எதிரிகளின் தொல்லை நீக்கும் தா. பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில்

எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில்.
காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி
காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் சிம்ம வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாக  பஞ்சமுக பைரவர் எழுந்தருளியிருப்பது, சிறப்பு வாய்ந்த காசி விசுவநாத சுவாமி போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில்.

திருச்சியிலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலில் உயரமான ராஜ விநாயகர், வீணையுடன் சரசுவதி அம்மன், இறைவனையும், பைரவரையும் ஒருசேர பார்த்தவாறு காட்சியளிக்கும் நந்தியெம்பெருமான் போன்ற பல்வேறு சிறப்புகளும் உண்டு. 

 காசி விசுவநாதர் திருக்கோயில் ராஜகோபுரம்
 காசி விசுவநாதர் திருக்கோயில் ராஜகோபுரம்

இக்கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காருகுடி அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் கண், நீர் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் பரிகாரத்தலமாகவும், ரேவதி நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய தலமாகத் திகழும் உள்ள நிலையில், தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் எதிரிகளின் தொல்லை நீக்கும் மற்றும் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

கோயிலின் கொடிமரம்
கோயிலின் கொடிமரம்

இறைவன் காசி விசுவநாத சுவாமி: இத்திருக்கோயில் இறைவன் காசி விசுவநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இங்குள்ள இறைவன் கருவறை சன்னதி சற்று வித்தியாசமான முறையில் காணப்படுகிறது. இந்த சன்னதியைச் சுற்றி மூன்று புறங்களிலும் திறந்த நிலையைக் கொண்டு (ஜன்னல் போன்றது) காணப்படுகிறது.

அருள்மிகு காசி விசுவநாத சுவாமி
அருள்மிகு காசி விசுவநாத சுவாமி

குழந்தை வரம் வேண்டிய தம்பதியர், காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததாக செவிவழிச் செய்திகள் கூறப்படுகின்றன. இதனாலேயே இத்திருக்கோயில் இறைவனுக்கு காசி விசுவநாதர் என்று  
பெயர் வந்ததாகக் கூறுவர். கிழக்கு நோக்கிய திசையில் சன்னதியைக் கொண்டுள்ள இறைவன், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் நாயகராகத் திகழ்கிறார்.

இறைவி காசி விசாலாட்சி: தெற்குத் திசை நோக்கிய நிலையில் காசி விசாலாட்சி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.  நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் காசி விசாலாட்சி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருபவராகத் திகழ்கிறார்.

அருள்மிகு காசி விசாலாட்சி
அருள்மிகு காசி விசாலாட்சி

ஆறடி உயரத்தில் அனைத்துவித அம்சங்களையும் கொண்டு, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருளுகிறார் காசி விசாலாட்சி அம்மன்.

பஞ்சமுக பைரவர்: பொதுவாக சிவன் கோயில்களின் காவலராகக் கருதப்படுவர் பைரவர். இவர் இல்லாத சிவன் கோயில்களே இல்லை என்று கூறுவர். ஆனால், ஒவ்வொரு கோயிலும் பைரவர் சன்னதியில் தனிச் சிறப்பைக் கொண்டிருக்கும். கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், ஞான பைரவர் போன்ற பெயர்களைக் கொண்டிருப்பார்.

சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர்
சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர்

ஆனால்,  பஞ்சமுகங்களைக் கொண்டு சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் பைரவர் காட்சியளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தின் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையில் அமைந்துள்ள காசி விசுவநாதசுவாமி திருக்கோயிலில்தான். இவரே பரிகார அதிபதியாகவும் திகழ்கிறார்.
பைரவரின் வாகனம் நாயாகும். ஆனால், இக்கோயில் தனிச் சிறப்புடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக பைரவர் காட்சியளிக்கிறார்.

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி  நாள்களில் பூசணிக்காய், தேங்காய், மிளகுத் தீபமேற்றி, பக்தர்கள் வழிபட்டு தங்களது பரிகாரப்  பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறிய பின்னர், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.

சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர்
சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர்

திருமணத் தடை நீக்குதல், தொழிலில் ஏற்படும் கண் திருஷ்டிகளைக் களைதல், ராகு திசை பாதிப்பிலிருந்து நீங்குதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல் போன்றவற்றின் பரிகார அதிபதியாக இத்திருக்கோயில் பஞ்சமுக பைரவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதல்களை வைத்துச் செல்கின்றனர்.

ராஜ விநாயகர்: விநாயகர் கோயில் இல்லாத ஊர் இல்லை என்பது போல, விநாயகர் சன்னதி இல்லாத கோயில்கள் இல்லை.  ஆனால்,  அவர் எழுந்தருளியிருக்கும் சன்னதி, அங்கு அவர் அழைக்கப்படும் பெயர் போன்றவை  முக்கியமானதாகும்.

பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் ராஜ விநாயகர்
பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் ராஜ விநாயகர்

அந்த வகையில், இக்கோயிலில் ராஜ விநாயகர் பெரிய பெயரில் சிறப்பு வாய்ந்தவராக எழுந்தருளியுள்ளார். இந்த விநாயகர் சிற்பத்தில் அவரது கை, கால்கள் நுணுக்கமாக தெரியும் வகையில் அமைந்துள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் தீர்த்து வைக்கும் வல்வவராக இத்திருக்கோயில் ராஜ விநாயகர் திகழ்கிறார்.

