Enable Javscript for better performance
சர்வதோஷ நிவர்த்தி தலமான திருவாரூர் தியாகராஜர் கோயில்- Dinamani

சுடச்சுட

  

  சர்வதோஷ நிவர்த்தி தலமான திருவாரூர் தியாகராஜர் கோயில்

  By சி. ராஜசேகரன்  |   Published on : 19th November 2020 11:36 AM  |   அ+அ அ-   |    |  

  thiyagarajar_kamalambal-2

  சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் கமலாம்பாள்

   

  தென்னாடுடைய சிவனே போற்றி

  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

  என நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம்.

  சைவ சமயத்தின் பெரிய கோயில் என்றழைக்கப்படுவதும் பஞ்ச பூத தலங்களுள் பூமித் தலமானதும், சப்தவிடத் தலங்களில் (வீதி விடங்கர்) மூலாதாரத் தலமாகவும், தோன்றிய காலமே அறிய முடியாத காலப் பழமை கொண்டதும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரக் கூடிய பெருமையைக் கொண்டதும், மெய்யெல்லாம் நீறு பூசி, பொய்யில்லாத்தன்மையில் தம்மை நேசிப்பவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தையே வழங்கக்கூடிய பெருமான் அருள்பாலிக்கும் தலமாகவும் விளங்குகிறது திருவாரூர் தியாகராஜர் கோயில்.

  திருவாரூரில் நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டிலிருந்து இறைவனை வழிபடுவதாலும் தியாகராஜர் கோயிலில் குடியிருந்து இந்த உலகுக்கு சிவபெருமான் அருள்புரிவதாகக் கருதப்படுவதாலும் நவக் கிரகங்களாலும் ஏற்படும் தோஷங்கள் இங்கு செல்லாது. சர்வ தோஷ பரிகாரத் தலமான இங்கே பரிகார பூஜைகள் செய்வதால் நவக்கிரக பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

  கிழக்குக் கோபுரம்

  சைவ சமய மரபில் பெரிய கோயில், பூங்கோயில் என வழங்கப்படும் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவாசிரியம் எனும் திருக்காவணத்தில் சைவச் சான்றோர்கள் கூடி எடுக்கும் முடிவு உலகெங்குமுள்ள சைவ சமயத்தினரையும் கட்டுப்படுத்தும் என்பதால் இது சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும் விளங்குகிறது.

  இங்குள்ள மூலவர் வன்மீகநாதர், தியாகராஜர் என இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயில் உள்ளே அசலேஸ்வரர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ராகு கால ரெளத்திர துர்க்கை, ருணவிமோசனர், விஸ்வகர்மேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்ரீஸ்வரர், தட்சிணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோயில், தேவேந்திரன் பூஜித்த லிங்கம், சேரநாதர், பாண்டியநாதர், ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர், பாதாளேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

  புற்றிடங்கொண்ட பெருமான் தோன்றிய வரலாறு

  மகா விஷ்ணுவானவர், குருக்ஷேத்திரம் என்னும் இடத்தில் இந்திரன் முதலானவர்களுடன் சேர்ந்து செய்த யாகத்தில் வெற்றி பெற, யாகத்தில் தோன்றிய சிவ தனுசுவைப் பயன்படுத்தி அனைவரையும் வெற்றிகொண்டு, பராசக்திபுரம் என்னும் இடத்தை வந்தடைந்தார். வந்த களைப்பில் வில்லைத் தரையிலூன்றி, அதன்மீது தலை சாய்த்து உறங்கத் தொடங்கினார். அப்போது, தேவர்கள் புற்று உருவில் வில்லை அரித்தனர். வில்லில் இருந்த நாண் அறுந்து, விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட, பயந்துபோன தேவர்கள் சிவனை வழிபட்டனர். அப்போது, அங்கு தோன்றிய சிவபெருமான், விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்தார். புற்றிலிருந்து உருவான பெருமான் என்பதால் புற்றிடங்கொண்ட பெருமான் என்ற பெயரோடு இங்கு அருள்பாலித்து வருகிறார் என்பது வரலாறு.

