கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்
பாடியவர் - மயிலை சற்குருநாதன்
பாடியவர் - சுந்தர் ஓதுவார்
விளக்கம்
குருகு = பறவை. ஏழில் = ஏழு துளைகளை உடைய இசைக் கருவி, நாதசுரம். கேழில் = ஈடு இணையற்ற. ஏழை = உமையம்மை. இந்த பாடல் முழுவதும் வெளியில் இருப்பவர்கள் கூற்றாக அமைந்துள்ளது. ஆழியான் = திருமால். பெருமான் மீது கொண்டிருந்த அன்பினால், ஒரு பூ குறையக் கண்டு, தனது கண்ணையே தோண்டி எடுத்து இறைவனுக்கு மலராக சமர்ப்பணம் செய்த அன்பின் தன்மை. தன்னுடன் ஒத்து வாராதவர்களை, நீ வாழ்ந்து போவாயாக என்று இளக்காரமாக கூறுவது போன்று, இங்கே உறக்கம் கலையாமல் இருக்கும் பெண்ணைப் பார்த்து, நீ இன்பமாக தூங்கி வாழ்வாயாக என்று ஏளனப் பேச்சு ஒலிப்பதை நாம் உணரலாம்.
பொருள்
பொழுது புலரப்போவதை உணர்த்தும் வகையில் கோழி கூவியதைக் கண்டு, மற்ற பறவைகளும் கூவிவிட்டன; பல இடங்களிலும் ஏழு துளைக் கருவிகளைக் கொண்ட நாதசுரம் எனப்படும் இசைக் கருவி முழங்கின. வெண் சங்குகளும் ஒலித்தன. ஈடு இணையற்ற பரம்பொருளின், ஒப்பற்ற கருணையை நினைத்து சிறந்த பொருள் நயம் கொண்ட பாடல்களை நாங்கள் பாடினோம். இவை எதையும் நீ கேட்டு பொழுது புலர்ந்துவிட்டது என்பதை உணரவில்லையா? அப்படி என்ன ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளாய்? தொடர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்து நீ வாழ்வாயாக. தனது கண்ணினையே பறித்து மலராக இறைவனுக்கு அர்ப்பணம் செய்த திருமாலைப் போன்று, சிவபிரானிடத்தில் அன்பு கொண்டவள் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் உனது அன்பு தூக்கத்தின் பால் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். உனது தூக்கம் கலைந்த பின்னர், ஊழிக் காலத்தையும் கடந்து நின்ற இறைவனை, உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானை, எங்களுடன் சேர்ந்து நீயும் உனது வாய் திறந்து நீ பாடுவாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.