பாடல்கள் மூலம் கூறுகிறது. 

மூன்றா மிடத்தில் சுபகிரகம் 

முற்றும் பலமாய் உறநோக்க

மூன்றா மாதி பலவானாய்

இருக்க மூன்றில் உச்சர்உறத்

தோன்று கர்ண பூஷணங்கள்

சூடி யிருப்பன்சுகமாக 

ஆன்ற கர்ணா பரணத்தை 

அளிப்பார் இவரென் றறைவாரே!

மூன்றாமிடத்தில் சுபகிரகங்கள் பலம் பெற்று நின்றிருந்தாலும், அவ்விடத்தில் பலம் பெற்ற சுப கிரக பார்வையிட்டாலும், மூன்றுக்குடையவன் பலம் பெற்றிருக்க, மூன்றாமிடத்தில் ஏதாவது உச்சம் பெற்ற கிரகம் நின்றிருந்தாலும் அந்த ஜாதகன்தான் காதில் ஆபரணங்களை சௌக்கியமாக சீரும் சிறப்புமாக அணிந்திருப்பான். எந்த கிரகம் சம்பவத்தை பெறுகிறதோ அந்தவகை கிரகம் சம்பந்தப்பட்ட அதாவது தங்கமா, வெள்ளியா, வைடூரியம் கோமேதகமா, பிளாஸ்டிக்கா என்று காதணிகளை அணியும் பாக்கியம் கிட்டும்.

அறையும் மூன்றில் சுக்கிரனே

அமர்ந்தால் முத்து கடுக்கன்உறும்!

இறைவன் இருக்கில் அபரஞ்சி!

இரவி செவ்வாய்க்(கு)ரத்தினங்கள்!

அறையும் புதற்குச் சாமவன்ன

அணியும் சேரும் இதுவல்லால்

நிறையும் மதிஉற் றிடல்சகலா

பரணம் பெறுவர் நிச்சயமே!

இப்பாடலில் மூன்றாமிடத்தில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் காதில் முத்து கடுக்கன் அணிவான். குரு வீற்றிருந்தால் அபரஞ்சி (பொற்பூ) என்னும் அணியும், சூரியனோ செவ்வாயோ இருந்தால் ரத்தின கற்கள் பதித்த கடுக்கன், புதன் நீண்டிருந்தால் பச்சை கல் பதித்த கடுக்கன், சந்திரன் எனில் பலவகை ஆபரணங்கள் காதில் மாட்டிக்கொள்வான் என்று கற்களின் வரிசைப்படுத்துகிறது இப்பாடல்.

அக்குபஞ்சர் என்னும் முறை குழந்தை பருவத்தில் செய்யும் முறை ஆகும். ஆனால் இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது. நம் முன்னோர் காலம் தொட்டு இந்த காது குத்துவது என்பது சூட்சமபடி ஒரு அக்குபஞ்சர் முறை ஆகும். இவற்றால் உடலில் நிறைய நற்பலன்கள் கிட்டுவதாக கூறப்படுகிறது. நம் உடலில் 700க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளது. அவற்றில் நகை அணிவதற்கும் சூட்சமம் உள்ளது. அணிகலன்கள் ஆசை அழகுக்கு மட்டும் அல்ல அது உடலில் உலோகத்தன்மை கொண்டு மெருகேற்றும். அவற்றில் தங்கமா, வெள்ளியா, வைரமா, தாமிரமா என்று அவரவர் ஜாதகம் கொண்டு தீர்மானிக்கப்படும். அதனால் தான் நாம் இன்றும் திருமண சடங்கில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து பெண்களுக்கு மெட்டி அணிய வைக்கும் வைபோகம் நடத்தப்படுகிறது. 

இடுப்புகீழ் பகுதி சுக்கிரன் ஆட்சி அங்கு வெள்ளியால் ஆன கொலுசு, மெட்டி என்று போட்ட காரணமே கர்ப்ப பை மற்றும் கால்கள், நரம்புகள், தசைகள் வலுபெரும். மற்றொரு எடுத்துக்காட்டாக பெண்கள் நெற்றிச்சரம், மூக்குத்தி அணிவதால் தலைவலியோ சைனஸோ வராது என்றும் ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இன்னும் இதை பற்றி விவரமாக பின்பு பார்ப்போம். நாம் இன்று காது குத்தல் பற்றி பார்ப்போம். 

ஒரு மனிதனின் காதில் 120 மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. சரியாக எதாவது புள்ளியில் அவர்கள் காதணி போட்டால் உடல் ரீதியாக சக்திபெறும் அதாவது கண்கள் சக்தி பெரும், நொதி (enzyme) சீர்படும், இன்னும் பல சீரான உடல் மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் காரணம் இன்றிக் காரியம் நிகழாது. அதேபோல் காரியம் நிகழ்ந்திருப்பதைக் கொண்டு காரணம் ஒன்று உண்டு என்பதை சூட்சமமாக நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து செயல்களும் அமையும். அவற்றை இக்காலத்தில் பெரியோர் சொல்வதை நாம் கேட்டு செயல்படுவது நன்று.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com