  தியாகராஜர் கமலாம்பாள்

  தசரதன் வழிபட்ட வன்மீகநாதர்

  அசன் மகனாகிய தசரதனைத் தனது இடத்துக்கு அழைத்த இந்திரன், அவருக்கு என்ன தேவை என்பது குறித்து வினவிக்கொண்டிருந்தபோது, பிள்ளையில்லாதது மிகப் பெரிய குறையாயிருக்கிறது என தசரதன் பதில் உரைத்தான். அப்போது இந்திரன், கமலாலயம் சென்று வன்மீகநாதரை வழிபட்டால், நினைத்தது நிறைவேறும் என்றான். அவ்வாறு வழிபட்டு, யாகம் செய்து, ராமன் முதலிய 4 பேரைக் குழந்தைகளாகத் தசரதன் பெற்றான் என்று கூறப்படுகிறது.

  இதேபோல், குலிசேசன் என்னும் அரசன், பாரணைப் புண்ணிய காலத்தில் துர்வாச முனிவருக்கு ஊன் கலந்த சோறிட்டதால் சாபம் பெற்றான். பின்னர், வன்மீகநாதரை வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றான். இவர்கள் மட்டுமின்றி, ராமன், லவன், குசன், மன்மதன், மேனகை, சமற்காரன் மற்றும் சித்தீசன் ஆகிய அரசர்கள், கோகருணர் என்னும் முனிவர் ஆகியோரும் வன்மீக நாதரை வழிபாடு செய்து பேறு பெற்றனர்.

  தியாகராஜர் வரலாறு

  திருமாலானவர், சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, அகமகிழ்ந்த சிவன் உமையவளுடன் தோன்றியபோது, சிவனை மட்டும் திருமால் வணங்கியுள்ளார். கோபமடைந்த உமையவள் திருமால் மீது சாபமிட, கலங்கி நின்ற திருமால், மீண்டும் சிவனை வழிபாடு செய்து வந்தார். அதன்பின், மீண்டும் உமையவளுடன் சிவன் தோன்றியபோது, உரிய முறையில் திருமால் வணங்க, மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த திருமால், சோமாஸ்கந்த  திருக்கோலத்தில் எழுந்தருளக் கோரி தன் நெஞ்சக் கோயிலில் நிறுத்திக்கொண்டார். திருமாலின் உச்சுவாசித்தால் (மூச்சுக் காற்றை உள்ளிழுத்தலும், வெளிவிடுதலும்) பெருமானும் அசைந்தாடி ஆனந்தங்கொண்டு, திருமாலுக்குத் திருவருள் தந்தார். இதுவே அஜபா நடனம்.

  ஆடலேஸ்வரர் சன்னதி

  இதனிடையே, தேவலோகத்தை அசுரர்கள் கொடுமை புரியத் தொடங்கியபோது, இந்திரனின் கலக்கத்தைப் போக்க வேண்டி, தன் மார்பில் வைத்து வழிபட்டுக் கொண்டிருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை, இந்திரனுக்கு திருமால் வழங்கினார்.

  பின்னாளில், மீண்டும் ஒரு அசுரன் இந்திரலோகத்தை வெற்றிகொள்ள, இந்த முறை திருவாரூரில் ஆட்சி புரிந்த சோழ மன்னனும், இந்திரனுக்கு நண்பனுமான முசுகுந்தனை நாடினான். முசுகுந்த மன்னனானவன், முற்பிறவியில் திருக்கைலாயப் பூங்காவில் குரங்காகச் சுற்றித் திரிந்தபோது, அங்கு இறைவனும் இறைவியும் வந்தபோது, வில்வத்தளிரை சிந்தி வந்ததால், அவர்களின் திருவுளப்படி அரசனாக அவதரித்தவன்.

