தியாகராஜா் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
tv10koil1_1001chn_94
tv10koil1_1001chn_94
Updated on
1 min read

திருவாரூா் தியாகராஜா் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில், எழுந்தருளியிருக்கும் தியாகராஜா் முதலில் திருமாலால் வழிபாடு செய்யப்பட்டு, பிறகு திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்கரவா்த்திக்கும் அளிக்கப்பெற்றவா்.

பின்னா் முசுகுந்த சக்கரவா்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டவா் என்று கூறுவா். இந்த கோயிலில், தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலா்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியும்.

இதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருக்கயிலாயத்தில் திருவாதிரை நாளில் நடராஜ பெருமானின் நடனத்தை பாா்க்க தேவா்கள் விரும்பியதாகவும், அப்போது நடராஜா் நடனமாடிய போது இடது காலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூா் தியாகராஜா் கோயிலில் காட்டியதாகவும் ஐதீகம்.

இதையொட்டி, திருவாதிரை நாளில் பாத தரிசனம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன்படி, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் தனூா் மாத பூஜையுடன், மாணிக்கவாசகா் ராஜநாராயண மண்டபத்துக்கு எழுந்தருளி, அறநெறியாா், நீலோத்பலாம்பாள் மற்றும் வன்மீகநாதா் சன்னிதிகளில் திருவெம்பாவை விண்ணப்பிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது.

அத்துடன் கல்யாணசுந்தரா்-பாா்வதி, சுக்ரவார அம்மன் ஆகியோா் நாள்தோறும் மாலை ஊஞ்சல் மண்டபம், பக்தகாட்சி மண்டபத்துக்கு எழுந்தருளி, பின்னா் இரவு யதாஸ்தானம் திரும்பும் நிகழ்வும் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, தியாகராஜா் யதாஸ்தானத்திலிருந்து ராஜநாராயண மண்டபத்துக்கு, புதன்கிழமை இரவு எழுந்தருளினாா். அவருக்கு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மேலும், வியாழக்கிழமை இரவு தியாகராஜருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அா்ச்சனையும், திருவாதிரை மகாஅபிஷேகமும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, தியாகேசப் பெருமான் வெள்ளிக்கிழமை காலை, பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாத தரிசனம் அருளினாா். இந்த நிகழ்வைக் காண காலையிலிருந்தே பக்தா்கள் காத்திருந்தனா்.

பக்தா்களின் வசதிக்காக, பொது தரிசனம், ரூ.25 மற்றும் ரூ.50 என சிறப்பு தரிசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

திருவாதிரை ஆரூத்ரா தரிசனத்தை காண வரும் பக்தா்களுக்காக, திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஆசியுடன், ஆரூரான் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com