திருவெம்பாவை - பாடல் 19

பாவை நோன்பு நோற்பதன் நோக்கமே, தங்களது விருப்பபடி
Published on
Updated on
1 min read

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - பொன் முத்துக்குமரன்

விளக்கம்

பாவை நோன்பு நோற்பதன் நோக்கமே, தங்களது விருப்பபடி, கண் நிறைந்த கணவன் அமைய வேண்டும் என்று வேண்டுவது தான். எத்தகைய கணவன் தங்களுக்கு அமைய வேண்டுமென்று, தங்களது விருப்பத்தை இறைவனிடம் சமர்ப்பித்து, வேண்டும் பாடல். நமது இந்து மதத் திருமணங்களில் தொன்றுதொட்டு சொல்லப்படும் ஒரு சொல், இங்கே பாடலின் முதல் பகுதியாக வருகின்றது. தனது பெண்ணை, தனது மருமகனிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் தகப்பனார், சொல்லும் வார்த்தை தான் அது. தான் இத்தனை நாள் பாதுகாத்து வந்த பெண்ணை, இன்று உன்னிடம் அடைக்கலமாகத் தருகின்றேன், இனிவரும் நாட்களில் அவளை பாதுகாக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்பதுதான் அது. தனக்கு வரும் கணவர், சைவநெறியினை பின்பற்றுவராக இருக்க வேண்டும் என்ற கவலை நீராடும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. தாங்கள் அந்நாள் வரை செய்துவந்த சிவ வழிபாடு, தங்களது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஆசையில் விளைந்த கவலை இது.

பொருள்

எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திருமணத்தில், எங்களுக்கு கணவராக வாய்க்கவிருக்கும் ஆண்மகனிடம் சொல்லப்போகும் சொல். பரம்பரை பரம்பரையாக அனைத்து தந்தையரும் சொல்லும் அந்தச் சொல், எங்களது உள்ளத்தில் அச்சத்தை தோற்றுவிக்கின்றது. ஒருகால் எங்களது கணவர், உன்னுடைய அடியாராக இல்லாமல் இருந்துவிடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகின்றது. உன்னிடம் எங்களது விருப்பமான தீர்மானத்தை உரைக்கின்றோம், நீ அதனைக் கேட்டு அந்த விருப்பம் நிறைவேறுமாறு அருள் புரிவாயாக. எங்களது மார்புகள், உனது அன்பர் அல்லாதவரின் தோள்களைச் சேரக் கூடாது. எங்களது கைகள் உன்னைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்திற்கும் பணி செய்யக் கூடாது. இரவும் பகலும் எப்போதும் எங்களது கண்கள் உன்னைத் தவிர வேறு எவரையும் காணக் கூடாது. இத்தகைய பரிசினை, நீ எங்களுக்கு அருளினால், நாங்கள் எந்த கவலையும் இன்றி வாழ்வோம். தினமும் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிப்பது போன்று, உலகினில் நடக்கும் நிகழ்வுகள் மாறினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com