திருப்பாவை - பாடல் 7

பகவானுடன் இணைந்து இருப்பதை விடவும்
Published on
Updated on
1 min read

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்ந்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ    
தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்

பகவானுடன் இணைந்து இருப்பதை விடவும் பாகவதர்களுடன் இணைந்து இருந்து ஒருவருக்கு ஒருவர், பகவானைப் பற்றிய செய்திகளை பரிமாறிக்கொள்வது, சிறந்த வைணவர்களுக்கு மிகவும் பிடித்த செயலாக கருதப்படுகின்றது. அந்த செய்தியினை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் கருதப்படுகின்றது. கேசவனின் புகழினை நாங்கள் பாடுவதை கேட்ட பின்னரும், எங்களுடன் வந்து சேர்ந்து, அதை அனுபவிக்காமல் படுக்கையில் கிடத்தல், தலைவிக்கு புகழ் சேர்க்கும் செய்கையா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகின்றது. இரவில் விழித்திருந்து பகலில் தூங்கும் பழக்கம் கொண்டவை பேய்கள் என்பதால். பொழுது விடிந்த பின்னரும் உறங்கும் பெண்ணினை, நீ என்ன பேய்ப் பெண்ணா, இன்னும் உறங்குகின்றாயே என்று பரிகாசம் செய்வது போன்று பேய்ப்பெண்ணே என்று நயமாக அழைப்பதை நாம் உணரலாம். தேஜஸ் என்ற வடமொழிச் சொல் தேசு என்று மாற்றப்படுவது தமிழ் இலக்கிய மரபு. இங்கே தேசம் என்று எதுகை கருதி மாற்றப் பட்டுள்ளது. மாயனாகிய கண்ணன் செய்த இன்னொரு மாயச்செயல் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. குதிரை வடிவத்தில் வந்த கேசி என்ற அரக்கனை அடையாளம் கண்டுகொண்டு அவனை அழித்தமையால் கேசவன் என்ற பெயர் வந்தது.

பொழிப்புரை

மதி கெட்டு, பேய் போன்று பொழுது விடிந்த பின்னரும் தூங்கும் பெண்ணே, காலைப் பொழுதில் இரை தேடுவதற்காக வெளியே புறப்பட்டு செல்லவிருக்கும் வலியன் குருவிகள், தாங்கள் பிரிய வேண்டிய நிர்பந்தத்தை வெளிப்படுத்தி ஒன்றுக்கொன்று கீசுகீசு என்று தங்களுக்குள்ளே பேசுவது உனது காதுகளுக்கு எட்டவில்லையா, நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர் குலத்துப் பெண்மணிகள், தாங்கள் கழுத்தினில் அணிந்துள்ள அச்சுத் தாலியும் ஆமைமருப்புத் தாலியும் ஒன்றுக்கொன்று மோதி கலகல என்ற சத்தத்தை எழுப்பும் வகையில் தங்களது கைகளை அசைத்து, மத்தினைக் கொண்டு தயிர் கடையும் பேரொலியும் உனது காதுகளுக்கு எட்டவில்லை போலும். தலைவியாக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய பெண்ணே, நாராயணனாகிய கண்ணன், குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரைனைக் கொன்ற வெற்றியை புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னரும் நீ படுக்கையில் படுத்தவாறே இருக்கின்றாயே, கண்ணனின் மீது மிகுந்த அன்பு கொண்டவளாக இருக்கும் நீ, வெளியே வந்து கண்ணனின் வெற்றியைக் கொண்டாடாமல் படுக்கையில் கிடக்கலாமா, நமது விரோதி கேசி ஒழிந்துவிட்டான் என்ற நிம்மதியில் பயம் ஏதுமின்றி உறங்குகின்றாயா, ஒளி மிகுந்த முகத்தினை உடையவளே வந்து வாயில் கதவினை திறப்பாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com