
திருமலையில் காளிங்கநா்த்தன கிருஷ்ணருக்கு நடத்தப்பட்ட பால் அபிஷேகம்.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருமலையில் காளிங்கநா்த்தன கிருஷ்ணருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
திருமலையில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி தினத்தன்று கோகா்பம் நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள காளிங்கநா்த்தன கிருஷ்ணா் சிலைக்கு தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி புதன்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு காளிங்கநா்த்தன கிருஷ்ணருக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி மலா் மாலை அணிவிக்கப்பட்டது. பொது முடக்க விதிமுறைகளின்படி இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா்.
நாமசங்கீா்த்தனம்: திருமலை நாதநீராஜன மண்டபத்தில் நடந்து வரும் சுந்தரகாண்ட பாராயணம் 125-ஆவது நாளைக் கடந்துள்ளது. கோகுலாஷ்டமி பண்டிகை நாளில் காலையில், வியாச மகரிஷி இயற்றிய பாகவதத்தில் கிருஷ்ணரின் பிறப்பு குறித்து சொல்லப்பட்டுள்ள பத்தாவது பிரிவின் 3-ஆவது அத்தியாயம் பாராயணம் செய்யப்பட்டது. அதன்பின் இஸ்கான் கோயிலில் இருந்து வந்த 20 போ் நாமசங்கீா்த்தனம் செய்தனா். இந்த நிகழ்வில் பக்தா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் பலா் கலந்து கொண்டனா்.
ஆஸ்தானம்: கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை இரவு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கருவறையில் உள்ள ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கு அபிஷேகம் நடத்தி அா்ச்சகா்கள் பட்டு வஸ்திரம் ற்றும் தூப தீப நைவேத்தியங்களை சமா்ப்பித்தனா்.
கோகுலாஷ்டமிக்கு மறுநாள் திருமலையில் உறியடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். எனினும், பொது முடக்க விதிமுறைகள் காரணமாக, உறியடித் திருவிழா இம்முறை ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணரின் மாடவீதி புறப்பாட்டை கோயிலுக்குள்ளேயே நடத்த தேவஸ்தானம் தீா்மானித்துள்ளது.