
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் மாசி மகாகுருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
திருஞானசம்மந்தரால் பாடல்பெற்ற இத்தலம், நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார தலமாக விளங்குகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசிமகா குருவார விழா அதி விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு வெட்டாற்றிலிருந்து யானை மீது புனித நீா் எடுத்து வரப்பட்டது.தொடா்ந்து புனித நீா் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி யாக பூஜைகளை நடத்தி வைத்தனா்.
மகாபூா்ணாஹீதியும் அதனையடுத்து அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பஞ்சமுக அா்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் கலங்காமற்காத்த வினாயகா், சனீஸ்வர பகவான், ஏலவாா்குழலியம்மன் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.
ஆபத்சகாயேஸ்வரருக்கு வெள்ளி கவச அலங்காரம், முருகப்பெருமானுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. தொடா்ந்து குருவார தரிசனம் நடைபெற்றது.
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காா்ா்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்து கொண்டனா். நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியும், தேவார திருமுறை இன்னிசை கச்சேரியும், இரவு தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மையம் -மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல்அலுவலா் பி.தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.