திருவெம்பாவை - விளக்கம்

ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மணிவாசகர் அருளிய திருவெம்பாவையும், பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன.
Updated on
1 min read


முன்னுரை

ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மணிவாசகர் அருளிய திருவெம்பாவையும், பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு பதிகங்களும் சைவ வைணவ பக்திப் பாடல்களின் தொகுப்பாகிய பன்னிரு திருமுறை மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையே, இந்த பதிகங்களின் பெருமையை பறை சாற்றுகின்றது.

கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை.

திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது சைவர்களின் மரபு. இந்த இரண்டு பதிகங்களும் மணிவாசகர் அருளிய திருவாசகத்தில் இடம் பெறுகின்றன. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம். ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்ற தொடரை, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்லாக சிலர் கருதுகின்றனர்.

சிலர், பாவை போன்ற பெண்ணே, நீ சிந்திப்பாயாக என்று பொருள் கொள்கின்றனர். இந்த பாடல்களில் பல தத்துவக் கருத்துகள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை விரித்தால் உரையின் நீளம் பெருகும் என்பதை கருத்தில் கொண்டு, எளிமையான உரை கொடுக்கப்படுகின்றது. திருவெம்பாவை பதிகம் திருவண்ணாமலையில் அருளியது. .திருப்பள்ளியெழுச்சி பதிகம் திருப்பெருந்துறையில் அருளியது.

பாவை நோன்பின் விளக்கம் -  இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com