  விநாயகர்

  இந்திரனின் எண்ணப்படியே, போரில் முசுகுந்தன் அசுரனை வெற்றிகொள்ள, முசுகுந்தனுக்கு வேண்டியது என்ன என்று இந்திரன் கேட்டான். இந்திரன் வணங்கும் சோமாஸ்கந்தர் வேண்டுமென முசுகுந்தன் உரைக்க, இந்திரன் திகைக்க, பின்னர் தியாகேசரைப் போன்ற ஆறு உருவங்களைச் செய்து முசுகுந்தனிடம் காட்டினான். தியாகப் பெருமானின் அருளாசியுடன் உண்மையான தியாகேசப் பெருமானை அடையாளம் கண்டுகொண்ட முசுகுந்தன், அவரை திருவாரூர் கொண்டு வந்து, வன்மீக நாதர் கோயிலுக்குத் தென்புறம் கோயில் அமைத்து அங்கு அமர்த்தினான் என்கிறது தல புராணம்.

  மனுநீதிச்சோழன் மகனை உயிர்ப்பித்த தியாகராஜர்

  திருவாரூரை ஆண்ட மனுநீதிச்சோழனின் மகன் தேர்க்காலில் பட்டு, கன்று ஒன்று இறந்துபோக, நீதியை நிலைநாட்ட, தனது மகன் வீதிவிடங்கனைக் கிடத்தி, தேர்க்காலில் இட்டுக் கொன்றபோது, தியாகராஜப் பெருமானே தோன்றி மகனை உயிர்ப்பித்தார் எனப் பெரிய புராணம் கூறுகிறது. இதேபோல், சோமாசிமாற நாயனார், தான் செய்யும் யாகத்தில் இறைவனே நேரில் வந்து அவரிப்பாகம் ஏற்றளும்படி சுந்தரரைக் கொண்டு வேண்டிக் கொண்டார் என்றும் அவ்வாறே இறைவன் உமையோடு தோன்றினார் என்றும் திருக்கடவூர்த் தல புராணம் கூறுகிறது.

  கோயில் குளம்

  பெயர்கள் பல

  தியாகப் பெருமானானவர், வீதிவிடங்கர், தேவர்கண்ட பெருமான், ஆடரவக் கிண்கிணிக் காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித் தோடழகர், கம்பிக் காதழகர், தியாக விநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொற்றியாகர், திருந்திறைகோலத்தர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என 60-க்கும் மேற்பட்ட திருநாமங்களில், பிரபந்தங்களிலும், தேவாரத் திருமுறைகளிலும் வழங்கப்படுகிறார்.

  எழுந்து நிற்கும் நந்தி

  எல்லாத் திருத்தலங்களிலும் சிவபெருமானின் முன்பு நந்தி அமர்ந்திருப்பார். ஆனால் தியாகேசப் பெருமானின் முன்பு இருக்கும் நந்தி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். இதற்குக் காரணம், சுந்தரருக்காகத் தூது சென்ற பெருமான் அவசரத்தில் நந்தி மேல் செல்லாமல் திருவீதிகளில் நடந்தே சென்றார். எனவே, இனி பெருமானை நடக்கவிடக் கூடாது, அவர் புறப்பட்டால் தாமும் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதாலேயே, நந்தியானவர் நின்ற வண்ணம் உள்ளார்.

   உள்பிரகார பகுதியில் காட்சியளிக்கும் அசலேஸ்வரர் சன்னதி

  கோபுர தரிசனங்கள்

  திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வெளி மதிலில் ராஜ கோபுரம் எனப்படும் கீழைக் கோபுரம், மேலைக் கோபுரம், வடக்கு கோபுரம், தெற்கு கோபுரம் என நான்கு பெரிய கோபுரங்களும், கீழ் திசையில் ஒரு சிறிய கோபுரமும் காணப்படுகின்றன. இரண்டாம் மதிலில் இரண்டு திருக்கோபுரங்களும், மூன்றாம் மதிலில் அணுக்கன் திருக்கோபுரமும் அமைந்துள்ளன.

  சிறப்பு இசைக் கருவிகள்

  ஆரூருக்கே உரிய பிரத்யேக இசைக்கருவிகள் 3 உள்ளன. பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம், சுத்த மத்தளம், பாரி நாகஸ்வரம் ஆகியவை. குடபஞ்சமுகி என்றும் கூறப்படும் பஞ்சமுக வாத்தியத்தின் 5 முகங்களும், சிவனின் 5 முகங்களாகப் போற்றப்படுகின்றன. தியாகராஜர் கோயிலில், காமிகாகம பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் மட்டுமே இசைக்கப்படுகின்றன. இதேபோல், சுத்த மத்தளம் எனும் தாளக்கருவியும், பாரி நாகஸ்வரம் எனும் குழலும் சிறப்பு வாய்ந்தவை.

