ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: இழந்ததும் இழக்கக்கூடாததும்

இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கமான குதூகலம் வேண்டுமானால்
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: இழந்ததும் இழக்கக்கூடாததும்
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: இழந்ததும் இழக்கக்கூடாததும்


இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கமான குதூகலம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால், மனதில் அதே நம்பிக்கை மற்றும் பக்தியுடன், வீடுகளில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக இந்த கிருஷ்ண ஜெயந்தி நன்னாளை யாரும் மறக்கவே முடியாது. ஏனென்றால் ஒரு வாரத்துக்கு முன்பே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிடும். பள்ளிகளில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டிகளும், பாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.

மறக்காமல் அனைத்துப் பெற்றோரும் அன்றைய நாள்களில் நடைபெறும் போட்டிகளுக்கு தங்களது அழகான சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் அலங்காரத்தையே செய்வார்கள். சிலர், ராதை வேடத்தையும் போடுவார்கள். ஆனால், ஒவ்வொரு கிருஷ்ணரும், பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நூற்றுக்கணக்கான கிருஷ்ணர்களை பள்ளிகளிலும், சாலைகளிலும் பார்த்து ரசித்தவாறே நாள்கள் கழியும்.

உண்மையில் நாம் அனைவருமே நமது குழந்தைகளுக்கு வீடுகளில் அலங்கரித்துப் பார்க்கும் ஒரு தெய்வத்தின் வடிவம் என்றால் அது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாதான். அவ்வளவு மனதுக்குப் பிடித்தவர் ஸ்ரீகிருஷ்ணர்.

பள்ளிகளும் அங்கன்வாடி மையங்களும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருப்பதால், அந்த கண்கொள்ளாக் காட்சிகளை நாம் இழந்துவிட்டோம்.

அதுபோலவே, தற்போது மழலையர் வகுப்பில் பயில வேண்டிய தங்கள் பிள்ளைகளுக்கு அந்த அனுபவங்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் பெற்றோருக்கு உள்ளது. அதைப் போக்குவதற்காக அவரவர் வீடுகளிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரத்தை செய்து மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் கோயில்கள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாள்களில் மிகக் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். அலங்காரத்துக்கே அலங்காரம் செய்து, அன்றைய தினம் கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண பகவான் மிக அழகாகக் காட்சியளிக்கும் வைபங்கள், கரோனா பொதுமுடக்கத்தால் நடைபெறாமல் போயிருக்கின்றன. பல கோயில்களில் பக்தர்களின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில்  கோயில்களில் அன்றைய தினம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஸ்ரீகிருஷ்ணரைக் காணும் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போயுள்ளது. இவைதான் இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் நாம் இழந்தவை.

இழக்கக் கூடாதவை என்றால்.. பண்டிகைக் காலங்கள் என்றாலே அது கொண்டாட்டங்களுக்குரியதுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் கட்டுப்பாடுகளுடன் கூடிய கொண்டாட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு உரிய பண்டிகை என்பதால், கவனம் அதிகவனமாக மாற வேண்டும். பண்டிகைக் காலங்களால் கரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்று மத்திய, மாநில சுகாதாரத் துறைகள் அச்சம் அடைந்துள்ளன. கவலை தெரிவித்துள்ளன.

எனவே வீடுகளிலேயே கூட்டம் கூடுவது, நெரிசலான சந்தைப் பகுதிகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவது,  குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்றவற்றை, நமது நலம் கருதி தவிர்க்கலாம்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு உரிய அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டால், கூட்டங்களில் சிக்குவதைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்து, புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரலாம். அதுவே சாலச்சிறந்தது.

அதை விடுத்து, நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகளை ஓரிடத்தில் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதை அடுத்த ஆண்டு வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் பாட்டுப் பாடுவதையும், ஆடுவதையும் விடியோவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நல்ல நினைவுகளைக் கொடுக்கும்.

அருகில் கோயில்கள் திறந்திருந்தாலும், கூட்டமான நேரத்தில் செல்வதைத் தவிர்த்து, கரோனா பேரிடர் காலத்தை நினைவில் கொண்டு, இந்த பண்டிகைக் காலங்கள், நம்மை அடுத்த அலைக்கு இட்டுச் செல்லாமல் கவனத்துடன் கொண்டாடி, நாமும் நலமாக இருக்க, நம்முடன் இருப்பவர்களும் நலமாக இருக்க உதவுவோம். கடந்த இரண்டு அலைகளிலும் இழந்ததைப் போல எதையும் இழக்காமல் இருக்க இது மிகவும் அவசியம்.

கரோனா பெருந்தொற்றை அழித்து, உலகம் பழைய இயல்பு நிலைக்குத் திரும்ப ஸ்ரீகிருஷ்ணரை மனமுருகி பிரார்த்திப்போம் இந்த நன்னாளில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com