மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்
பாடியவர் - மயிலை சற்குருநாதன்
பாடியவர் - சுந்தர் ஓதுவார்
விளக்கம்
நென்னல் = நேற்று. தலையளித்து = கருணை செய்து. வான் வார் கழல் = ஆகாயத்தில் விளங்கும் அழகிய திருவடி. பெண்களின் பார்வையை மானின் மருண்ட பார்வைக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. சென்ற பாடலைப் போன்று இந்த பாடலும் வெளியே நிற்பவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. வானும் நிலனும் அறிய முடியாதவன் என்று இங்கே, வானத்தில் உள்ள விண்ணவர்களையும், பூவுலகில் உள்ள மண்ணவர்களையும் குறிக்கின்றார்.
பொருள்
மான் போன்று மருண்ட பார்வை உடைய பெண்மணியே, நேற்று நீ பேசும்போது, நானே வந்து உங்கள் அனைவரையும் வந்து எழுப்புவேன் என்று கூறினாய். அந்த பேச்சு, காற்றில் எந்த திசையில் பறந்து சென்றது என்பதை எங்களுக்கு கூறுவாயாக; சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாத நீ அதற்கு வெட்கம் கொள்ளாமலும் இருப்பது விந்தையாக இருக்கின்றது. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலும். வானுலகத்திலும், பூவுலகத்திலும் உள்ளவர்கள் அறிய முடியாத சிவபெருமான், நம் மீது கொண்ட கருணையினால், அவன் தானே இறங்கிவந்து நம்மை ஆட்கொண்டருளி ஆகாயத்தில் விளங்கும் தனது திருவடிகளை, நமக்குத் தந்துள்ளான். அவனது திருவடிகளின் சிறப்பினை நாங்கள் பாடிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் நீயோ, வாயிற்கதவைத் தான் திறக்கவில்லை, உனது வாயினைத் திறந்தாவது ஏதேனும் வார்த்தை பேசலாம் அல்லவா. ஏன் அதுவும் செய்யாமல் இருக்கின்றாய்? அவனது புகழினைக் கேட்ட பின்னரும் உள்ளமும் உடலும் உருகாமல் இருக்கும் நிலை உனக்கே உரிய தனித் தன்மை. அவ்வாறு இருக்கும் உனக்கும், எங்களுக்கும், உலகில் உள்ள ஏனையோருக்கும் தலைவனாக உள்ள சிவபெருமானின் புகழினை நாங்கள் பாடிக்கொண்டு இருப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.