மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)

வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். "உன்னுடைய வீட்டுப் புழைக்கடையில் இருக்கிற குளத்தைப் பார் பெண்ணே. செங்கழுநீர் மலர்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் கூம்பிவிட்டன. காவி வண்ண ஆடை அணிந்தவரும் வெண்மையான பற்கள் கொண்டவருமான தவசிகள், திருக்கோயில்களில் சங்கநாதம் முழக்குவதற்காகச் செல்கின்றனர். என்னமோ, எங்களை நீ வந்து எழுப்புவதாகக் கதை பேசினாயே. நாணமில்லையா உனக்கு? நாக்கு மட்டும் நீளமோ? சங்கும் சக்கரமும் திருக்கரங்களில் ஏந்தி, தாமரைக் கண்ணானாகக் காட்சி தரும் கண்ணனைப் பாடுகிறோம், எழுந்து வா' என்று அழைக்கின்றனர். 

பாசுரச் சிறப்பு:

விடியலின் இன்னும் சில அடையாளங்கள் காட்டப்பெறுகின்றன. வெகு தொலைவு சென்று இந்த அடையாளங்களைக் காண வேண்டியதில்லை. அவரவர் அணுக்கச் சூழல்களிலேயே காணலாம். வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் சிறிய குளத்தில் காட்சி தெரிகிறது. வெளிச்சம் கண்டு மலர்கிற செங்கழுநீர் (தாமரை வர்க்கம்) மலர்ந்துவிட்டது; வெளிச்சம் கண்டு கூம்புகிற ஆம்பல் (கருநெய்தல் வர்க்கம்) கூம்பிவிட்டது. ஆக, வெளிச்சம் வந்துவிட்டது கண்கூடு. அதிகாலைப் பொழுதில், விடியலின் வெளிச்சக்கீற்றுகள் முதலில் எட்டத்தில் தெரியும். பின்னர்தான், அணுக்கத்தில் தெரியும். அணுக்கத்தில் தெரிந்தால், பொழுது அதிகமாகவே புலர்ந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஸ்வாபதேசத்தில்,திருப்பாணாழ்வாரைக் குறிக்கும் பாசுரம். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்! 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்:  

மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் இறைவன்பால் ஈடுபட்டிருக்கும் நிலையைக் காட்டுகிற பாடல் இது. பெண்கள் பொய்கைக்குள் புகுந்து நீராடுகின்றனர். இதுபொழுது, உடலும் உறுப்புகளும் (உயிருள்ளவை), வேறு சில பொருள்களும் (உயிரற்றவை) ஆடுகின்றன. காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன; கழுத்திலும் தோளிலும் கைகளிலும் அணிந்திருக்கும் பிற அணிகளும் ஆடுகின்றன; கூந்தலில் சூடிய பூமாலைகள் ஆடுகின்றன; பூக்களிலிருந்து எழுந்த வண்டுகள் ஆடுகின்றன; குளிர்ந்த நீரில் ஆடி, சிற்றம்பலவனைப் பாடி,வேதப் பொருளாக விளங்கும் தன்மையைப் பாடி, பேரொளிப் பிரகாசமாகத் திகழும் பெருமையைப் பாடி, அதே இறைவன் பலவகை உருவங்களும் வடிவங்களும் கொண்டு அவதரித்து, கொன்றை மாலை சூடுகிற அருமையைப் பாடி, ஆதியும் அந்தமுமாக இருப்பதைப் பாடி, அறியாமையிலிருந்து நம்மை மாற்றி வளர்க்கும் அம்மையின் அருளைப் பாடி நீராடுகின்றனர். 

பாடலின் சிறப்பு:  

பாடலின் ஓசை நயம் ஓதி ஓதி மகிழற்குரியது. ஆகாச நிலையில் எல்லையற்று வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டிருக்கும் இறைமை, மெல்ல மெல்ல இறங்கி, வேத நாதமாகி, சோதி வடிவாகி, உருவும் வடிவும் கொண்டு, ஆதியும் அந்தமும் ஆகி நிற்கும் பெருமை பேசப்படுகிறது. இவ்வாறு இறைமை இறங்குவதற்குக் காரணம், உயிர்கள் உயர வேண்டும் என்பதற்காகவே ஆகும். அம்மை நம்மை பேதித்து வளர்க்கிறாள் என்னும் கருத்து சிந்தனைக்குரியது. "பேதித்து'}எதைப் பேதித்து? நன்மை } தீமை, நியாயம் } அநியாயம், சரி } தவறு முதலிய வேறுபாடுகளை உணர்த்தி, அறத்தின் வழியில் பக்குவப்படுத்தல் எனக் கொள்ளலாம். "திரோதானம்' என்னும் மறைத்தலைக் குறிக்கும் பாடல். பூவில் தம்மை மறந்து இயல்பான ரீங்காரத்தை வண்டுகள் மறக்கின்றன; மாயையில் தம்மை மறந்து இறை வணக்கத்தை உயிர்கள் மறக்கின்றன.

-டாக்டர் சுதா சேஷய்யன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com