திருமலை ... அன்றில் இருந்து இன்று வரை...!

திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களுக்கு எளிதில் ஏழுமலையான் தரிசனம் வழங்க, தேவஸ்தான அதிகாரிகள் மேற்கொள்ளும் நடைமுறைகள்
திருமலை ... அன்றில் இருந்து இன்று வரை...!

திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களுக்கு எளிதில் ஏழுமலையான் தரிசனம் வழங்க, தேவஸ்தான அதிகாரிகள் மேற்கொள்ளும் நடைமுறைகள் அனைத்தும் பயனற்று போகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்திலிருந்த பக்தர்களின் வருகை, தற்போது லட்சத்தை நெருங்கி விட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு...!
1960: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, தினசரி ஆயிரத்தைத் தாண்டாது. 
கோடை விடுமுறையில், 3 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், வியாபாரிகளும் கோடை விடுமுறை முடிந்ததும் தங்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று விடுவர். 
பக்தர்கள் நேராக மகாதுவாரம் வழியாகச் சென்று, ஏழுமலையானை தரிசித்து வந்தனர்.
1970: படிப்படியாக உயர்ந்து நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர். மகாதுவாரத்தை தாண்டி, தரிசன வரிசை வெளியில் வந்தது. பக்தர்கள் காத்திருப்பதற்காக திருக்குளத்தருகில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.
1980 - 90: தினசரி 30 ஆயிரம் பேர் வரை வந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக வைகுண்டம் காத்திருப்புக் கூண்டு கட்டப்பட்டது. இந்த காலகட்டத்தில், தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தொடங்கியது.
2000: ஏழுமலையானைத் தரிசிப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 40 ஆயிரத்தை தாண்டியது. திருமலையில் வியாபாரம் அதிகரித்தது. காத்திருப்பு அறைகள் கட்டப்பட்டன. திருமலையில் வண்ண மலர் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
2010: திருமலைக்கு தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தொட்டது. அண்டை மாநில பக்தர்கள் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர். 
2017: தினசரி 70 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தற்போது ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனர். விசேஷ நாள்களில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுவது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த தூரம்
1994-ஆம் ஆண்டு வரை, குலசேகரப்படி (கருவறை முன் வாயில்) வரை சென்று ஏழுமலையானை பக்தர்கள் தரிசித்தனர். அங்கேயே பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி வழங்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டிலிருந்து, ராமுலவாரிமெட வரை (கருவறையிலிருந்து 45 அடி தூரம்) மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தால், குலசேகரப்படி வரை அனுமதிக்கப்பட்டனர். தீர்த்தம், சடாரி வெளியில் அளிக்கப் பட்டது.
2002-ஆம் ஆண்டு முதல், மகா லகு தரிசனம்(ஜெய விஜயர்கள் வாயில், 70 அடி தூரம்) அமல்படுத்தப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்தால், ராமுலவாரிமெட வரை அனுமதிக்கப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு பின், மகா லகு தரிசனம் நிரந்தரமாக்கப்பட்டது. அதனால், ஏழுமலையானைத் தரிசிக்க வசதியாக தங்க வாயில் அருகில், 3 தரிசன உயர் மேடைகள் அமைக்கப்பட்டன. 
தரிசன டிக்கெட்
1960-ஆம் ஆண்டில் தர்ம தரிசனம் மட்டுமே பின்பற்றப்பட்டது. 1965-ஆம் ஆண்டுக்கு பின்னர் தரிசன டிக்கெட் முறை அமலுக்கு வந்தது. அப்போது சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் ரூ. 25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது, ரூ. 50 ஆக உயர்ந்தது. வி.ஐ.பி.-களுக்காக ஏ.ஏ.டி ரூ. 200 டிக்கெட் மற்றும் செல்லார் எனப்படும் ரூ.100 டிக்கெட் அமல்படுத்தப் பட்டது. 
இடைத்தரகர்கள் அதிகரிப்பால், அனைத்து டிக்கெட்டையும் ரத்து செய்து ரூ. 300 விரைவு தரிசனம் அமல்படுத்தப் பட்டது. வி.ஐ.பி.-க்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 2006-ஆம் ஆண்டு முதல் பிரேக் தரிசன டிக்கெட் ரூ. 500 என்றும் அதை, எல்-1, எல்-2, எல்-3 என 3 பிரிவுகளாக தேவஸ்தானம் பிரித்தது. 
முன்னுரிமை தரிசனங்கள்
அதற்கு பின்னர், பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க, கைக்குழந்தைகளின் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம், திவ்ய தரிசனம் என பல தரிசனங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கென முதன்முதலில் நேர ஒதுக்கீடு முறையை தேவஸ்தானம் கொண்டு வந்தது. பின்னர், தர்ம தரிசன பக்தர்கள் வெகு நேரம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல், ஆக்சிஸ் கார்டு பெற்று வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட தரிசன நேரத்துக்கு செல்லும் முறை அமல்படுத்தப்பட்டது. 
நேர ஒதுக்கீடு
கோயில் கட்டட அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது, திருமலைக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்தக்கூடாது. 
ஆனால், திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மனம் குளிர தரிசனம் மட்டும் அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு தேவஸ்தானம் தள்ளப்பட்டது.
அதனால், தினசரி விரைவு தரிசனம் (20 ஆயிரம்), திவ்ய தரிசனம் (20 ஆயிரம்), தர்ம தரிசன (20 ஆயிரம்) பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது. அதன் பிறகு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர்கள், வி.ஐ.பி.க்கள் என மற்றொரு 20 ஆயிரம் என மொத்தம் 80 ஆயிரம் பேர் எளிதாக ஏழுமலையானைத் தரிசிக்க முடியும் என அதிகாரிகள் கருதினர்.
நோக்கம்...
திருமலைக்கு வரும் பக்தர்கள் குறித்த நேரத்துக்கு தரிசனத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. ஏழுமலையான் தரிசனம் என்றாலே, முன்னேற்பாடு அவசியம் என்ற எண்ணம், பக்தர்கள் மனதில் தோன்ற வேண்டும். அவ்வாறு நடந்தால், திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், எளிதாக ஏழுமலையானைத் தரிசிக்க முடியும். 
இன்னும், 20 ஆண்டுகளில் தினசரி, திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும் என கருதப்படுகிறது. எனவே, அதற்கேற்ற வகையில் தேவஸ்தானத்தின் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். 


