திருவெம்பாவை - பாடல் 11

திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே,
Published on
Updated on
1 min read

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்

மொய் = வண்டுகள். தடம் = அகன்ற, மொய்யார் தடம் பொய்கை = வண்டுகள் மொய்க்கும் அகன்ற குளம். மருங்குல் = இடை. எய்யாமல் = இளைத்து வருந்தாமல். இறைவன் செய்யும் ஐந்து தொழில்களும், அவன் எந்த சிரமும் மேற்கொள்ளாமல் செய்யப்படுவதால், விளையாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது, நீர்நிலைகளில் முங்கி நீராடும் சமயத்தில் கை கால்களை அசைத்துக்கொண்டு ஆரவாரம் செய்தவாறு நீராடுதல் இயல்பு. பாவை நோன்பு நோற்கும் இந்த பெண்களும் ஆரவாரம் செய்தவாறு நீராடுகின்றார்கள். ஆனால் அந்த ஆரவாரத்தில் வெளிப்படுவது பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை விளக்கும் சொற்களாகும்.

பொருள்

வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி எழுப்பிய வண்ணம் எங்களது கைகளால் குடைந்து குடைந்து நீராடுகின்றோம். அவ்வாறு நீராடுகையில் உனது திருப்பாதங்களின் சிறப்பினை பாடியவாறு நீராடுகின்றோம். சிவபெருமானை வணங்கி வழிபட்டு வரும் பரம்பரையில் வந்த நாங்கள் எப்போதும் உன்னை நினைத்து வாழ்ந்து வருகின்றோம். கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு போன்று செம்மையான நிறத்தை உடையவனே, திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே, வீடுபேறு எனப்படும் நிலையான செல்வத்தை உடையவனே, சிறிய இடையினையும், மை பூசியதும் அகன்று காணப்படுவதும் ஆகிய கண்களை உடைய பார்வதி தேவியின் மணாளனே, உனது திருவருளின் உதவியினால், உனது திருவிளையாடல் மூலம், வாழ்வினில் உய்வினை அடையும் அடியார்கள் பல படிகளைக் கடந்து முன்னேறுவது போன்று, நாங்களும் எங்களது வாழ்வினில் உன்னை எப்போதும் புகழ்ந்து பாடும் இந்த நிலையினை அடைந்துள்ளோம். நாங்கள் இனிமேல் பிறவிப் பிணியில் அகப்பட்டு, பல பிறவிகள் எடுத்து வருந்தி இளைக்காதவாறு நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com