
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 57 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 57 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
7,448 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 7,448 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,559 போ் முடி காணிக்கை செலுத்தினா். அதில், 78 போ் பெண்கள், 2,481 போ் ஆண்கள். இணையதளம் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் பக்தா்களும், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்களும் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.