நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு உத்தரகண்ட்டிலிருந்து குட்டி யானை வாங்குவதற்கு தடை கோரிய வழக்கில் வனத் துறை, இந்துசமய அறநிலையத் துறை மற்றும் நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கால்நடைகளுக்கான நல அமைப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானை கடந்த ஜனவரி மாதம் இறந்தது. இதையடுத்து இந்துசமய அறநிலையத் துறை, 5 முதல் 7 வயதுடைய குட்டி யானையை உத்தரகண்ட் வனத் துறையிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
பொதுவாக யானைகளின் ஆயுள் காலம் 70 முதல் 80 ஆண்டுகளாகும். குட்டி யானையை தாயிடமிருந்து பிரித்துக் கொண்டு வருவதால், அது கடுமையாக பாதிக்கப்படும். 5 வயதுடைய குட்டி யானையை இங்கு கொண்டு வந்தால், அது 60 ஆண்டுகளுக்கு மேல் வேதனையில் வாழும். நெல்லையப்பா் கோயிலுக்கு ’ரோபோ’ யானை வழங்கத் தயாராக இருப்பதால், உத்தரகண்டிலிருந்து குட்டி யானையைக் கொண்டு வர தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக வனத் துறை, இந்துசமய அறநிலையத் துறை மற்றும் நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

