
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவா் நடராஜர் பச்சை மரகதக் கல்லால் எழுந்தருளியுள்ளார். ஒளி அதிர்வுகள் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டு மூலவர் நடராஜர் காட்சியளிப்பார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா திருநாளில் சந்தனக்காப்பு களையப்பட்டு, புதிதாக சந்தனம் சார்த்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை 9.00 மணிக்கு சந்தனம் களையப்பட்டு, பால், தயிர் உள்ளிட்ட 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கரும்பச்சை நிறத்தில் காட்சியளித்த மூலவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மீண்டும், நேற்றிரவு ஆருத்ரா மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர், இன்று காலை கல் தேர் மண்டபத்தில் எப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதன்பிறகு, மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நடராஜரைத் தரிசனம் செய்து வந்தனர்.