Enable Javscript for better performance
இந்த வாரம் (ஜன.10-16)எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் (ஜன.10-16) எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

  Published on : 10th January 2020 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrology

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஜனவரி 10 - ஐனவரி 16) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மனக்குழப்பங்களிலிருந்து விடுபட்டு செயல்களை நன்கு திட்டமிட்டு சரியாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்வரும் இடையூறுகளை புத்தி சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அலுவலக வேலைகளை கூடுதல் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் பார்த்து பழகவும். விவசாயிகள் கொள் முதலில் லாபம் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் சென்று பெறுவீர்கள். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும். ரசிகர்களை அரவணைத்துச் செல்லவும். பெண்மணிகள் மற்றவர்களது பேச்சை முழுமையாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துப் பழகவும். 

  மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடியும்.

  பரிகாரம்: பிள்ளையாரை அருகம்புல் சார்த்தி வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 11. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  சுப காரியங்கள் நடக்கும்.  உடன்பிறந்தோர் வகையில் இருந்த பிணக்குகள் தீரும். உடல் ஆரோக்கியம் பலப்படும். பணவரவு சுமார். குடும்பத்தில் அமைதி நிலவும். புதுமை செய்யும் எண்ணத்தில் தவறுகள் செய்து வருத்தப்பட நேரிடும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பிரச்னைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய குத்தகைகளையும் எடுக்க முயற்சிக்கலாம்.

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களது உதவிகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் பலன் அடையமுடியும். முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனளிக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை நிலவும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பெருகும். மாணவமணிகள் படிப்பில அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

  பரிகாரம்:  குலதெய்வ வழிபாடு செய்து வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 10, 12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் இருந்தாலும் இறுதியில் சரியாக முடியும். பொருளாதாரம் சிறக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை பெருகும். உடன்பிறந்தோரிடம் விட்டுக்கொடுத்து நடக்கவும். 

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் தள்ளிப்போடுவதைத் தவிர்த்து, உடனுக்குடன் முடிக்க பழகிக்கொள்ளவும். வியாபாரிகளுக்கு அலைச்சல்கள் அதிகமாகும். அகலக்கால் வைக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் வராது. விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். 

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்வார்கள். பிறரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். 

  பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

  பரிகாரம்:  வெற்றிலை மாலை சார்த்தி ஆஞ்சநேயரை வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 12. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச்செலவுகள் கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உத்தியோக விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திட்டமிட்டபடி நடக்கும். விவசாயிகளுக்கு கொள் முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். 

  அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்களே இடைஞ்சல் செய்வார்கள். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப்பேச வேண்டாம். கலைத்துறையினர் முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடவும். தீவிர ஆலோசனைக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் செய்யவும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். மாணவமணிகள் எதிர்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் வெற்றிகரமாக அமையும். உடல்நலம் காக்க உடற்பயிற்சி செய்யவும்.

  பரிகாரம்:  அம்பாளை மணமுள்ள மலர்மாலை சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  செயல்கள் நேர்த்தியாக நிறைவேறும் காலகட்டமாகும். சுபச்செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். மருத்துவச் செலவுகளும் உண்டாகலாம். உறவினர்களிடமும் உடன்பிறந்தோரிடமும் நல்லுறவு உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சிறிது இழுப்பறியாகவே முடிவடையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சிலருக்கு உத்யோக பிரிவில் மாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் விரிவாக்கம் செய்து லாபம் பெருக்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். மாற்றுப் பயிர் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். 

  அரசியல்வாதிகள் புகழ் ஏணியில் ஏறத்தொடங்குவீர்கள். கட்சித்தலைமையின் கட்டளையை நிறைவேற்ற நல்ல பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வருமானமும் இருமடங்காகும். பணவரவிற்கு குறைவு இராது. 

  பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வர். உடல் நலத்தைக் கவனிக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டில் கவனமுடன் ஈடுபடவும்.

  பரிகாரம்:  தினமும் 108 முறை ராமநாமம் எழுதி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 14. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  தொழிலில் ஸ்திரத் தன்மை உண்டாகும். கணிசமான முதலீடுகளைச் செய்வீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வம்பு வழக்குகள் சரியான முடிவை நோக்கிச் செல்லும். எதையும் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறுவார்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு சேமிப்பையும் உழைப்பையும் அதிகரிப்பது நல்லது. விவசாயிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். மகசூல் நன்றாக இருக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். முக்கியப் பயணங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவும் சீராகவே இருக்கும். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பதில் சற்று சிரமப்படுவார்கள். மாணவமணிகள் கல்வியில் மிகுந்த அக்கறை எடுத்து, விடியற்காலையில் எழுந்து பாடங்களைப் படிக்கவும்.

  பரிகாரம்:  புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உகந்தது.

