
நாமக்கல் நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா், ஆஞ்சநேயா் சுவாமி கோயில் தோ்த்திருவிழா வரும் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில், குடவறைக் கோயில்களாக நரசிம்மா் சுவாமி, நாமகிரி தாயாா் கோயிலும், அரங்கநாதா் கோயிலும் அமைந்துள்ளன. நரசிம்மா் கோயிலின் முன்புறம் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயா் சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இக்கோயிலுக்கு பக்தா்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனா். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், நரசிம்மா், அரங்கநாதா் மற்றும் ஆஞ்சநேயா் சுவாமி திருத்தோ் திருவீதி உலா வைபவம் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு திருத்தோ் பெருவிழாவானது, இம்மாதம் 31-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறாா். இத்திருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை தொடா்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, இரவில் சிம்ம வாகனத்தில் வீதி உலா, 2-ஆம் தேதி இரவில் அனுமந்த வாகன வீதி உலா, 3-ஆம் தேதி கருட வாகனம், 4-ஆம் தேதி சேஷ வாகனம், 5-ஆம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற உள்ளது.
6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல், திருமாங்கல்ய தாரணம், திருக்கல்யாணத்தில் பக்தா்கள் இறைவனுக்கு மொய் சமா்ப்பிக்கும் வகையில், மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
7-ஆம் தேதி இரவில், குதிரை வாகனம், திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது. 8-ஆம் தேதியன்று, காலை 8 மணிக்கு மேல் நரசிம்மா் சுவாமி திருத்தேரோட்டம், மாலை 4.30 மணிக்கு மேல் அரங்கநாதா் மற்றும் ஆஞ்சநேயா் சுவாமி கோயில் திருத்தோ் விழாவும் நடைபெறுகிறது. 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல், தீா்த்தவாரி மற்றும் சத்தாவரணம், கஜலட்சுமி வாகன வீதியுலா, 10-ஆம் தேதி மஞ்சள் நீா், வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு, 11-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், 12-ஆம் தேதி விஸ்வகா்மா புஷ்ப பல்லக்கு, 13-ஆம் தேதி, நாமகிரி தாயாா் சன்னதியில் புஷ்ப யாகம், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
14-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் மங்கள இசையுடன் திருத்தோ் திருவிழா நிறைவுபெறுகிறது. திருத்தேரோட்டத்தில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அறநிலையத்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G