  வள்ளி  தெய்வாணையுடன் சுப்பிரமணியர்

  செப்பேடுகளும் கல்வெட்டுகளும்

  தியாகராஜர் கோயிலின் சிறப்புகளையும், பல்வேறு காலகட்டங்களில் மன்னர் செய்த ஆட்சி முறை, நிதி நிர்வாகம் ஆகியவை குறித்தும், தியாகராஜர் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தி குறித்தும் செப்பேடுகள், கல்வெட்டுகள் மூலம் அறியலாம். விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் காலச் செப்பேடுகள் பல ஆரூர் கோயிலிலும், சென்னை அருங்காட்சியகத்திலும் இடம் பெற்றுள்ளன. சகஜி மன்னன் தனது சகோதரர்கள் மற்றும் அருணாசல பண்டாரம் ஆகியோருடன் தியாகராஜப் பெருமான் முன்பு வணங்கியவாறு நிற்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ள செப்பேடும், சரபோஜி மன்னன் தில்லை நடராஜனையும், கோவிந்தராஜப் பெருமாளையும் வணங்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ள செப்பேடும், ஓவியக்கலையின் திறம் பேசும் செப்பேடுகளாகும்.

  இதேபோல், 9 ஆம் நூற்றாண்டு ஆதித்தசோழன் காலம் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டு தஞ்சை மராட்டிய மன்னன் சரபோஜி காலம் வரை திருவாரூர் திருக்கோயிலில் வெட்டுவிக்கப்பட்ட கல்வெட்டுகள் 81 ஆகும். இதுதவிர, சிதைந்தது, ஒருவரி கல்லெழுத்துக்களாக உள்ளவை என 10-க்கும் மேல் உள்ளன. இன்னமும் பல்வேறு கல்வெட்டுகள் படியெடுக்கப்படாமல் உள்ளன. இவற்றைப் படியெடுத்தால், கோயிலின் சிறப்புகளை மேலும் அறிய முடியும்.

  பாத தரிசனங்கள்

  தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். ஆனால், இத்திருமேனி மூலத்தானத்தில் இடம் பெறவில்லை. அங்கு, அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள அருள் நாயகியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.

  மேலக் கோபுரம்

  தியாகக் கொடி, மணித்தண்டு, ரத்தின சிங்காசனம், வீரகண்டயம், செங்கழுநீர்மாலை, பஞ்சமுக வாத்தியம், சுத்த மத்தளம், பாரி நாகஸ்வரம், அயிராவதம், அழகுத்தேர், செவ்வந்தித் திருத்தோடு போன்றவை தியாகராஜருக்குரிய சிறப்புகள் ஆகும். இப்பெருமானுக்கு அருகே வெள்ளிப்பேழையில் மரகதலிங்கமாக காட்சியளிக்கும் விடங்கருக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

  பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி 10 நாள்கள் நடைபெறும் ஆழித் தேரோட்டம், தெப்போத்ஸவம் ஆகியவை சிறப்புப் பெற்றவை.

  ஒரே வரிசையில் நவக்கிரகங்கள்

  ஒன்பது கிரகங்களும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டு, தங்களின் வக்கிரங்களைக் குறைத்துக் கொண்டு, ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள தியாகராஜ சுவாமி நோக்கி அமைந்துள்ளன. அத்துடன், இங்குள்ள நவக்கிரகங்கள் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளதாலும் சிறப்புப் பெறுகின்றன.

  ஆழித்தேர்

  இத்திருக்கோயில் சிவாலயங்களில் மூலதாரஸ்தலமாக விளங்குவதால், இங்குள்ள நவக்கிரகங்கள் சிவலிங்கத்தை அடுத்து வரிசையாக அமைந்திருப்பது, மற்ற சிவாலயங்களைக் காட்டிலும் தனிச்சிறப்பு. நவக்கிரகங்கள் அனைத்தும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டவை என்பதால், இங்குள்ள நவக்கிரகங்கள் அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும்.

  சர்வ தோஷ பரிகாரத்தலம்

  கலி செல்லா நகரம் என அழைக்கப்படும் திருவாரூரில் நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டிலிருந்து, இறைவனை வழிபடுகின்றன. சிவபெருமானானவர், தியாகராஜர் கோயிலில் குடியிருந்து இந்த உலகுக்கு அருள்புரிவதாகக் கருதப்படுவதால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் இங்கு செல்லாது, நவக்கிரக பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

  மற்ற கோயில்களில் நட்சத்திரங்களை வைத்து தோஷ நிவர்த்தி செய்யப்படுகின்றன. தியாகராஜர் கோயிலில் நட்சத்திரங்களை மையமாக வைத்து விழாக்கள் நடைபெறுகின்றன. மற்றபடி, அர்ச்சனை, தரிசனம், பூஜைகள் மூலமாக பக்தர்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

  மேற்குக் கோபுரம்

  மகாலட்சுமியானவர், தவம் செய்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்ததும், குழந்தைப்பேறு வேண்டித் தவம் செய்து குழந்தைப்பேறு அடைந்ததும் இந்தத் தலமே.

  ஆகவே, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும். காதலுக்குத் தூதுபோனவர் தியாகராஜர் என்பதால், காதல் கைகூடவும், எவ்வித சிக்கலும் இன்றித் திருமணம் நடந்தேறவும் தியாகராஜரை வழிபடலாம் எனவும் நம்பப்படுகிறது.

  கொடுமையான பாவங்கள் செய்தால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம், வழிபாடு செய்தால் தோஷம் நீங்கப் பெறலாம்.

  செய்நன்றி மறந்ததால் உண்டாகும் பாவமும் பிரம்மஹத்திக்கு இணையான பாவமாகும். இந்தப் பாவத்துக்கும் விமோசனம் தரக்கூடிய கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில்.

  திருமண வயதை எட்டிய பெண்களும், ஆண்களும் திருமணத் தடையை நிவர்த்தி செய்ய ரெளத்திர துர்க்கை அம்பாளை வழிபடலாம்.

  எரிசினக் கொற்றவை என அழைக்கப்படும் துர்க்கையை, ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்வோருக்கு குறையை தீர்த்து வைக்கிறார். தியாகராஜர் கோயிலில் எட்டு துர்க்கை சன்னதிகள் உள்ளன. தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் ரெளத்திர துர்க்கை.

  கமலாம்பாள் சன்னதி

  மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்த ஆரூர்

  தூயனை வணங்கி ஆங்கு துர்க்கையை விதியினால்தாபித்து

  ஆய்மலர் தூவி அன்பால் அர்ச்சனை புரியின் மன்ன

  நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும் என்றான்

  என திருவாரூர் புராணத்தில் சம்பந்த முனிவர் விளக்குகிறார். எனவே, தியாகேசருடன் இங்குள்ள துர்க்கையை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம், அரசு பதவி முதல் அரசியல் பதவி வரை அனைத்தும் நிறைவேறும். ஆடி மாதம் ராகு பெயர்ச்சி மற்றும் ஆடி வெள்ளிகளில் இங்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ராகுகால துர்க்கை அம்மனை லட்சார்ச்சனை செய்து வழிபட்டால் ராகுகால தோஷ நிவர்த்தி பெறும்.

  இந்திரன், தனது உடலில் இருந்த தோல் நோயை நீக்க, தியாகராஜர் கோயிலில் உள்ள ருண விமோசனரை வழிபாடு செய்து, நோய் நீங்கப் பெற்றார் என்பது புராணம். இந்த ருண விமோசனரை 11 ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

  செங்கழுநீர் மலர்

  ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இவருக்கு அமாவாசை தினத்தில் உப்பு, மிளகு காணிக்கை செய்யும் பக்தர்களுக்குத் தீராத நோய்களையும், நெடுநாள் தீராத, வராத கடன் தொல்லைகளையும் தீர்த்து வைக்கிறார் என்பது ஐதீகம்.

