திருவெம்பாவை - பாடல் 18

அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில்,
Published on
Updated on
1 min read

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - பொன் முத்துக்குமரன்

விளக்கம்

வீறு அற்றாற்போல் = ஒளி மழுங்கி காணப்படுதல். கண் ஆர் இரவி = கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன். கரப்ப = மறைக்க. தாரகை = நட்சத்திரம்.

பொருள்

அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில், தங்களது தலைகளைச் சாய்த்து வழிபடும் தேவர்களின் கிரீடத்தில் உள்ள பலவகையான மணிகள், இறைவனின் திருப்பாதங்களின் ஒளியின் முன்னே தங்களது பொலிவை இழக்கின்றன. அது போன்று, நமது கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன் உதிக்கும் சமயத்தில் இருள் அகலுகின்றது, மற்றும் வானில் அதுவரை ஒளியுடன் திகழ்ந்த நட்சத்திரங்கள் ஒளி மழுங்கி அகல்கின்றன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும், ஒளி நிறைந்த ஆகாயமாகவும், நிலமாகவும் இருக்கும் இறைவன், மேலே குறிப்பிட்ட பொருட்களிலிருந்து வேறாகவும், நமது கண்களில் நிறைந்த அமுதமாகவும் உள்ளான். அவனது திருவடிகளைப் பாடியவாறு, தாமரைகள் நிறைந்த இந்த குளத்தினில் நாம் பாய்ந்து நீராடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com