மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12)

இதுவும் துயிலெடைப் பாசுரமாகும். இந்தப் பெண்ணின் வீடும் செழிப்பு மிக்கது.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பாடியவர் - பவ்யா ஹரி
 

விளக்கம்:

இதுவும் துயிலெடைப் பாசுரமாகும். இந்தப் பெண்ணின் வீடும் செழிப்பு மிக்கது. தன்னுடைய கன்றை நினைத்துக்கொண்டு (அது பாலருந்திய பின்னரும்), எருமை மாடானது தானே பாலைப் பொழிகிறது; இதனால், வீட்டின் முற்றமெல்லாம் சேறாகிறது. இப்படிப் பொங்கப் பொங்கப் பால் பொழியும் மாடுகள் நிறைய உடைய கோபாலரின் தங்கை இவள். "அதிகாலை நேரத்துப் பனி, எங்களின் தலையில் விழும்படியாக உன்னுடைய வீட்டிற்கு வந்து அழைக்கிறோம். சீதைக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணிச் சினம் கொண்டு, அத்துன்பத்திற்குக் காரணமான இலங்கேச்வரன் இராவணனை அழித்தவனான மனத்துக்கு இனியான் இராமன் பெயர்களைச் சொல்லிப் பாடுகிறோம். வாயைத் திறக்கமாட்டாயா? எங்கள் இசையொலி கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கிறார்கள். இன்னமும் உறங்குகிறாயே' என்று கிண்டல் பேசுகிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

கீழ்ப்பாசுரத்திலும் இப்பாசுரத்திலும் "செல்வம்' குறித்த குறிப்புகள் உள்ளன. செல்வம் என்பது பணம், காசு போன்றவை அல்ல. இறைத்தொண்டே செல்வம். இவ்வகையில் ஆயர்பாடியர் யாவரும் நற்செல்வம் கொண்டவர் ஆவர். கோபியர் பலருடன் விளையாடும் கண்ணன், கண்ணுக்கினியான்; ஏக பத்தினி விரதனான இராமன் மனத்துக்கினியான் என்னும் விளக்கம் சுவை கூட்டும். கீழே பால் வெள்ளம் (முற்றத்துச் சேறு), மேலே பனி வெள்ளம் (பனித்தலைவீழ) நடுவே மால் வெள்ளம் (உள்ளத்தில் திருமால் எண்ணம்) என்பது இப்பாசுரத்தின் பெருமை. ஸ்வாபதேசத்தில், பொய்கை ஆழ்வாரை இப்பாசுரம் குறிக்கும். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்து கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய். 

 பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்:

இறைவனைத் துதித்துப் பாடுவதே தங்களின் நோன்பு என்பதாக இப்பெண்கள் கூறுகிற பாடல். "கட்டப்பட்ட இப்பிறவியின் துன்பம் தீருவதற்காக, நாம் ஆர்ப்பரித்து ஆடுகிற தீர்த்தமாகத் திகழ்பவன்; தில்லைத் திருத்தலத்தின் சிற்றம்பலத்தில், தீயைக் கையிலேந்தி ஆடுகிற கூத்தன்; அண்டம், கோள்கள், உலகங்கள் என யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து விளையாடுபவன்; இத்தகைய இறைவனை வாயாரப் பாடி, வளைகளும் மேகலை போன்ற ஆபரணங்களும் ஆரவாரிக்க, கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்கரிக்க, மலர்களைக்கொண்ட பொய்கையில் மூழ்கி, இறைவன் திருவடிகளை வணங்குகிறோம்' என்று விளக்குகிறார்கள். 

பாடல் சிறப்பு:

பந்தம், பாசம் போன்றவற்றால் கட்டப்பட்ட பிறவி என்பதால் இது ஆர்த்த (கட்டப்பட்ட) பிறவி. பாவம் தொலைவதற்குப் புனித தீர்த்தங்களில் மூழ்குவதுண்டு. இறைவனே தலையாய தீர்த்தம்; வேறு தீர்த்தங்களை நாட வேண்டுவது இல்லை. நீரும் நெருப்புமாக, எதிரும் புதிருமான தன்மைகளில்சிவனார் காட்டப்படுகிறார். முரண்பாடுகளிலும் முழுமுதலைக் காண்கின்ற ஆழ் பக்தியின் நிலை இது. படைத்தல், காத்தல், அழித்தல் என்றுரைப்பது சரியான வரிசை. இப்பாடலில் வரிசை மாற்றப்பட்டு, "காத்தல்' முதலில் வருகிறது. உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அருள்வதிலும் ஆண்டவனுக்குள்ள ஈடுபாட்டை உணர்த்துகிற முயற்சி. முத்தொழிலைக் குறிக்கும் பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com