ததத என்றால் என்ன?

வேத காலத்தில் தேவர், மனிதர், அசுரர் ஆகிய அனைவருக்கும் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவை நேரடியாகச் சந்திக்கும் சக்தி இருந்தது.
ததத என்றால் என்ன?

வேத காலத்தில் தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. அவ்வாறான ஒரு காலகட்டத்தில்  தேவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்கள் பிரம்மாவைச் சந்தித்து தங்கள் நல்வாழ்க்கைக்கு ஒரு உபதேசத்தைத் தருமாறு வேண்டினர். பிரம்மாவும் முறையே அவர்களுக்கு ஒரு உபதேசத்தை வழங்கினார். என்ன அது?

முதலில் வந்த தேவர்களிடம், பிரம்மா  'த’ என்று உபதேசித்தார். த என்பதன் அர்த்தம் என்னவென்று தேவர்களுக்குத் தெரியும். 'தாம்யத’என்ற சொல்லைத்தான் 'த’என்ற ஒற்றைச் சொல்லில் பிரம்மா சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் அர்த்தம் 'புலன்களை அடக்கு’என்பதே. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை அடக்கியவனே யோகி. இவற்றை முழுமையாக ஒடுக்கியவர்களுக்கே மெய்ஞானம் கிடைக்கும்.

தேவர்களோ வாழ்க்கையின் அத்தனை இன்பத்தையும் துய்ப்பவர்கள். சகல செளபாக்கியங்கள் இருந்தாலும், புலன் அடக்கம் வேண்டும் இல்லையெனில் கீழான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதால் பிரம்மா அந்தச் சொல்லை உபதேசித்தார். 

மனிதர்கள் சென்ற பொழுது, அவர்களிடமும் அதே 'த’ வை உபதேசித்தார் பிரம்மா. 'தத்த’ என்பதன் சுருக்கமே இந்தத் ‘த’. அதாவது 'தானம் கொடு’ என்று அதற்கு அர்த்தம். மனிதர்கள் பூவுலகில் செய்ய மறந்த ஒன்றையே பிரம்மா அவர்களுக்கு நினைவுபடுத்தும்விதமாக உபதேசித்தார். தானம் என்றால் பணத்தை தானம் தருவது மட்டுமல்ல, மேலும் அன்னதானம் மட்டுமல்ல. தனக்குத் தெரிந்த எந்தவொரு கலையையும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் சிறந்த தானம்.  மனிதர்கள் சுயநலமாக இருக்காமல் பிறருக்கு அன்னதானம் முதல் அறிவுதானம் வரை யோசிக்காமல் தர வேண்டும் என்பதையே அவர் அறிவுறுத்தியிருந்தார்.

அடுத்து அசுரர்கள் பிரம்மாவிடம் உபதேசம் பெறச் சென்றனர். வழமையாக சொல்லும் அதே வார்த்தையான  'த’ வையே மீண்டும் உபதேசித்தார் அவர். 'தயத்வம்’ என்பதன் சுருக்கமே அது. ‘தயையுடன் இரு, அனைத்து உயிர்களிடமும் இரக்கம் கொள்’ என்பதே அதன் உட்பொருள். அசுரர்களிடம் இல்லாத ஒரே குணம் அது என்பதால் பிரம்மா அவர்களிடம் அதைக் கூறினார். தாமஸ குணம் கொண்ட அசுரர்கள் மற்றவர்களிடம் துளி கருணையும் காட்ட மறுப்பார்கள். கருணையே அடிப்படை குணம். அது இருந்தால் மட்டுமே மனித நிலை அடைந்து அதற்கு அடுத்த படிநிலையான தேவர்களாக முடியும். தன்னைப் போல் பிற உயிர்களை நினைக்க வேண்டும், அப்போது மட்டுமே கதிமோட்சம் கிடைக்கும் என்பதை உணர்த்த பிரம்மா அந்தச் சொல்லை கூறினார்.

மூவரும் தமக்குக் கிடைத்த உபதேசத்தை சில முறை பயன்படுத்தியும், பலமுறை மறந்தும் வாழ்ந்தனர். எனவே பிரம்மா எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்த 'த’ வின் விளக்கத்தை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக இடியை உருவாக்கினார். இடியோசையின் ஆதி ஒலி 'ததத’ என்பதேயாகும். புலன்களை அடக்குங்கள், தானம் செய்யுங்கள், கருணையுடன் இருங்கள்’ என்பதே அதன் அர்த்தம். இதைக் கடைப்பிடிப்பர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மெய்ஞானம் கிடைக்கும் என்பது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com