திருப்பாவை - பாடல் 21

பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள்
திருப்பாவை - பாடல் 21
Published on
Updated on
1 min read

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

சென்ற இரண்டு பாடல்களில் துயில் எழுப்பப்பட்ட நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல். துயில் எழுப்பும் சமயத்தில் அனைவரும் இணைந்து கண்ணபிரானின் குணங்களைப் புகழ்ந்து பாடுவதையும் நாம் உணரலாம். தூக்கத்தின்போது ஐம்புலன்களும் செயலற்று கிடப்பதால் உடலில் உணர்ச்சி ஏதும் ஏற்படுவதில்லை. தூக்கம் கலைந்து எழும்போது, ஐம்புலன்களும் செயல்படும் நிலைக்கு வருவதை உணர்த்தும் பொருட்டு, அறியும் உணர்வு உருவாயாக என்று சொல்வதை நாம் இந்த பாடலில் காணலாம். யசோதை அன்னையை எழுப்பியபோதும், (பதினேழாவது பாடல்) அறிவுறாய் என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது

பொழிப்புரை

பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து, உணர்வுற்று எழுவாயாக; வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக; உனது வலிமையை உணர்ந்த உனது பகைவர்கள், தங்களது வலிமையை இழந்தவர்களாய் ஏதும் செய்யத் திறமையின்றி உனது வாசலில் வந்து நின்று உனது திருவடிகளைப் பணிவதற்காக நிற்கின்றார்கள், நாங்களும் உன்னைப் புகழ்ந்து பாடி, உனது திருவடிகளை வணங்குவதற்காக உனது வாசலில் வந்து காத்து நிற்கின்றோம். எனவே கண்ணபிரானே நீ துயிலெழுந்து, உனது வாயிலுக்கு வந்து எங்களுக்கு உனது திருமுக தரிசனம் அருளுவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com