மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக் குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
பாடியவர் - மயிலை சற்குருநாதன்
பாடியவர் - கரூர் சுவாமிநாதன்
விளக்கம்
பொக்கம் = பொய். படிறீ = வஞ்சகம் நிறைந்தவள். ஏலம் = கூந்தலில் பூசப்படும் சாந்து. கோதாட்டும் = குற்றங்களிலிருந்து நீக்கும். கோலம் = வடிவம். சீலம் = எளிமையான தன்மை. தங்களது வலிமையினால் செருக்கு கொண்டு, நீண்டு நெடியதாய் நின்ற தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தாங்கள் கண்டுவிடலாம் என்று திருமாலும் பிரமனும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் காணமுடியவில்லை. அகந்தைக்கு ஆட்படாத இறைவன், அன்புக்கு கட்டுப்பட்டு தனது உருவத்தை அடியார்களுக்கு காட்டுவான் என்பது சைவ சித்தாந்தம். எனவே தனது அன்பினால், தான் இறைவனை கண்டுவிடுவேன் என்று, வீட்டினில் உள்ளே இருக்கும் பெண் பேசியதை, சுட்டிக்காட்டி அவளது தோழிகள் கூறுவதாக அமைந்த பாடல். இறையுணர்வில் ஈடுபடும் பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள், என்பது திருப்பாவையில் வரும் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இந்தப் பெண், தனது முடிக்கு வாசனை தரும் சாந்தினை பூசிக்கொள்வது அவளது போலியான அன்பினை வெளிப்படுத்துகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், ஏலக் குழலி என்று அவளை அழைக்கின்றார்கள்.
பொருள்
திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம் என்று, இதற்கு முன்னர் வீம்பாக பேசிய பெண்ணே, பால் போன்றும் தேன் போன்றும் இனிமையாக பேசும் வஞ்சகியே, நீ எழுந்து வந்து உனது வீட்டு வாயிலைத் திறப்பாயாக: உனக்கு இறைவன் பால் உண்மையில் அன்பு உள்ளதென்றால், நாங்கள் விண்ணோர்களும் மண்ணோர்களும் அறிய முடியாத அவனது உருவத்தை பாடியபோதே நீ எழுந்திருக்க வேண்டும்: அவனது உருவத்தை பாடிய நாங்கள், அவன் நம்மை ஆட்கொண்டு நமது குற்றங்களை நீக்கிய, பெருமானது எளிய தன்மையை பாடிய போதும் நீ எழவில்லை. அத்துடன் நிற்காமல் நாங்கள் சிவனே சிவனே என்று உரக்க கூவியதையும் உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நீ, சிவபெருமான் பால் வைத்திருக்கும் அன்பு உண்மையானது அல்ல. பாவை நோன்பு நோற்கும் நாங்கள் அனைவரும், எங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. அனால் நீயோ, உனது முடிக்கு நறுமணம் தரும் சாந்தினை பூசிக்கொள்கின்றாய். இதிலிருந்து உனது அன்பின் தன்மை எத்தகையது என்பதை நாங்கள் அனைவரும் கண்டுகொண்டோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.