

அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலையில் சுவாமி, பிரியாவிடை, அம்மன் ஆகியோர் சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் திங்கள்கிழமை அருள்பாலித்தனர்.
மதுரையில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் விழாக்களில் சுவாமிக்கான முக்கிய விழாவாக ஆவணி மூலத் திருவிழா உள்ளது. கடந்த 19 ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆவணி மூலத் திருவிழா தொடங்கிய நிலையில், திங்கள்கிழமை காலையில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது. தனது தீவிர பக்தரான தருமி எனும் புலவருக்கு உதவுவதற்காக, சிவபெருமான் கவிதை எழுதி தருமியை வாசிக்க கூறினார். அந்தக் கவிதையில் நக்கீரர் பிழை கண்டறிந்தார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் நக்கீரருடன் வாதிட்டு, நெற்றிக்கண்ணால் நக்கீரரை எரித்தார். அதன் பின்னர் திருக்கோயில் பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரரை உயிர்ப்பித்து அருள்பாலித்தார் என்பது புராண வரலாறு.
சிவபக்தரான தருமிக்கு பொற்கிழி வாங்கித்தந்து அருள்பாலித்த சுந்தரராஜப் பெருமானின் லீலையை வெளிப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை காலை மீனாட்சிமண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி, பிரியாவிடை, அம்மன் மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் சுவாமி கையில் வெள்ளியிலான ஏடு மற்றும் பொற்கிழி வைக்கப்பட்டு, புராண வரலாற்றை சிவாச்சாரியார்கள் வாசித்து பூஜை செய்தனர்.
பூஜைக்குப் பின்னர் சித்திரை வீதி வழியாக கீழப்பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி வழியாக சுவாமி எழுந்தருளி ராமசாமி பிள்ளை மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். அங்கிருந்து இரவு 8 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்திலும், அம்மன் யானை வாகனத்திலும் எழுந்தருளி வடக்கு மற்றும் கீழ ஆவணி மூலவீதிகள் வழியாக திருக்கோயிலில் எழுந்தருளினர்.
செவ்வாய்க்கிழமை காலை உலவாக்கோட்டை அருளிய லீலையும், புதன்கிழமை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலையும் நடைபெறுகின்றன. புதன்கிழமை மாலை 6 மணிக்கு கிழக்கு ஆடி வீதியில் யானை மஹால் முன்பு அருள்மிகு திருஞானசம்பந்த சுவாமிகள் சைவ சமயத்தை நிலைநிறுத்திய வரலாற்று பூஜை நடைபெறுகிறது. தல ஓதுவார் சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய வரலாற்றை படித்துக்காட்டுவார்.
பூஜைக்குப் பின்னர் இரவில் சுவாமி, தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பட்டாபிஷேகம்: வியாழக்கிழமை (ஆக.31) காலையில் வளையல் விற்ற லீலையில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் நிலையில், மாலை 6.40 மணி முதல் இரவு 7.04 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சுவாமி சன்னதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறும் பட்டாபிஷேகத்தின்போது திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் சுவாமியிடமிருந்து செங்கோலைப் பெற்று சகல விருதுகளுடன் கோயில் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து மீண்டும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான புட்டுக்கு மண்சுமந்த லீலை சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி புட்டுத்தோப்பு தெரு பகுதியில் எழுந்தருள்வர். புட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜை நடைபெற்று அன்று இரவு அங்கிருந்து சுவாமியும், அம்மனும் திருக்கோயிலுக்கு புறப்பாடாவர். திருக்கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் மற்றும் இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.