மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்..
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ

எற்றுக்  குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:  

துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். "செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா' என்றழைக்கிறார்கள். "அண்டை  அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?' என்று வினவுகிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. "கோவலர்' என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்:  

பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். "மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள் உன்னுடைய அடிமைகள். நெருப்பு போன்ற செம்மை வண்ணம் கொண்டவனே, வெண்மையான திருநீற்றைப் பூசியவனே, செல்வனே, சிற்றிடையும் மைதீட்டிய விழிகளும் கொண்ட பார்வதியின் மணாளனே, எங்களை ஆட்கொண்டு அருளுகிற உன்னுடைய கருணையால் நாங்கள் உய்வு பெற்றோம். இனியும் எங்களுக்கு இளைப்பின்றிக் காப்பாயாக' என்று வேண்டுகின்றனர். 

பாடல் சிறப்பு:

சிவபெருமான் செம்பொன் நிறத்தவர்; இதையே "நெருப்பு போன்ற செம்மை' என்கின்றனர். வழியடியோம் என்பதால், தலைமுறை தலைமுறையாகச் சிவத்தொண்டர்கள் என்பதும், வாழ்ந்தோம் என்பதால், சிவத்தொண்டுதான் இவர்களை வாழச் செய்கிறது என்பதும் விளங்குகிறது. இறைவனுக்கு அடிமையாக இருப்பதே வாழ்வின் சிறப்பு. இறைமைக்கு அருவ நிலை, அருவுருவ நிலை, உருவ நிலை ஆகிய மூன்று உண்டு. 9ஆவது பாட்டில், பழைமை}புதுமை என்பதால், அருவநிலையும், 10ஆவது பாட்டில் பேதை ஒருபால் திருமேனி என்பதால் அருவுருவ நிலையும், இப்பாட்டில் செய்யா}வெண்ணீறாடி என்பதால் உருவ நிலையும் சுட்டப்படுகின்றன.  

- டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com