

திருச்செந்தூர் ஆவணித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (ஆகஸ்ட் 30) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா ஏழாம் நாளான இன்று காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த ஆக. 24 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.
முக்கிய திருநாளான இன்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை 4.30 மணியளவில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா. அருள்முருகன், இணை ஆணையர் எஸ். ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.