திருவெம்பாவை - பாடல் 10

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத
Published on
Updated on
1 min read

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - சுந்தர் ஓதுவார்

விளக்கம்

சொற்கழிவு = சொல்லின் எல்லையைக் கடந்தவன், சொல்லுக்கு அப்பாற்பட்டவன். நீராட குளத்திற்குச் சென்ற பெண்கள் தங்களுக்கு முன்னே அங்கே வேறு ஒரு பெண்கள் கூட்டம் இருந்ததைக் கண்டனர். கன்னி மாடத்தில் இருந்துகொண்டு, கோயில் திருப்பணியை தங்களது முழுநேரப் பணியாக கொண்டவர்கள் இந்த பெண்கள். பிணாப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் இந்த பெண்கள், தங்களது இறைத்தொண்டின் மூலமாக இறைவனைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், தங்களது ஐயங்களை அவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முயற்சி செய்யும் பாடல். சிவபெருமானைப் பற்றி தாங்கள் அறிந்த விவரங்களை பாடலின் முதல் ஐந்து அடிகளில் சொல்வதையும் நாம் உணரலாம்.

பொருள்

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள்: நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியோ அனைத்து பொருட்களின் முடிவுகளையும் கடந்தது. உமை அம்மையைத் தனது உருவத்தின் ஒரு பகுதியில் ஏந்தியுள்ள பெருமானின் திருவுருவம் ஒன்றல்ல. உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் அவன் கலந்திருப்பதால். அனைத்து உயிர்களின் வடிவங்களும் அவனது திருவுருவங்கள். வேதங்கள், தேவர்கள், மற்றும் மனிதர்கள் அனைவரும் அவனது புகழினைச் சொல்ல முயற்சி செய்தாலும், எவராலும் சொல்ல முடியாத அளவுக்கு பெருமையினை உடையவன். அவன் அடியார்களின் தோழன்; எப்போதும் அடியார்களின் நடுவே உள்ளவன். குற்றமற்ற குலத்தைச் சார்ந்த பெண்களே, சிவபெருமானின் கோயிலில் திருத்தொண்டு புரியும் பிணாப்பிள்ளைகளே, சிவபெருமானது ஊர், அவனது திருநாமங்கள், அவனது உற்றார் மற்றும் அயலார்கள், அவனைப் புகழ்ந்து பாடும் தன்மை ஆகியவற்றை எங்களுக்கு எடுத்துரையுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com