அக்கரைப்பட்டியில் அழகிய தென் ஷீரடி!

இந்துக்களுக்கு காசியும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேமும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் செல்வது எப்படி புனிதப்பயணமாக விளங்குகிறதோ....
அக்கரைப்பட்டி தென் ஷீரடி
அக்கரைப்பட்டி தென் ஷீரடி
Published on
Updated on
3 min read

இந்துக்களுக்கு காசியும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேமும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் செல்வது எப்படி புனிதப்பயணமாக விளங்குகிறதோ, அதைப்போலவே உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் அனைத்து சாய் பக்தர்களுக்கும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாய் பாபாவின் ஷீரடிக்கு செல்வதை புனிதப் பயணமாகவே கருதுகின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து ஒரு சில மணிநேரங்களில் ஷீரடிக்கு பயணப்படுவது என்பது எளிதானது. இருப்பினும், தென்னிந்திய அளவில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பக்தர்களுக்கு ஷீரடி என்பது வெறும் கனவாகவே அமைந்து விடுகிறது. பயண தூரம், பயணச் செலவு, பயணத்திற்கான நாட்களும், நேரங்களும் சாய் பாபாவை தரிசித்து விட வேண்டும் என்ற ஆவலை மெய்ப்படவிடாமல் செய்து விடுகிறது. சாய்பாபா தனது பக்தர் ஒருவருக்கு கனவில் தோன்றி வெளிப்படுத்திய விருப்பத்தின் அடிப்படையில் தமிழகத்தின் மையப்பகுதியும், ஆன்மீக மாநகரமுமான திருச்சியை தேர்வு செய்து இங்குள்ள அக்கரைப்பட்டி என்ற இடத்தில் தென் ஷீரடி என்ற பிரமாண்டமாக ஆலயம் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாய் பக்தர்கள் தங்களது பிரார்த்தைனைக்காகவும், சாய் பாபாவிற்கு ஆராதனை செலுத்துவதற்காகவும் சிறிய அளவிலான கோயில்களை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இருப்பினும், சாய் பக்தர்கள் அனைவருக்கும் ஷீரடி புனிதப்பயணம் என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. அவர்களது கனவை நினைவாக்கும் வகரையில் தென் ஷீரடியை கட்டமைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு நிகராக எந்த அம்சங்களிலும்  குறைவில்லாமல் தத்ரூபமாக கட்டிடக்கலையில் தொடங்கி, சமாதி மந்திர், சாவடி, துவாராகாமாயி, லெண்டித்தோட்டம் ஆகியவற்றோடு அச்சு அசலாக அதே மகிமையோடும், கம்பீரத்தோடும் தனக்கான ஆலயத்தை முழுவதுமாக பக்தர்களின் உதவியுடனேயே எழுப்பப்பட்டுள்ளது.

ஷீரடியில் இருக்கும் சாய் பாபாவின் திருமேனியைப் போலவே தென்ஷீரடியிலும் 5 அடி 5 அங்குல உயர வெண் பளிங்கு திருஉருவத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஷீரடியில் சாய்பாபா தனக்கான இருப்பிடத்தை ஒரு வேப்பமரத்தின் அடியில்தான் அமைத்துக்கொண்டார். தென்ஷீரடியிலும் அற்புதம் பொங்க அதேபோன்ற வடிவில் வேப்பமரத்தின் அடியில்தான் தனக்கான குருஸ்தானத்தை அமைத்துள்ளார். இங்கு 2010ம் ஆண்டு ஏப்ரல் 21ல் சாய்பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் 2016 பிப்ரவரி 12ஆம் தேதி தென்ஷீரடி ஆலயத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. சாய்பாபாவின் கட்டளைப்படியே கடந்த 4 ஆண்டுகளாக பக்தர்களின் அளித்த உதவியின் பலனாக ஆலய கட்டுமானம் நிறைவுற்று திங்கள்கிழமை (ஜன.20) குடமுழுக்கு விழாவுக்கு தயாராகி நிற்கிறது.

ஷீரடியில் நடப்பதைப் போலவே அங்கு கடைபிடிக்கப்படும் அதே நேரத்தில் தென் ஷீரடியிலும் தினமும் 4 வேளை அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6.30 மணிக்கு காக்கட் ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மத்யான் ஆரத்தி, மாலை 6 மணிக்கு தூப் ஆரத்தி, இரவு 7 மணிக்கு சேஜ் ஆரத்தி என இடைவிடாமல் ஆரத்தி பூஜைகள் நடக்கின்றன. கோயிலின் துவாரகாமாயியிலும் அணையா நெருப்புத் தனல் கொண்ட துனி அமைக்கப்பட்டு பக்தர்கள் வேண்டுதலுக்காகவும், நேர்த்திக்கடனாகவும் காணிக்கையாக அளிக்கும் மட்டைத்தேங்காய் கொண்டு ”உதி”  (விபூதி) பிரசாதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

தினமும் 100 பேருக்கு மேல் ஒரு வேளை அன்னதானம், வியாழக்கிழமைகளில் 4 வேளை அன்னதானம் நடக்கிறது. சாய்பாபாவிற்கு உகந்த வியாழக்கிழமைகளில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளாக பங்கேற்கின்றனர். அன்றைய தினம் சாய்பாபாவின் திருவுருவத்தை கோவிலைச்சுற்றி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பல்லக்கில் ஊர்வலமாக சுமந்து செல்கின்றனர்.

உச்சிப்பிள்ளையாரும், தாயுமானவரும் குடிகொண்ட மலைக்கோட்டை, அரங்கநாதர் பள்ளிகொண்ட திருப்பதிக்கு நிகரான திருவரங்கம், பஞ்சபூதங்களில் நீருக்கு உரியதாக ஜம்புகேஸ்வரர் ஆட்சி செய்யும் திருவானைக்கோவில், அகிலம் போற்றும் அம்மனாக அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன் கோவில், வயலூர் முருகன் கோயில் வரிசையில் திருச்சிக்கு பார் முழுவதும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது அக்கரைப்பட்டி தென் ஷீரடி.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com