சபரிமலை 18 படிகளின் மகத்துவங்கள்

சபரிமலை ஐயப்பன் வீற்றிருக்கும், புண்ணியம் மிகுந்த 18 படிகளின் மகத்துவங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். 
பதினெட்டு படிகள்
பதினெட்டு படிகள்

கார்த்திகை மாதம் வந்தாலே திருவிழாதான். கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள்.

சபரிமலை ஐயப்பன் வீற்றிருக்கும், புண்ணியம் மிகுந்த 18 படிகளின் மகத்துவங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். 

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் இருப்பதால், உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி உட்காருவதற்குச் சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் 18 தேவதைகளும் தரையிலிருந்து பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசைப்படுத்திக் கொண்டனர்.

ஐயப்பன் அவர்கள் மீது பாதம் வைத்து ஞான பீடத்தில் போய் உட்கார்ந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார். இப்படி எண்ணிக்கை முறையில் பதிக்கப்பட்ட18 படிகளானது மகா விஷ்ணுவின் மறு அவதாரமான பரசுராமனின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்றது. 18 என்ற கணக்கு வந்த விதம்.

இந்திரியங்கள் ஐந்து, புலன்கள் ஐந்து, கோசங்கள் ஐந்து மற்றும் குணங்கள் மூன்று என மொத்தம் 18 என்பார்கள். இந்திரிங்கள் என்பது கண், காது, மூக்கு, நாக்கு, கை மற்றும் கால்கள் ஆகும். புலன்கள் என்றால், பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல் மற்றும் ஸ்பரிசித்தல் என்பதாகும். கோசங்கள் என்பது அன்னமய கோசம், பிராமணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் என்பதாகும். குணங்கள் என்பது சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலே சொல்லியுள்ள பதினெட்டையும் கட்டுப்படுத்தி ஜெயித்து இந்த 18 படிகளையும் கடப்பவர்கள் மட்டுமே ஐயப்பனின் முழு அருளையும் பெறுகிறார்கள். அதனால்தான், மகிமை வாய்ந்த படிகளின் தெய்வீகத் தன்மையைக் காப்பாற்றவும், முறையாக விரதம் இருந்து படியேறுபவர்கள் நற்பலன்களைப் பெறவும் சரியான விரதம் இல்லாமல் இப்படிகளை ஏறிக் கடப்பவர்களால் ஏற்படும் அபசாரத்திற்குப் பரிகாரமாகவும் படி பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தப் படிகளில் வீற்றிருக்கும் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியாக ஆவாஹனம் என்ற ஷோட சேமசார பூஜையையும் செய்து 18 படிகளின் புனிதத் தன்மையை இன்றளவும் காத்து வருகிறார்கள்.

ஹரிஹரப் புத்திரன் ஐய்யன் ஐயப்ப சுவாமி, மஹா விஷ்ணுவை தாயாகவும், மகேஷ்வரனை தந்தையாகவும் பெற்றவர். திருமாலின் அவதாரமான கிருஷ்ண பகவான் உலக மக்களுக்காக அருளிய ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 யோகங்களை 18 படிகளாகக் கொண்டு அமர்ந்துள்ள ஐயப்பனின் சத்தியப்படிகளைக் கடந்து தம்மை வந்தடையும் பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றார் என்பதைக் குறிப்பதாகும்.

பதினெட்டுப் படிகளிலும் 18 திருநாமங்களுடன் மணிகண்டன் எழுந்தருளியிருக்கிறார். அந்த 18 பெயர்களையும் தெரிந்துகொள்வோம். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்த ரூபன், எரிமேலி ஏழைப் பங்காளன், ஐந்து மலைத்தவன், ஐங்காரச் சகோதரன், கலியுக வரதன், கருணாகரத் தேவன், சத்தியப் பரிபாலகர், சற்குணசீலன், சபரிமலை வாசன், வீரமணிகண்டன், விண்ணவர் தேவர், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குணக் கொழுந்தன், உள்ளத்தமர்வான் மற்றும் ஐயப்பன் என சபரிமலையில் 18 படிகளிலும் 18 யோகங்களையும் கொண்டுள்ளது.

18 படிகளுக்கு எப்போது பூஜைகள் நடைபெறுகின்றது என்றால், மாத பூஜையின் போது நடை திறந்திருக்கும் நான்கு நாள்களிலும் இரவு 8 மணிக்குள் சிறப்பு வழிப்பாட்டுப் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், சித்திரை விசு திருவிழா, ஓணம் பண்டிகை, பிரதிஷ்டை நாள் போன்ற தினங்களிலும் படி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மண்டல, மகர ஜோதியின் சமயம் 60 நாள்களும் படி பூஜைகள் நடத்தப்படுவதில்லை.

தனி நபர்களால் பணம் கட்டி முன் பதிவு செய்பவர்களுக்கு அவர்களது வரிசை வரும் போது அவருக்காகப் படி பூஜை நடத்தப்படும். படி பூஜைக்கு பணம் கட்டுவது தவிர, படி பூஜையன்று பூக்கள், மாலைகள் கொண்டு வர வேண்டும். படிக்குப் பட்டுத் துணிகள், பட்டு வேஷ்டிகள் தரப்படும். படி பூஜையன்று பணம் கட்டியவருக்கு வேண்டியவர்கள் 5 பேர் மட்டும் இருமுடி இல்லாமல் 18 படிகள் ஏறலாம். ஐயப்பன் சிறப்புத் தரிசனம் இவர்களுக்கு உண்டு.

படிபூஜை நடைபெறும் தினத்தன்று இரவு 8 மணி அளவுக்குப் பக்தர்கள் படி ஏறுவதை நிறுத்தி விட்டு, 18 படிகளையும் கழுவிச் சுத்தம் செய்வார்கள். தலைமைப் பூசாரியான தந்திரியின் உதவியாளர்கள் 18 படிகளையும் மலர்களால் அலங்கரித்து, 18 படிகளுக்கு முன்னால் தீர்த்தங்கள் நிறைந்த கலசங்களையும், பூக்களை கூடைகளிலும் கொண்டு வந்து வைப்பார்கள். தந்திரி 18 படிகளின் முன்னால் வந்து அமர்வார். அதன் பிறகு, தந்திரி 18 தேவதைகளையும் ஆவாஹனம் செய்து பூஜைக்கு மானசீகமாகக் கொண்டு வந்து, ஐயப்பனை வேண்டியும் பூஜை செய்வார். படி பூஜை முடிந்தவுடன் 18 படிகளிலும் மலர்கள் வைத்துக் குத்து விளக்கேற்றி 18 படிகளின் மேலே ஏறி, தந்திரி (தலைமைப் பூசாரி) பூஜை செய்வார். பிறகு, 18 படிகளுக்கும் கற்பூரம் காட்டி மஹா தீபாராதனை செய்வார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகள், கோடிக்கணக்கான பக்தர்கள், கற்களினால் ஆன படிகளில்தான் ஏறி வந்தனர். பக்தர்கள் தாங்கள் சபரிமலைக்கு வரும் ஆண்டுக் கணக்கை எண்ணி, அதற்கு ஏற்ப படிகளில் தேங்காய் உடைத்து வந்தனர். இதனால், படிகள் சிதிலம் அடைந்தது. படிகளை உறுதியாக வைத்துக் கொள்ள, 18 படிகளையும் உலோக மயமாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் பித்தளைக் கட்டிகள், ஈயம், செம்பு என நான்காயிரம் கிலோ உலோகங்களைக் கொண்டு கடந்த 1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று 18 படிகளையும் கவசம் செய்தார்கள். மேலும், பக்கப் பகுதிகளிலும் பஞ்சலோகம் பொருத்தப்பட்டன. தற்சமயம் படிகளில் தேங்காய் உடைக்க அனுமதியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com