  அனுகூலமான தினங்கள்: 11, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபவிரயம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் நட்பு மேலோங்கும். பொருளாதாரம் மேம்படும். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான சூழல் தென்படும். செலவைக்கூட்டிக்கொள்ளாமல் சேமிப்பை அதிகப்படுத்துங்கள். விவசாயிகள் அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். நெல்விளைச்சல் லாபகரமாக இருக்கும். 

  அரசியல்வாதிகளின் திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறும். மாற்றுக் கட்சியினரின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுத் தரும். ரசிகர்களின் ஆதரவும் உந்து சக்தியாக இருக்கும். 

  பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள்.

  பரிகாரம்:  செந்திலாண்டவரை மாலை சாற்றி வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 15. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிப்பீர்கள். எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகளில் சிறு தடைகள் உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனமுடன் இருக்கவும். உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது.  

  உத்தியோகஸ்தர்கள் தொழிலில் அதிக சிரமங்கள் ஏற்பட்டு விலகிவிடும். மேலதிகாரிகளின் பார்வையும் கண்டிப்பும் அதிகமாகும். பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் வராது. விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் செயல்பட்டால் அனைத்தும் ஜெயமாகும். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடித்தாலும் பணவரவு தாமதமாகும். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குடும்பத்தாரிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். யோகா பயிற்சிகளை மேற்கொண்டு மனதை உற்சாகமாக வைத்திருங்கள்.

  பரிகாரம்:  பார்வதி பரமேஸ்வரரை தரிசனம் செய்து வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 15. 

  சந்திராஷ்டமம்: 10.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் சீராக இராது. தக்க மருத்துவ ஆலோசனை அவ்வப்போது பெறவும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு விரிசல்கள் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைச்சுமை குறையும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் உண்டாகும். நண்பர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் இருப்பதால் புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் லாபமடைவீர்கள். எல்லைப்பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளவும். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். திட்டமிட்ட வேலைகளில் கண்ணும் கருத்துமாக ஈடுபடவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர் மூலம் நல்ல வாய்ப்பு தேடி வரும். 
  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. மாணவமணிகள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும்.

  பரிகாரம்:  ராமபக்த ஆஞ்சநேயரை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 16. 

  சந்திராஷ்டமம்: 11, 12.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  உங்கள் பேச்சுக்கு ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் ஆதரவும் பயணங்களால் லாபமும் உண்டு. உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வீர்கள். எதிர்பாராத வகையில் பொருள்கள்  சேரும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகளின் ஆதரவுடன் விரும்பிய இடமாற்றம், ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். 

  அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சில குறுக்கீடுகள் ஏற்படும்.  கலைத்துறையினர் பல தடங்கல்களுக்கு மத்தியில் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

  பரிகாரம்:  அஷ்டமி தினங்களில் காலபைரவரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 16. 

  சந்திராஷ்டமம்: 13, 14.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  மகிழ்ச்சிகரமான காலகட்டமாகும். திட்டமிட்ட காரியங்களைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொட்டதெல்லாம் ஜெயமாகும். நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் புகழ், பெருமை வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம்  தேவை.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் நடைபெறும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.  வியாபாரிகள் சில பிரச்னைகளைச் சந்தித்து அதிலிருந்து மீள்வார்கள். 
  விவசாயிகள் குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வார்கள். கால்நடைகளால் கூடுதல் நலமுண்டு. வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். 

  அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். 

  பெண்மணிகள் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். கணவரிடம் அன்யோன்யம் கூடும். மாணவமணிகள் எதிர்பார்த்தபடியே மதிப்பெண்கள்  கிடைக்கும். பெற்றோர் ஆதரவு பெருகும்.

  பரிகாரம்:  வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 13, 14. 

  சந்திராஷ்டமம்: 15, 16.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) 

  முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதாரத்தில் எந்த குறையும் இல்லை. உடன்பிறந்தோர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகும். கால்நடைகளால் சந்தோஷம் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பார்கள். சக ஊழியர்களிடம் பரஸ்பரம் நட்பு எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். வாக்குத் தவறி தொழில் வட்டாரத்தில் விரோதம் சம்பாதித்துக்கொள்ள நேரிடும். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகி பணவரவு கூடும். 

  அரசியல்வாதிகளைத் தேடி பதவிகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்துத் தீர்க்கவும். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.பெண்மணிகளுக்கு கணவரிடம் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரோடு பாசத்துடன் பழகுவீர்கள். 

  மாணவமணிகளின் படிப்பில் சிறிது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் படிப்பு சம்பந்தமாக கலந்தாலோசிக்கவும்.

  பரிகாரம்:  விநாயகப்பெருமானை அருகம்புல் சாற்றி வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்:  இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai