திருப்பாவை - பாடல் 8

தங்களது தலைவியை எழுப்பிய ஆய்ப்பாடி பெண்கள்,
திருப்பாவை - பாடல் 8
Updated on
1 min read

கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு    
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி


விளக்கம்

தங்களது தலைவியை எழுப்பிய ஆய்ப்பாடி பெண்கள், அடுத்து கண்ணனால் மிகவும் கொண்டாடப்படும் சிறுமியின் இல்லத்திற்கு செல்கின்றார்கள். நோன்பு நோற்கவிருக்கும் இடத்தில் பல சிறுமிகள் ஏற்கனவே கூடியிருக்கும் செய்தியை உணர்த்தி, நாம் அனைவரும் விரைந்து செல்லாம் என்று, அந்த சிறுமிக்கு உணர்த்தும் பாடல். அரக்கர்களை தனது மாயத்தால் வென்ற கண்ணன் அரசவை மள்ளர்களையும் அழித்தான் என்று இந்த பாடலில் கூறும் ஆண்டாள் பிராட்டியார், கண்ணன் தன்னை நெருங்கும் எதிரிகளை மட்டுமே கொள்வான் என்பதே உணர்த்தும் வண்ணம், அவனது அடியார்களாகிய நாம் அவனை நெருங்கினால், நமது தேவைகளை ஆராய்ந்து அறிந்து, நாம் அந்த தேவைகளை வெளிப்படுத்தும் முன்னரே, நமக்கு அளிப்பான் என்று தெளிவுபடுத்தும் பாடல்.

பொழிப்புரை

கண்ணனுக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பதால் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்ணே. கிழக்கே வானம் வெளுத்து விட்டது, ஆய்ப்பாடியில் உள்ள எருமைகள் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு வரலாம் என்று புல்வெளியில் பரந்துள்ளன. நோன்பு செய்யும் இடத்தில் பல சிறுமியர்கள் கூடியுள்ளார்கள்; மற்ற பெண்களும் அங்கே சென்று அங்குள்ள சிறுமிகளுடன் சேர்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளார்கள்; ஆனால் நாங்கள் தான் அவர்களை அங்கே செல்லவிடாமல் தடுத்து, உன்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்லலாம் என்று உனது வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம். எனவே பெண்ணே, நீ உறக்கத்திலிருந்து எழுவாயாக, குதிரை முகம் கொண்ட அசுரனின் வாயினைப் பிளந்தவனும், கம்சனின் அரசவை மல்லர்களான சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகியோரை அழித்து வெற்றி கொண்டவனும், தேவர்களுக்குத் தலைவனாக விளங்குபவனும் ஆகிய கண்ணபிரானை நாம் அனைவரும் சென்று சேவித்தால், கண்ணபிரான் தனது வாயினைத் திறந்து வாருங்கள் என்று நம் அனைவரையும் அழைத்து, நமது தகுதிகளை ஆராய்ந்து, நாம் வேண்டுவன எல்லாம் கொடுத்து அருள்புரிவான். எனவே நீ விரைந்து எழுந்து வந்து எங்கள் குழாத்துடன் இணைந்து கொள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com