திருப்பாவை - பாடல் 1

மார்கழி மாதத்தில், சந்திரன் நிறைந்து காணப்படும்
Published on
Updated on
1 min read

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேல் ஓர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

கன்னிப் பெண்கள் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வாய்க்க வேண்டும் என்று பாவை நோன்பு இருக்கும் பழக்கம் சங்ககாலத்திலும் இருந்ததாக பல சங்க காலத்து இலக்கியங்கள் பாடல்கள் உணர்த்துகின்றன. அவ்வாறான பாவை நோன்பு இருப்பதற்கான காலம் (மார்கழி மாதம்), நோன்பு நோற்கும் தகுதி படைத்தவர்கள் (திருமணம் ஆகாத சிறுமியர்கள்), நோன்பினால் கிடைக்கும் பலன் (வேண்டுவன அனைத்தும் கிட்டுதல்) ஆகியவை இந்த பாசுரத்தின் முதல் பாடலில் உணர்த்தப்படுகின்றன. நேரிழை = அழகிய ஆபரணங்கள் அணிந்தவர்கள்; பறை என்பது ஒருவகை தோல் இசைக்கருவி. நோன்பு வெற்றியாக முடிந்த பின்னர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஆடல் பாடல்களில் திளைப்பதற்கு உதவும் வண்ணம் பறை இசைக்கருவி தரப்படும் என்று உணர்த்தும் பாடல். பறை என்பதற்கு இறையருள் என்று பொருள் கொண்டு, இறைவனுடன் சேரத் துடிக்கும் ஆன்மாவுக்கு தகுந்த பரிசு இறைவனால் அளிக்கப்படும் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை    

மார்கழி மாதத்தில், சந்திரன் நிறைந்து காணப்படும் பௌர்ணமி நாளில் நீராட வந்திருக்கும், அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் சிறுமிகளே, சிறப்பு மிகுந்த ஆய்ப்பாடியில் வசிக்கும் செல்வச் சிறுமிகளே, கையினில் கொண்டுள்ள கூரான வேல் கொண்டு பகைவர்களைத் தாக்கி வெற்றி கொள்ளும் நந்தகோபனின் குமாரனும், அழகான கண்களை உடைய யசோதையின் மகனும், இளம் சிங்கம் போன்று காணப்படுபவனும், கரிய நிறம் படைத்த மேனியை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று ஒளிவீசம் முகத்தினை உடையவனும் ஆகிய, நாராயணின் அம்சமாகிய கண்ணன், நாம் வேண்டுவது அனைத்தும் அளிக்க வல்லவன். உலகத்தார் புகழும் வண்ணம், நீராடிய பின்னர் பாவை நோன்பு நோற்க இருப்பவர்களே வாருங்கள், வாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com