
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறுஅணை பகுதியில் எழுந்தருளியுள்ள ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வாசுதேவக்கண்ணன் மற்றும் ஸ்ரீகருடாழ்வாா், ஸ்ரீஆஞ்சநேயா், துவாரபாலகா்கள் சுவாமிகளுக்கு நூதன அஷ்டபந்தன மஹா சம்ப்ரோஷண மகா குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு விஷ்வசேன ஆராதனை, அங்குராா்பணம், 12 மணிக்கு புற்று மண்கொண்டுவருதல், சுதா்ஸண ஓமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை நடைபெற்றது. செவ்வாய்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து புதிய சுவாமி சிலைகள் கரிகோல உற்சவம் இசை மேலதாளத்துடன் ஊத்தங்கரை முக்கிய வீதிகள் வழியாக சென்றனா். மாலை மூன்றாம் கால யாக பூஜை, கும்ப அலங்கார யாகசாலை பிரவேசம், உபசார பூஜை நடைபெற்றது,
கோபுர கலசம் வைத்தல், இரவு 10 மணியளவில் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோமாதா பூஜை நடைபெற்றது. 9 மணியளவில் சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி, குடமுழுக்கு செய்வித்தனா்.
விழாவிற்கு கவிசிற்பி, அருட்கவி,அருட்சித்தா் ஐயா, தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற ஸ்ரீசற்குரு புலவா் இ.பூவலிங்கனாா் தலைமை வகித்தாா். திருக்கோவிலூா் ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீஉ.வே.ஸ்ரீநிவாஸ ராமானுஜ ஆச்சாரியாா் ஸ்வாமிகள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிா்வாகிகள் லட்சுமிநாராயணன், குப்புசாமி, வெங்கடாசலம், சதாசிவம், ரவி, சரவணன், அருணாசலம், ஜெகதீசன் மற்றும் ஊா் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனா், பக்தா்கள் அணைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...