ஆகம விதிக்கு முரணா?
திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும், கண்குளிர ஏழுமலையானை கண்டு தரிசிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துக்கும், ஆகம பண்டிதர்கள், பீடாதிபதிகள் மற்றும் சில பக்தர்கள் தடை விதித்து வருகின்றனர். தற்போது, கோயிலுக்குள் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் ஒரே வழியே நடைமுறையில் உள்ளது. அதனால், கோயிலுக்குள் செல்ல ஒரு வழி, வெளியில் வர வேறு வழி ஏற்படுத்த (மாதிரிப் படம்) தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கோயிலுக்குள் ராமுலவாரிமெட அருகில் உள்ள சுவற்றில் துளையிட்டு, வெளியே வரும் வகையில் வழி ஏற்படுத்துதல், வெள்ளி வாயிலின் இருபுறமும் நேத்ர வாயில் (உள்ளே செல்ல, வெளியில் வர) ஏற்பாடு செய்தல், தங்க வாயில் அருகில், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கன்வேயர் பெல்ட் ஏற்படுத்துதல், இறுதியாக தரிசனம் முடித்த பக்தர்கள், கோயிலை விட்டு வெளியில் வர இரும்புப் படிகள் அமைத்தல் போன்ற பல திட்டங்களை அதிகாரிகள் வகுத்தனர். ஆனால், அவை ஆகம விதிகளுக்கு முரணானவை எனக்கூறி தடுக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com