வள்ளி-தெய்வசேனா சமேத முருகப்பெருமான்: இக்கோயில் தனி சன்னதி கொண்டு வள்ளி-தெய்வசேனா சமேதராய் அருள்மிகு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் தனது நெஞ்சில் திரிசூலம் ஏந்தியவாறு, மயில் வாகனத்தில் காட்சியளிப்பதும் மற்ற கோயில்களில் இல்லாத வகையில் அமைந்துள்ள தனிச் சிறப்புக்குரியதாகும்.

வள்ளி-தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கும் முருகப்பெருமான்
வள்ளி-தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கும் முருகப்பெருமான்

சிறப்பு வாய்ந்த சிற்பங்கள்: இக்கோயிலின் பல்வேறு சன்னதிகளில் அரியவகை சிற்பங்கள் காணப்படுகின்றன. குழந்தை உருவாவது முதல் பிறப்பு வரையிலான நிலைகள் குறித்த சிற்பங்கள் காணப்படுவதும் விசேஷமானது. இந்த சிற்பங்கள் பால்ய சிற்பங்கள் என்றழைக்கப்படுகின்றன.

கையில் வீணை ஏந்தியவாறு தனி மண்டபத்தில் காட்சியளிக்கும் சரசுவதி அம்மன்.
கையில் வீணை ஏந்தியவாறு தனி மண்டபத்தில் காட்சியளிக்கும் சரசுவதி அம்மன்.

நந்தியெம்பெருமானின் சிறப்பு:  இத்திருக்கோயிலில் கொடிமரத்துக்கு முன்பு அமைந்துள்ள நந்தியெம்பெருமான், சற்று வித்தியாசமான கோணத்தில் எழுந்தருளியுள்ளார். 

அலங்காரத்தில் நந்தியெம்பெருமான்
அலங்காரத்தில் நந்தியெம்பெருமான்

அதாவது இறைவன் காசி விசுவநாதரையும், பஞ்சமுக பைரவரையும் ஒரே நேரத்தில் பார்த்தவாறு, திரும்பிய கோணத்தில் நந்தியெம்பெருமான் காட்சித் தருகிறார். இந்த நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவர் நன்மைகளைத் தரும் நந்தியெம்பெருமானாக பக்தர்களால் போற்றப்படுகிறார். 

உள் பிரகாரப் பகுதியில் நாகர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள். 
உள் பிரகாரப் பகுதியில் நாகர், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள். 

இவைத் தவிர கோயில் பிரகார மண்டபத்தில் அருள்மிகு சரசுவதி அம்மன் வீணை ஏந்திய கோலத்திலும், கஜலட்சுமி அம்மன் தனி சன்னதி கொண்டும் காட்சியளிக்கின்றனர். மேலும் 63 நாயன்மார்கள் சன்னதியும், நவக்கிரக நாயகர்களின் சன்னதியும் கோயில் உள் பிரகாரப் பகுதியில் அமைந்துள்ளது. 

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

தல விருட்சம்: இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இறைவனுக்கு நடத்தப்படும் பூஜையில் வில்வம் பயன்படுத்தப்படுகிறது.

 கோயிலின்  தல விருட்சமான வில்வமரம் 
 கோயிலின்  தல விருட்சமான வில்வமரம் 

திருவிழாக்கள்:  ஆடிக் கிருத்திகை, சங்கடஹரசதுர்த்தி, தைத் திருநாள் போன்றவை நடைபெறுகின்றன. இதைத் தவிர தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி வழிபாடு, பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு போன்ற வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டுச் செல்கின்றனர். மேலும் இக்கோயிலில் பள்ளியறை பூஜை தனி விசேஷமானது. 

கோயில் உள் பிரகார மண்டபத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்கள்
கோயில் உள் பிரகார மண்டபத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்கள்

குடமுழுக்கு: 1994, ஜனவரி 26 ஆம் தேதி இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலின் வெளிப் பிரகாரம்
காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலின் வெளிப் பிரகாரம்

கோயில் நடைதிறப்பு: தாத்தையங்கார்பேட்டை அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் காலை 7.30 மணி முதல்  பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலின் உள் பிரகார மண்டபப் பகுதி
கோயிலின் உள் பிரகார மண்டபப் பகுதி

எப்படிச் செல்வது? திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சென்னை, கடலூர், விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பெரம்பலூர், துறையூர் வழியாக தாத்தையங்கார்பேட்டைக்கு  வந்து கோயிலை அடையலாம்.

மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்தும்,  திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களிலிருந்து  வருபவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், நெ.1.டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் வழியாக இக்கோயிலுக்கு வரலாம்.

சேலம், நாமக்கல்,  தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி வந்து, அங்கிருந்து தாத்தையங்கார்பேட்டைக்கு வந்து சேரலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குளித்தலை, முசிறி வழியாக இக்கோயிலுக்கு வந்தடையலாம்.

கோயிலின் கருவறை மண்டபத்துக்கு முன்னுள்ள துவார பாலகர்கள். 
கோயிலின் கருவறை மண்டபத்துக்கு முன்னுள்ள துவார பாலகர்கள். 

தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலிருந்தும், அரியலூர் மாவட்டத்திலிருந்தும் வருபவர்கள் குன்னம் வழியாக பெரம்பலூர், துறையூர் வழியாக வரலாம். 

திருச்சி விமான நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் கார் போன்ற வசதிகள் தாத்தையங்கார்பேட்டைக்கு உள்ளன.

தொடர்புக்கு:  இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயில் குருக்கள் கார்த்திக்கை  88832 43728 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி :

அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி திருக்கோயில்,
தாத்தையங்கார்பேட்டை,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com