  அசலேஸ்வரர் சன்னதியைப் பார்த்த பிறகே ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேற்கு பார்த்தவாறு அருள்பாலிக்கும் இவரை வழிபட்டால், மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி, தியாகராஜர், வன்மீகநாதரைச் சுற்றி வந்து, அங்குள்ள எம சண்டிகேஸ்வரரை வழிபட்டால் எமபயம் நீங்கும் என்பதால், திருவாரூர் பிறக்க முக்தி எனக் கூறப்படுகிறது.

  திருவாரூர் தியாகராஜர் கோயில் மூலாதார ஸ்தலம் என்பதற்கு சான்றாக விளங்குகிறது கோயிலில் உள்ள ஆடலேசுவரர் சன்னதி. இங்கு பெளர்ணமியில் வழிபாடு செய்தால் யோக ரீதியான பலன்கள் கிடைக்கும்.

  வடக்கு கோபுரம்

  அதேபோல், இங்குள்ள ஆனந்தீஸ்வரர் சன்னதியில் பெளர்ணமி நாளில் செந்தாமரை மலர் சாத்தி வழிபாடு செய்தால், ஞான உபதேசம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த இடத்தில்தான் கமல முனிக்கு ஞான உபதேசம் கிடைத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

  இதேபோல், சித்தீஸ்வரரை வழிபட்டால், ஞான உபதேசம் பெறலாம். தருமபுரம் ஆதீனத்தின் முதல் குருபீடம் கமலை ஞானப்பிரகாசருக்கு இங்குதான் ஞான உபதேசம் வழங்கப்பட்டுள்ளது. சித்தீஸ்வரர், அருகில் உள்ள ஹயக்கிரீஸ்வரர் இருவரையும் வழிபாடு செய்தால், தடையில்லா கல்வி கிடைப்பதோடு, கல்வியில் குறைபாடு இருந்தால் நிவர்த்தி பெறும்.

  கமலாம்பாள், இங்குத் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். 64 சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்கும் இவர், எப்போதும் யோகநிலையில் இருப்பதால் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றைத் தருவதாக மரபு.
     
  முகுந்தார்ச்சனை, முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை

  மூன்று உலகங்களையும் காக்கும் ராஜாவாக விளங்கும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி, கடவுள்களின் மகாராஜாவாக விளங்குகிறார். ஸ்ரீ மஹா விஷ்ணுவால் பூஜிக்கப்படும் தியாகராஜருக்கு மகாவிஷ்ணுவின் பெயரால் முகுந்தார்ச்சனையும், தியாகராஜ சுவாமியை திருவாரூருக்குக் கொண்டு வந்த புராணகால முசுகுந்த மகாராஜாவின் பெயரால் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மட்டுமே செய்யப்படுகின்றன.

  முதல் பிரகார சுற்றுப் பாதை

  இந்த அர்ச்சனைகள் மட்டுமின்றி, கமலாம்பாள் சகஸ்ரநாமம், மூலவர் தங்கக் கவச அர்ச்சனை, தியாகராஜ சுவாமி சகஸ்ரநாமம், நவக்கிரக ப்ரீதி ஹோமம், ருத்ராபிஷேகம், கமலாம்பாள் நவசக்தி அர்ச்சனை ஆகியவையும் செய்யப்படுகின்றன. மேலும், பசுமடம் பராமரிப்புக் கட்டளை, நித்திய பூஜைக் கட்டளை, நந்தவன பராமரிப்புக் கட்டளை, நித்ய அன்னதானம் திட்டம் ஆகிய நிரந்தரக் கட்டளைகளும் இங்கு உள்ளன. அர்ச்சனை செய்ய விரும்புவோரும், நன்கொடைகள் அளிக்க விரும்புவோரும் நேரில் வர இயலாத நிலையில், மணியார்டர், டிடி மூலம் அனுப்பி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

  முகவரி: அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவாரூர்-610 001, தொடர்புக்கு - 04366-242343

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp