சுடச்சுட

  

  திருவோணத்தில் அவதரித்த திரிவிக்ரமா!

  By மாலதி சந்திரசேகரன்  |   Published on : 03rd September 2017 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vamana_avtar

   

  பக்த பிரகலாதனின் பேரனான, மகாபலி சக்கரவர்த்தியானவன், அசுர குல அரசனாக   இருந்து வந்தான். 

  போரினில் தேவேந்திரனிடம் தோற்ற மகாபலி, இந்திரனை எப்படியாவது போரில் வென்றுவிட வேண்டும் என்று உறுதி பூண்டான். 

  அதனால், பிருகு வம்சத்தில் தோன்றிய, தன்னுடைய குருவான, சுக்ராச்சாரியாரை கலந்தாலோசித்தான். 

  'விஸ்வஜித்' என்கிற யாகத்தைச் செய்தால், அந்த யாக குண்டத்திலிருந்து பெறப்படும் ஆயுதங்களைக் கொண்டு, மூவுலகையுமே வசமாக்கிக் கொள்ள முடியும் என்று குருவானவர், மகாபலிக்கு உபதேசம் செய்தார். 

  அதன்படி யாகத்தைச் செவ்வனே முடித்து, மூவுலகையுமே தனதாக்கிக் கொண்டான், மாவலி. 

  வெற்றி பெற்ற களிப்பைக் கொண்டாட, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்வதாக உறுதி பூண்டான். 

  சுக்ராச்சாரியாரின் அனுக்கிரகத்தால், யாகங்களை செவ்வனே செய்து வந்தான். 

  தேவர்களான தன் மக்களுக்கு ஏற்பட்ட இழிவான வாழ்க்கையை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள், அவர்களின் தாயான அதிதி தேவி. 

  என்ன இருந்தாலும் தாய் மனம் அல்லவா? மிகவும் துயருற்ற நிலையில், தன்னுடைய கணவரான, காஸ்யப முனிவரிடம் தன் துக்கத்தைத் தெரிவித்து, அதற்கு ஒரு   உபாயம் வேண்டினாள். 

  அதற்கு முனிவர், 'மகாபலியின் அசுரச் செயல்களை ஒடுக்க, மகாவிஷ்ணு ஒருவரால்தான் முடியும். அவரை தியானம் செய்து 'பயோவிரதம்'  என்னும் விரதத்தை மேற்கொண்டால், மகாபலியின் முடிவை பகவானே ஏற்படுத்துவார்"  என்று கூறினார். 

  ஸ்ரீமந்நாராயணனின் லீலையை யார்தான் அறிய முடியும்? 

  அதிதி தேவியின் விரதத்திற்கு செவி சாய்த்த பகவான், தானே, அதிதியின் புத்திரனாக அவதாரம் செய்வதாகக் கூறினார். 

  அதர்மத்தை அழித்து,   தர்மத்தை நிலை நாட்டி, தழைத்தோங்கச் செய்ய, ஆவணி மாதத்தில், வளர்பிறையில், திருவோண நட்சத்திரத்தில்,  சங்கு சக்ரதாரியானவர், அவதாரம் செய்தார். 

  பிறந்த சில தருணங்களிலேயே,  ஐந்து வயது பாலகனாக உருமாறினார். 

  பகவானின், அவதார நோக்கம் அறிந்த  முனிஸ்ரேஷ்டர், தன் ஐந்து வயது மகனுக்கு, வானவர்கள் தேவர்கள் உதவியோடு, உபநயனமும் செய்து வைத்தார். 

  அன்றைய தினம், மகாபலி, தன்னுடைய கடைசி அஸ்வமேத யாகத்தை நிறைவேற்றும் பொருட்டு, நர்மதை நதிக்கரையில், 'பிருகு கச்சம்'  என்னும் இடத்தில்,  யாகத்தைத் தொடங்கி இருந்தான். 

  அப்பொழுது,  கோடி மடங்கு சூரிய ஒளி பிரபாவத்தோடு, ஐந்து வயது பாலகன், மகாபலியின் யாக சாலைக்குள் நுழைந்தான். 

  அந்தணச் சிறுவனுக்கு உரித்தான உபசாரங்களைச் செய்த பின்னர், அவன் பாதங்களை அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, மகாபலி,  தன் தலையிலும் ப்ரோக்ஷணம் செய்துகொண்டு, தான் செய்த பாவங்களைக் களைந்து கொண்டான். 

  எல்லோருக்குமே வேண்டிய பொருளைக் கொடுத்துப் பழக்கப்பட்ட ஈகை குணம் கொண்ட மகாபலியானவன், வந்திருந்த அந்தணச் சிறுவனிடம்,  'அந்தணரே, தாங்கள் யாது பெற வேண்டி என்னை நாடி வந்திருக்கிறீர்கள்?  எது வேண்டுமோ அதை தாராளமாகக் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்'  என்றான். 

  'மகாபலி அரசனே, நீ பரம பாகவதனான பிரகலாதனின் பேரன் ஆவாய். நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன்  என்பதை நானறிவேன். அந்தணர்களுக்கு தேவையான அனைத்து சௌபாக்கியங்களையும் அளிப்பவனான நீ, நான் கேட்டதைக் கொடுப்பாய் என்றும் உணர்வேன். நான் அதிகமாகக் கேட்கப்போவது இல்லை. என் காலால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்.'

  'அந்தணச் சிறுவனாகிய உங்கள் காலால் மூன்றடி மண்ணா? நான் அதைவிட பிரும்மாண்டமாய் ஏதாவது தருகிறேனே. நீங்கள் கேட்பது எந்த விதத்தில் உங்களுக்கு உதவப்போகிறது?' என்றான் மகாபலி. 

  அசுர குருவிற்கு விளங்க வெகு நேரம் ஆகவில்லை. 

  பலி சக்கரவர்த்தியைத்  தனியாகக் கூப்பிட்டார். 

  வந்திருப்பது அந்தணன் அல்ல. அந்தணன் ரூபத்தில் இருப்பது ஸ்ரீமந்நாராயணன் தான் என்று எடுத்துக்கூறி, மகாபலியின் செயலினால் அவனுக்கு மட்டுமன்றி அசுர குலத்திற்கே அழிவு உண்டாகும் என்றும் எச்சரித்தார். 

  ஆனால்,  பகவானே தன்னைத் தேடி வந்து யாசகம் பெற, தான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிய  மகாபலி, தன் எண்ணத்தினை சுக்ராச்சாரியாரிடம் தெரிவித்தான். 

  மேலும், கொடுத்த வாக்கை மீறுவதற்கில்லை என்று கூறிய மாவலி, தன் மனைவி விந்தியாவளியை அழைத்து, அர்க்யம் விடச் சொல்லி, ஸ்ரீ பகவானிடம் 'தந்தேன்'  என்று கூறினான். 

  உடனே, வானளாவி நீக்கமற நிறைந்த விராட்ஸ்வரூபன், தன்னுடைய ஒருகாலால் பூமியை அளந்தார். இரண்டாவது அடிக்கு, மற்றொரு காலால் வானத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு ஏது இடம்? 

  'அரசே இரண்டு அடி மட்டுமே அளக்க இடமிருந்தது. மூன்றாவது அடியை எங்கிருந்து கொடுப்பாய். வார்த்தை தவறி விடுவாய் போலிருக்கிறதே. வார்த்தை மீறுபவன் பாதாள லோகம்தான் போக வேண்டும்' என்று கூறிய சர்வலோக வியாபி, தன் தேகத்தைக் குறுக்கிக் கொண்டு மீண்டும் வாமன ரூபத்திற்கு வந்தார். 

  'ஐயனே, நான் கொடுத்த வாக்கை மீறுபவன் அல்லன். இதோ மூன்றாவது அடிக்கு என் சிரசினை சமர்ப்பிக்கிறேன். தங்கள் சித்தம் போல செய்யுங்கள்’ என்று கூறிய மகாபலி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னையே ஸ்ரீ பகவானிடத்தில் அர்ப்பணித்துக் கொண்டான். 

  அவனின் சிரசில் தன் பாதங்களைப் பதித்த வாமன ரூப சங்கு சக்ரதாரி, 'குலகுரு கூறியும், உன்னைப் பற்றியும், உன் குலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், சொல் தர்மம் காத்தாய். என்னை நம்பினோரை நான் என்றும் கைவிடமாட்டேன். யாகத்தை பாதியிலேயே நிறுத்துவது மகா பாவமாகும். குருவைக் கொண்டு யாகத்தை முடித்துவிட்டு, விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்படும் சுதில லோகம் சென்றடைவாய்.  சார்வணி மந்வந்திரத்தில் நீயே இந்திரனாக இருப்பாய்' என்று ஆசிர்வதித்தார். 

  மகாபலி சக்ரவர்த்தியும், ஸ்ரீ  பகவானின் ஆக்ஞையை ஏற்று,  யாகத்தைப் பூர்த்தி செய்து, தன் அசுரகுல பந்தங்களுடன் சுதில லோகம் சென்றடைந்தான். 

  மகாபலியிடம் இருந்து பெற்ற  மூன்று லோகங்களையும், தேவேந்திரனிடமே திரும்ப ஒப்படைத்தார். 

  அனைவருக்கும் அனுக்கிரகம் செய்த பரமாத்மாவானவர், அவதார நோக்கம் முடிந்தவுடன் அந்தர்யாமியாகி, திருப்பாற்கடல் ஏகினார். 

  ஸ்ரீ  மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரேஷ்டமான ஐந்தாவது அவதாரமே வாமன அவதாரமாகும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai