ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்
மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
பாடியவர் - மயிலை சற்குருநாதன்
பாடியவர் கரூர் சுவாமிநாதன்
விளக்கம்
போது = மலர்கள். போதார் அமளி = பூப்படுக்கை. வளருதல் = தூங்குதல். தூக்கம் என்ற சொல் மங்கலச் சொல்லாக கருதப்படுவதில்லை. மேலும் சிறு குழந்தைகளின் தூக்கத்திற்கு ஏற்றவாறு குழந்தையின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் தாலாட்டு பாடல்களில் தூக்கம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு கண் வளராய் என்று பாடுகின்றார்கள். வாள் தடங்கண் = அகலமாகவும், வாள் போன்று கூர்மையாகவும் காணப்படும் கண்கள்.
வன்செவி = வலிமையான செவி, தாங்கள் பாடுவதை கேட்டும், தூக்கம் கலைந்து எழுந்திராமல் இருப்பதால், இரும்பால் செய்யப்பட்ட வலிமையான செவியோ என்று வெளியில் இருக்கும் ஒருத்தி கூறுகின்றாள். ஏதேனும் ஆகாள் = ஒன்றுக்கும் பயன்படாமல் இருத்தல்.
பொருள்
ஆதியும் அந்தமும் இல்லாத, அரிய சோதியாகிய சிவபெருமானை நாங்கள் பாடுகின்றோம். எங்களது பாடலைக் கேட்ட பின்னரும், வாள் போன்று கூர்மையாகவும் அகலமாகவும் காணப்படும் கண்களை உடைய பெண்ணே, நீ உறங்குகின்றாயே, உனது செவிகள் என்ன இரும்பினால் செய்யப்பட்ட வலிமையான செவிகளா, எங்களது பாடல் உனது காதில் விழவில்லையா? இவ்வாறு முதல் தோழி, வீட்டின் உள்ளே இருக்கும் தோழியைப் பற்றி குறையாக சொல்ல, அதற்கு பதில் அளிக்கும் முகமாக அடுத்த தோழி பின்வருமாறு கூறுகின்றாள். பெருமானின் நீண்ட பாதங்களை நாம் வாழ்த்தி பாடிய பாடல்களைக் கேட்ட அவள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் விம்மி, விம்மி தன்னையே மறந்துவிட்டாள். ஆனால் அனிச்சைச் செயலாக அவளது உடல் படுக்கையில் புரள்கின்றது. இது தான் உள்ளே இருக்கும் தோழியின் நிலை. எனவே அவளை குற்றமாக ஏதும் கூறாதீர்கள். மாறாக அவளது நிலை பாராட்டுக்கு உரியது என்பதை உணருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.